Friday, November 13, 2009

நான் எழுதிட்டேன்!

என்னையும் மதிச்சு ஒரு மனுஷன் ஒரு தொடர் பதிவுக்குக் கூப்பிட்டது கொஞ்சம் பெருமையாத் தாங்க இருக்கு. நன்றி கார்க்கி! கொஞ்சம் விருப்பு வெறுப்புகளைப் பற்றி சிந்திக்க வைத்ததால். என் மனதில் எனக்குத் தோன்றிய பிடித்த பிடிக்காத விஷயங்களைப் பதிவுகிறேன். (இதுக்கு என்ன அர்த்தம்னா, தயவு செய்து கும்மாதீங்க மக்கான்னு!)


1.அரசியல் தலைவர்


பிடித்தவர் : விஜயகாந்த் (அப்படியாவது படத்துல நடிப்பத நிறுத்துவார் என்ற நப்பாசையால்)


பிடிக்காதவர்: மு. அழகிரி


2.எழுத்தாளர்


பிடித்தவர் : சுஜாதா
பிடிக்காதவர்: பிடிக்காதவங்கள எதுக்கு படிக்கணும்? அதனால அப்படி யாரும் இல்ல.


3.கவிஞர்


பிடித்தவர் : வைரமுத்து


பிடிக்காதவர்: டி. ஆர் (இவரு கூட கவிஞர் தானுங்க!)


4.இயக்குனர்


பிடித்தவர்: மணிரத்னம்
பிடிக்காதவர்: பேரரசு


5.நடிகர்


பிடித்தவர்: எப்பவுமே சூப்பர் ஸ்டார்! சில வருடங்களாக சூர்யாவும்
பிடிக்காதவர்: அஜித்



6.நடிகை


பிடித்தவர்: ஜோ
பிடிக்காதவர்: த்ரிஷா



7.இசையமைப்பாளர்


பிடித்தவர் : .ஆர் ரெஹ்மான்
பிடிக்காதவர்: ஸ்ரீகாந்த் தேவா



8. தொழிலதிபர்


பிடித்தவர்: கலாநிதி மாறன்
பிடிக்காதவர்: இந்த தொடர் பதிவிற்கு அழைத்தவர்!



9. ஊர்க்காரங்க
பிடித்தவர் :சென்னைக்காரங்க
பிடிக்காதவர்: அப்படி சொல்லுமளவுக்கு தமிழகத்தில் யாரும் இல்லை.



10. சின்னத்திரை நட்சத்திரம்
பிடித்தவர் : "அன்புள்ள சிநேகிதி"யால் அனுஹாசன்


பிடிக்காதவர்: நளினி


Thursday, October 8, 2009

என்னவருக்காக...

ஆரியம் திராவிடம் என்ற வேறுபாடுகளைக் கடந்து சில விஷயங்கள் என்னை வெகுவாக ஈர்ப்பதுண்டு. அப்படிப்பட்ட ஒன்று தான் "கர்வா சௌத்" விரதமும் கூட. திருமணம் முடிந்த பெண்கள், திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள் என அவரவர் தத்தம் கணவருக்காக காலை முதல் கடும்விரதம் மேற்கொண்டு மாலையில் நிலவினை சல்லடை கொண்டு பார்த்து, பிறகு அவர்களின் கணவரைப் பார்த்து விரதத்தை முடிப்பர். கடும்விரதம் என்பது, தண்ணீர் கூட அருந்தாமல்! DDLJ, 7G ரெயின்போ காலனி போன்ற திரைப்படங்களில் இந்த விரதம் பற்றி பார்த்த பொழுதே இதன் மீது ஒரு பற்று ஏற்பட, கல்லூரியில் உடன்பயின்ற வட இந்தியப் பெண் அவளது ஏழாம் வயது முதலே இந்த விரதத்தை மேற்கொள்வதாகச் சொல்ல, கல்லூரி முடித்த ஆண்டிலிருந்து இந்த விரதத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

நாம் உண்ணும் உணவில் இருக்கும் glucose-இல் ஒரு பங்கு நமதுடலில் glycogen-ஆக சேமித்து வைக்கப்படும். அது விரதம் மேற்கொள்ளும் நேரங்களிலும், உடல் நிலை சரியில்லாத நேரங்களிலும் glucose-ஆக மாற்றப்பட்டு, உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும். ஆனால் அந்த glycogen-ஐ glucose-ஆக மாற்ற தண்ணீர் தேவை. அதனால் தான் விரதமிருப்போரை அதிகமாகத் தண்ணீர் பருக வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் தண்ணீர் கூட பருகாமல் இருப்பதால், இந்த விரதத்தின் போது மிகுந்த அயர்வு ஏற்படும். இவ்விதமான அயர்வுகளில் மேலும் உடல் தளர்ந்து போகாமலிருக்க, பெண்களின் மன நிலையைச் சீராக்க, மருதாணி அணிதல் நல்லது என்ற பழக்கத்தையும் ஏற்படுத்தினர். மருத்துவ ரீதியாக, மருதாணியின் குளுமை உடல் சூட்டைத் தணிக்க வல்லது. கர்வா சௌத் விரதம் மேற்கொள்ளும் போது கையில் மருதாணி இட்டுக் கொண்டால் நல்லது என்று கூறுவது இதற்குத் தான்.

கர்வா சௌத் விரதம் மேற்கொள்வது ஒரு பெரிய விஷயம் என்றால், கர்வா சௌத் தினத்தில் நிலவைப் பார்ப்பதென்பது பகீரதத் தவம்! சாதாரண நாட்களில் மாலை ஏழு மணிக்கெல்லாம் குளிர் முகம் காட்டும் நிலவு, இரவு பத்து மணியான போதும் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க இயலாத வண்ணம் மேகங்களுக்கிடையே சென்று ஒளிந்து கொள்ளும்; நம்மையும் கொல்லும்! போதாக் குறைக்கு அன்று தான் அளவுக்கு அதிகமாக மேக மூட்டம் காணப்படும். இந்த நான்கு ஆண்டுகளில் பதினோர் மணிக்குக் குறைந்து ஒரு முறை கூட நிலவைப் பார்த்ததில்லை நான். நேற்று தான் புதிய சாதனை. இரவு 10.45 மணிக்கு அருள் புரிந்ததெனக்கு.

இன்று காலையில் அலுவலகம் வந்த பின்பு, அனைவரின் கவனமும் என் மீது தான். காரணம் உடல் நிலை சரியில்லாமல் போக, குறைந்தது ஆறு மாத காலத்திற்கு விரதம் ஏதும் இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் வலியுறுத்தியும், நேற்று நான் இந்த விரதத்தை மேற்கொண்டேன். பயணத்தின் போது அயர்வு ஏற்படலாம் என்று விடுப்பு எடுத்து வீட்டிலிருந்துவிட்டேன். இன்று அனைவரும் கேட்ட கேள்வி, "நிலவைப் பாத்துட்டு யாரப் பாத்த?" என்று. அனைவருக்கும் ஒரு புன்னகையால் பதிலளித்துவிட்டு இருக்கைக்கு வந்தேன்.

என்னவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்த பிறகு தான் அவருக்காக நான் விரதங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பிறர் கூறுவதில் எனக்குக் கொஞ்சமும் கூட உடன்பாடில்லை. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விட இது அரசியல் இல்லையே. எனக்காக வரவிருப்பவர் இன்னார், இத்தகைய குணமுடையவர் என்றெல்லாம் தெரிந்த பிறகு அவர் மீது வைக்கும் பாசம் நேசமும் அவ்வளவு உண்மையானதாக இருக்குமா என்று தெரியவில்லை எனக்கு. அதனால், அவர் இன்னார் என்று தெரியும் முன்னமே அவரை நேசிக்கத் துவங்கிவிட்டேன், அவர் எனக்கான என்னவர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும்! இதைத்தவிர திடமான உண்மை வேறேதும் தேவையில்லை என்பதாலும். என்னவர் எங்கிருந்த போதிலும், அவரிடம் சொல்ல விழையும் செய்தி ஒன்று மட்டும் தான்...

காதலிக்கிறேன்! Truly, madly, deeply!!! :-)

Saturday, October 3, 2009

நான் வந்துட்டேன்!

எனக்குப் புகழ்ச்சி பிடிக்காதுன்னு சொன்னா, கேட்டா தானே? கடைசியா எழுதின பதிவப் படிச்சிட்டு இந்த கார்க்கி சும்மா போகாம, தேவையில்லாத விளம்பரம் பண்ண, ஊர்க் கண்ணு பட்டு பிள்ளைக்கு உடம்பு சரியில்லாமா போயிட்டு (யாரு அந்தப் புள்ளன்னு கேட்க்கக் கூடாது சொல்லிட்டேன்!). இதுக்கு மேல நான் பதிவே போடக் கூடாதென்று இப்படி ஒரு கொலை வெறியானு தெரியல! வெறும் காய்ச்சல் என்று விடுப்பு எடுத்து, எங்க பிரம்மாண்ட ஊரில் ஒரு மருத்துவமனையைத் தேடிப் பிடிச்சு போனா, அந்த டாக்டரைப் பார்த்ததும், எனக்கு நம்பிக்கையே போச்சு. ஏதோ நான் வந்து மருத்துவம் பாத்து அவங்கள சுகமாக்குவேன்னு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்த மாதிரி ஒரு முக பாவனை, உடல் வாகு சொல்லவே வேணாம்! தெர்மாமீட்டர் கூட உபயோகிக்காமல், வெறும் நாடி பிடிச்சு பாத்தாங்க. ஒரு நிமிஷம் பயந்தேப் போயிட்டேன், விபரீதமா ஏதும் சொல்லிடுவாங்களோன்னு தான்! தெய்வாதீனமாக ஏதும் சொல்லாமல், விறு விறுவென்று மருந்துகளின் பெயர்களை எழுதித் தந்தார். அவரின் பெயருக்குப் பின் நீண்டதொரு பட்டியல் இருந்தது. (அம்புட்டு படிசிருக்குங்கா போல!)

அடுத்த நாள் மாலை வரையிலும் காய்ச்சல் குறையாமல் போக, வேறு வழியின்றி அப்பாவை அழைத்துக் கொண்டு அயனாவரம் சென்றேன், வழக்கமாக பார்க்கும் மருத்துவரிடம் பரிசோதனைக்காக. என்னைப் பார்த்ததும், புருவங்களை உயர்த்தி, "என்னடீ இங்கயே திரும்ப வந்தாச்சா?" என்றார் சிரித்தபடியே. "இல்லைங்க ஆன்டி, காய்ச்சல்" என்றேன். அந்த மருத்துவர் எழுதித் தந்த மருந்துச்சீட்டை அவரிடம் காட்ட, "எதுக்கு பேரசிடமால் மாத்திரையே ரெண்டு? என்று புரியாமல் வினவினார். "உங்களுக்கேத் தெரியலனா, எனக்கு எப்படி ஆன்டி தெரியும்" என்று காய்ச்சலிலும் அவரை வம்பிழுக்காமல் இருக்க முடியவில்லை. மூன்று நாட்களுக்கு மருந்துகளை எழுதிக் கொடுத்து, "பன்றிக் காய்ச்சல் எல்லாம் இல்லடீ, பயப்படாத" என்றார் சிரித்துக் கொண்டே. நானும் பதிலுக்கு, "தெரியும் ஆன்டி, அது மனுஷங்களுக்கு தான் வரும்னு சொன்னாங்க, அதனால எனக்குக் கொஞ்சம் கூட பயமில்ல" என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

மூன்று நாட்கள் முடிந்தும் காய்ச்சல் குறையாமல் போக, இரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார்கள். அடுத்த கட்ட சோதனை. ஒரு பெரிய ஊசியில் ரத்தத்தை எடுத்து, நான்கு குழாய்களில் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தார் அந்தப் பரிசோதகர். வந்த கோபத்திற்கு அந்த மனுஷனைக் கொன்று போடத் தோன்றியது எனக்கு. அடுத்த நாள் முடிவுகள் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். மறுநாள் வந்ததெனக்கு அந்தக் கெட்ட செய்தி. டைபாய்டு காய்ச்சல் என்றும், உடலில் அதனளவு அதிகமாய் இருத்தினால் மூன்று நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது நல்லதென்றும் சொன்னார் மருத்துவர்! அன்று அமாவாசைக்கு முதல் நாள் என்பதால், அம்மா அமாவாசை அன்று மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தார். அந்த ஒரு நாள் முழுதும் எனக்கு தூக்கம் வரவேயில்லை. வீட்டிலேயே இருக்கிறேன் என்று எவ்வளவு போராடியும், யாரும் கேட்பதாய் இல்லை. என்னை முழு மூச்சாக ஒரு நோயாளி ஆக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தார்கள்.

மறுநாள் அண்ணா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னை அறைக்கு அழைத்துச் சென்ற செவிலியர், என்னுடன் வரும் போதே தேவையான ஊசிகளையும் மருந்துகளையும் எடுத்துக் கொண்டார். அது அனைத்தையும் விட என்னை அலறச் செய்தது Venflon தான்! கையில் ஏதோ ஒரு குழாயைப் போடுவதைப் போல் சர்வசாதாரணமாக அதில் ஒவ்வொரு மருந்தாகச் செலுத்தத் தொடங்கினார்கள். அப்பாவை வீட்டிற்குப் போகும்படி சொல்லிவிட்டு, மாலை வரைத் தனியாய் இருந்தேன். பிறகு மூன்று நாட்கள் கட்டாயம் இருந்தாக வேண்டும் என்று அங்கும் சொல்ல, வேறு வழியின்றி மூன்று நாட்கள் நானும் நோயாளியானேன்!!!



மூன்று நாட்களில், இரண்டு பாட்டில் ட்ரிப், இருபது ஊசிகள், நாற்பது மாத்திரைகள் என்று படாத பாடுபட்டுப் போனேன். போதாக் குறைக்கு, இடது கை வீக்கம் கொள்ள, அதிலிருந்த Venflon-ஐ எடுத்துவிட்டு, வலது கையில் வேறொரு புது Venflon போடப்பட்டது. குண்டூசி குத்தி ரத்தம் வந்தாலே ஒரு பெரிய ஒப்பாரி வைத்து, மூன்று நாட்களுக்கு மருந்து வைத்துக் கட்டும் தைரியசாலிப் பெண் நான். இந்த அழகில் இரண்டு கையும் Venflon-ஆல் பதம் பார்க்கப்பட்ட போதும் கொஞ்சம் கூட கண்ணீர் வரவில்லை. (ஒரு வேளை, அம்மா சொல்ற மாதிரி நான் வளந்துட்டேனோ???) இந்த இம்சைகளை எல்லாம் விட பெரிய கொடுமையொன்று எனக்காகக் காத்திருந்தது. மருத்துவமனையிலிருந்து செல்லும் முன், ஒரு பெரிய NO பட்டியலிட்டார் மருத்துவர். அதிலிருந்த அனைத்தும் நான் விரும்பி உண்ணும் விஷயங்கள் மட்டும். ஆகா, அஸ்திபாரம் ஆட்டம் கொண்டது! உடல் நலம் விசாரிக்கும் அனைவரிடமும் சொன்ன ஒரே விஷயம், "My life is not gonna be spicy for the next six months :-(" என்று.

காய்ச்சல் ஆரம்பித்த பதினைந்து நாட்கள் முடிந்ததுமே வேலையில் சேர்ந்து விட்டேன். உடலில் கொஞ்சம் கூட தெம்பிருக்கவில்லை. எங்கேனும் விழுந்து விடுவேன் போல் தோன்ற, வழி நெடுக பிரார்த்தனைகளோடு தொடர்ந்தேன் என் பயணத்தை. மனதில் மட்டும் தெம்பு குறையாமலிருக்க ஒரு வழியாக அலுவலகம் சேர்ந்தேன். என் உடல் நலன் மேல் அக்கறை கொண்டு, கிளை அலுவலகத்திற்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். இதோ, ஒரு மாத காலமாக, எங்களின் தலைமை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். உடல் நிலை கொஞ்சம் தேறினாலும், உணவுப் பழக்கங்களில் பெரிதாய் ஒரு மாற்றமும் இல்லை. இப்படிக் கடும் பத்தியம் இருந்தும் கூட ஒரு அங்குலம் கூட குறையவில்லை உடல் மட்டும். என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் கேட்கும் ஒரே கேள்வி, "டைபாய்டு வந்தா எல்லாரும் மெலிஞ்சுடுவாங்கனு சொல்வாங்க? உன்னப் பாத்தா அப்படி தெரியலியே?" என்று எல்லாரும் கேட்க, மிகுந்தக் கடுப்போடு இருக்கிறேன்.

இப்போதைக்கு எனக்கிருக்கும் ஒரே ஆறுதல், ரயில் பயணங்கள் மட்டும் தான். ஆமாம், இப்பொழுதெல்லாம் மூன்று பேருந்துகள் மாறி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. வீட்டின் அருகிலேயே ரயில் நிலையம் இருப்பதால், இப்பொழுது பயணங்களில் அயர்வு ஏற்படுவதில்லை. மட்டுமலாமல், உடன் பணிபுரிவோரில் இருவர் துணை வேறு! எங்கும் வாயோயாமல் பேசியபடியே செல்வதால், கொஞ்சம் தெம்பு கூடிவிட்டது உடலில். இருக்காத பின்ன, சாப்பாடு இல்லாமல் கூட உயிர் வாழ்ந்திடுவேன், பேசமாலிருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். நல்ல விஷயமாக பிற மொழிகள் பேசக் கற்றுக் கொள்ளத் துவங்கியுள்ளேன். தேசிய மொழி தான் முதல் பலியாடு! அதற்காகப் பதிவெழுதுவதை நிறுத்தி விட்டு, உங்களையெல்லாம் நிம்மதியாக வாழ விடுவேன் என்ற பேராசை வேண்டாம். ரயில் பயணங்களில் பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகிறேன்.

பி. கு: தமிழ் இனி மெல்லச் சாகும்! :-)

Thursday, June 25, 2009

லேடிஸ் சீட்

'மேலை நாடுகளில் பேருந்துகளில் ஆண் பெண் என்று தனியே இருக்கைகள் ஏதும் கிடையாது. ஆயினும் அங்கே பெண்களுக்கு இருக்கை இல்லாமல் போகும் பட்சத்தில் ஆண்கள் தங்களது இருக்கையைத் தாமாகவே முன்வந்து பெண்களுக்கு அளிப்பர்' என்று யாரோ என் பிஞ்சு மனசுல நஞ்சக் கலந்து விட்டுட்டாங்க குழந்தைப் பருவத்துல. அந்த விஷயம் உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது, ஆனால் அப்படியிருத்தல் நலம் என்பது மனதின் எண்ணம்.

நம்ம சிங்காரச் சென்னையில் கூட, பேருந்து இருக்கைகளுக்கு மேல் 'பெண்கள்' என்று எழுதப்படிருக்குமே தவிர, 'ஆண்கள்' என்று எங்கும் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. பெண்களுக்கும், ஊனமுற்றோர் முதியோர் ஆகியோருக்கு மட்டும் தான் தனித்து எழுதப்பட்டிருக்கும். ஆக, இவ்வாறு குறிக்கப்பட்டுள்ள இருக்கைகள் தவிர மற்றவை எல்லாம் பொதுவானவை என்று தானே பொருள் கொள்ள வேண்டும்? ஆனால், பொதுவான இருக்கைகள் யாவும் ஆண்கள் இருக்கைகள் என்று எழுதாச் சட்டமாகவே இருந்து வருகின்றது நம் ஊரில்.

குறைந்தது ஏழு பேர் அமரக் கூடிய கடைசி இருக்கையின் மேலே 'பெண்கள்' என்று எழுதப்பட்டிருந்தாலும் கூட, அங்கே அமரும் ஆண்களுக்கு அதைப் படித்தறியும் அளவுக்கு எழுத்தறிவில்லை போலும் என்று தோன்றும் பல நேரங்களில் எனக்கு. அவர்களுக்கு எழுத்தறிவித்து இறைவன் ஆவோம் என்று பல நேரங்களில் முயன்று, வெற்றியும் பெற்றுள்ளேன் என்பது தனிக்கதை. அதை இங்கு அலசப் போவதில்லை.கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கும் ஆண்களில் பலர் பெண்கள் பேருந்தினுள் ஏறுவதைக் கண்டவுடனே எழுந்து அவர்களுக்கு இடமளிப்பதைக் கண்டிருக்கிறேன். இன்னமும் மனிதம் செத்துப் போகவில்லை என்று மனதினுள்ளே மக்திழ்ந்தும் உள்ளேன்.

சிலர் மட்டும் ஏனோ மக்களின் மத்தியில் மாக்களாகவே வாழ விழைகின்றனர். பெண்களைக் கண்டதும் அத்தனை நேரம் விழிதிருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்குப் போவதும், திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போவதும் தினம் காண்கின்ற அற்பக் காட்சிகள்! "காசு குடுத்து டிக்கட் வாங்கியிருக்கேன், என்னால எழுந்துக்க முடியாது" என்றெல்லாம் வீர வசனம் பேசும் 'கெட்ட' பொம்மர்கள் பலர் உண்டு. ஆண்களை மட்டும் குறை கூறிப் பயனில்லை. நம் பெண்களும் கூட கொஞ்சம் கூட யோசிக்காமல், "அவருக்கு உடம்பு சரியில்லைம்மா" எனும் போது, உதடுகள் துடிக்கும் "அப்போ நீங்க உங்க இடத்தை அவருக்குக் குடுக்க வேண்டியது தானே" என்று கேட்க. "ஆம்புளைங்க சீட்ல நீங்க மட்டும் உக்காருறீங்க? அப்போ நாங்க என்ன உங்கள எழுந்திருக்கவா சொல்றோம்?" என்று ஒரு அறிவுப்பூர்வமான(?) கேள்வி வேறு வரும் பல தருணங்களில்.

இத்தனைக் குமுறல் எதற்கு என்று நீங்கள் முகம் சுளிப்பது புரிகின்றது! எல்லாம் சோக ராகம் தான். தினமும் காலையில் மூன்று அல்லது நான்கு பேருந்துகள் மாறி தான் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் நான். இன்று காலை ஏறிய முதல் பேருந்தில் கூட்ட நெரிசல் அவ்வளவாக இல்லை என்ற போதும் இருக்கைகள் ஏதும் இல்லை. என்னருகே ஒரு வயதான பெண்மணியும் ஏற, பெண்கள் இருக்கையில் அமர்ந்திருந்த இரு ஆண்களைப் பார்த்து "ladies seat" என்று சொன்னதற்கு, நான் ஏதோ புரியாத பாஷையில் பேசியது போல் முகத்தை வைத்தனர் இருவரும். "இது லேடிஸ் சீட், கொஞ்சம் எழுந்துக்குறீங்களா?" என்று கேட்ட பிறகும் அதே குழப்பப் பார்வை.

இவர்களிடம் பேசி அர்த்தமில்லை என்றுணர்ந்து, சற்று தள்ளி நின்று கொண்டேன். அந்த வயதான பெண்மணி, "கொஞ்சம் எழுந்துக்கோயேன்பா, வயசானவங்க நிக்குறோம்ல?அந்தப் பொண்ணு கூட சொல்லுச்சுலப்பா?" என்றதும், "இப்படிப் பணிவாச் சொன்னா எழுந்துக்கப் போறோம், அத விட்டுட்டு?" என்றதும் எனக்கு வந்தது கோபம்! எனது உரிமையை நான் பெற இவர்களிடம் நான் எதற்குப் பணிந்து போக வேண்டும்? வந்த கோபத்தையெல்லாம் எனக்குள்ளயே மறைத்து விட்டு, பேருந்தின் முதல் இருக்கையை நோக்கி நகர்ந்து விட்டேன். என்ன செய்றது, "துஷ்டனைக் கண்டால் தூர விலகு" அப்படினும் சொல்லிக் குடுத்து வெச்சிருக்காங்களே!

பி. கு: திரைப்படம் ஒன்றில் வரும் வசனம் தான், இருப்பினும் என்னை மிகவும் ஈர்த்த வசனங்களில் ஒன்றிது: "Just because you are strong, you cant use force!"

Wednesday, June 17, 2009

எங்கிருந்து வந்தாயடா?



ஏதும் உறவில்லை என்ற போதும்
ஏதோ உவகை என்னுள் உன்னால்
உந்தன் பாதங்கள் மண்ணை முத்தமிட்டது
என்றறிந்ததும் என் மனதில்
மகிழ்ச்சி வெள்ளக் காடு!
மண்ணை முத்தமிட்ட உன் மலர்ப் பாதங்கள்
இன்று நிமிர்ந்து நிற்கவும்,
தத்தை நடை பயிலவும்
இதோ ஓராண்டு இன்றோடு இனிதே நிறைவுறுகிறது!
வாழ்வில் இது போல்
இன்னும் பல ஆண்டுகள் நீ
வளம் பல பெற்று வாழ்ந்திட
இறையருள் வேண்டுகிறேன்!

ஏதும் உறவில்லை என்ற போதும்
ஏதோ உவகை என்னுள் உன்னால்!
எங்கிருந்து வந்தாயடா?


பி. கு 1: எனது "குட்டி நண்பன்" அனீஷ் - இன் பிறந்த நாள் இன்று. அவருக்காக தான் இந்த குட்டிக் கவிதை.


பி. கு 2: நம்ம கண்ட நாள் முதலாய் Truth அவர்களுக்கும் கூட இன்னைக்கு தான் பிறந்தநாள்.. அவரையும் வாழ்த்தலாம் வாங்க...

Thursday, June 4, 2009

இப்படிக்கு நான்

உன் கருவறையில் சற்று கடுந்தவம் புரிந்ததாலோ என்னவோ, உன்னோடான எனதிணைப்பு இன்னமும் கூட குறையவில்லை எனக்கு. "அம்மா" என்றுன்னை கடைசியாக அழைத்தது எப்போதென்று நினைவில் இல்லை, உன்னை உரிமையோடு "மலர்" என்று உன் பெயரிட்டே அழைக்கும் பழக்கம் பல வருடங்களாக இருப்பதால். "நீ, வா, போ" என்று உன்னோடு பேசும் போது நான் உன்னிடம் உணரும் நெருக்கத்தை "நீங்க வாங்க" என்று அக்கா அழைக்கும் போது உணருகின்றாளா என்ற கேள்வி இப்போதும் என்னுள் விடையில்லாமலே முடங்கிக் கொண்டிருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை மீதே அதிகப்பாசம் என்ற எழுதா நியதி என்னிடம் மட்டும் வேறுபட்டது ஏன் என்று விளங்காமலே வளர்ந்து விட்டேன் நான். அதற்காக வருத்தம் இருந்தாலும், பெரிதாக இல்லை. நான் "அம்மா பொண்ணு" என்று சொல்வதில் கொஞ்சம் பெருமை கூட உண்டெனக்கு.

சென்ற மாதம் உலகிலுள்ள அனைவரும் தத்தம் அன்னையருக்குப் பரிசுகளையும் வாழ்த்துகளையும் வழங்கிக் கொண்டிருந்த நாளில், நீ என்னிடமிருந்து பெற்றது வெறும் வசைகளை மட்டும் தான். தண்ணீர் அருந்த மட்டுமே சமையலறைப் பக்கம் எட்டிப்பார்ப்பவளை, வீட்டின் முழுநேரப் பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ளும்படியும், இலவச இணைப்பாக அப்பாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பையும் பனம்பழமாய் இந்தக் குட்டிக் குருவியின் தலையில் நீ வைத்துச் சென்றதில் தான் அவ்வளவு கோபமும் என்று நீ நினைத்திருக்க மாட்டாய் என்பது தெரியும் எனக்கு. அர்த்தமற்ற கோபத்திற்கு உன் மீது வைத்த அளவு கடந்த பிரியம் மட்டுமே காரணம் என்பதை உனக்குச் சொல்லி விளங்க வைக்கத் தேவையில்லை என்பதையும் நன்கறிவேன்.

நீ ஊருக்கு சென்ற மறுநாள், பொழுது விடிந்தும், தினமும் கண் விழிப்பது உன் முகத்தில் தான் என்பதால், எனக்கு மட்டும் விடியவில்லை. கண்களின் பனித் துளிகளோடு விடிந்தது எனது பொழுது. நம் வீட்டு வாசலில் நான் முதன் முறையாக போட்ட கோலத்தின் கோலத்தை ரசிக்க நீயில்லை வீட்டில். அப்பா வாசலுக்கு வந்தும், எனது கோலம் அவரது கவனத்தை ஈர்க்கவில்லை! அவரைச் சொல்லியும் குற்றமில்லை, வாசலில் நான் கோலம் போட்டேன் என்பதை அவர் அறிந்ததே மறுநாள் காலையில் தான். இட்லியும் கோழிக் குழம்பும் மணந்தால் மட்டுமே நம் வீட்டில் ஞாயிறு அன்று ஞாயிறு புலரும் என்பதால், அப்பாவை இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு இட்லி சாப்பிட வரும்படி அழைத்தேன். வெறும் தண்ணீரைக் கூட ரசித்துக் குடிக்கும் அப்பா, குழம்பின் ருசி 'அருமை' என்று சான்றிதழ் அளிக்கவும் செய்தார். ஆனாலும் அந்தக் குழம்பை ரசிக்க நீயில்லை வீட்டில். இன்னும் பல அரிய செயல்களை நான் செய்திட்ட போதிலும், அதனழகை ரசிக்க நீயில்லை வீட்டில்.

இதோ இப்பொழுது, எனது முறை. உன்னைத் தனியே விட்டு, வெளியூர் செல்லப் போகிறேன். நீ எனக்கு விதித்த அதே மூன்று நாள் 'தண்டனை'. தண்டனை ஏனோ உன்னை விட என்னையே அதிகமாய் பாதிப்பதாய் என்னுள் ஒரு உணர்வு. ஊரிலிருந்து நீ திரும்பி வந்த அன்று, தூங்கிக் கொண்டிருந்த எனது தலை முடியை வருடிய சுகம் போதும். அந்த சுகம் நிதம் கிடைக்க, நீ வாரம் ஒரு முறை எங்கேனும் உறவினர் வீட்டிற்குப் போய் வர எனது மனப்பூர்வமான சம்மதங்கள்! நான் திரும்பி வந்ததும் அந்தப் பாசம் கலந்த கேசம் கோதுதல் கிடைக்கப் போகும் சந்தோஷத்தில் எனது பயணத்தைத் துவங்குகிறேன்.

Monday, April 6, 2009

அவள் அவன் அது

அவள்
"நீரின்றி அமையாது உலகு" போல், "பேச்சின்றி அமையாது வாழ்வு" என்று வாயோயாமல் பேசுபவள் அவள். திங்கட்கிழமை காலையிலும் கூட உற்சாகத்தோடு இயங்கும் புத்துணர்ச்சிச் சிட்டெறும்பு அவள். 'நம் எண்ணங்களே நம் வாழ்விற்கு வழிவகுக்கும்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டவள். எத்தனைக் காதுகளில் இரத்தம் வழிந்தாலும், குளியலறையில் பாடுவதைத் தன் பிறப்புரிமையாகக் கொண்டவள். 'கட்டுப்பாடு' அவளுக்குப் பிரதான எதிரி! அடிமைக் கோலம் பிடிக்காத பட்டாம்பூச்சி. 'காதலாய்க் கசிந்துருகிட வேண்டும்' என்று தனக்கென்று ஒருவனைத் தேடும் வயது அவளுக்கு. சுருக்கமாக, அவள் "கனாக்களின் காதலி".

அவன்
தேவையற்ற செலவுகள் ஏதும் செய்யத் தெரியாதவன் அவன், வார்த்தைகள் உட்பட. மரத்தைச் சுற்றி வந்து, கவிதை வரிகள் பேசி, காதலிப்பதில் உடன்பாடில்லை அவனுக்கு. மணம் முடிக்கும் மங்கையைக் காலப்போக்கில் காதலிப்பதே சுவாரசியாமாகத் தோன்றியது அவனுக்கு. எதிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்பது அவனது எழுதாச் சட்டம். இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்வு, சலிப்பைத் தந்து விடும் என்பதை நன்குணர்ந்தவன். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் மிகுந்தவன். நாளைய பொழுது நன்றாய் விடிய வேண்டுமே என்று புலம்புவோர் மத்தியில், நாளையை பொழுது நன்றாய் விடிய வேண்டுவனவற்றை ஆராய்பவன். மொத்தத்தில், அவன் ஒரு "யதார்த்தவாதி".

அது
அவளுக்கும் அவனுக்கும் இடையே எதிர்பாராவிதமாய் அறிமுகம் ஏற்பட்டு, அந்த அறிமுகம் நட்பாக வளர்ந்தது. இருவருமே நினைத்தும் கூட பார்க்காத விதத்தில், குறுகிய காலகட்டத்திலேயே நட்பு வலுவடைந்து விருட்சமானது. அவளின் வருகையால் அவனது வாழ்வின் 'யதார்த்தம்' சற்று நிலை தடுமாறியது என்பது மறுக்க முடியாத உண்மை. அவனின் அறிமுகம் கிடைத்த நாள் முதல், அவள் கனவுலகிலிருந்து கொஞ்சம் விலகி, இயல்பு நிலையில் வாழத் துவங்கினாள் என்பது மற்றொரு உண்மை. இப்படி, காலப்போக்கில் ஒருவரது குணாதிசயங்கள் மற்றவரைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், ஆட்கொள்ளவும் செய்தது.

ஓர் ஆணும் பெண்ணும் வெறும் நட்பு ரீதியில் மட்டுமே நெருங்கிப் பழக முடியும் என்ற சாத்தியக்கூறு, நமது சமூகத்தில் நடைமுறை வாழ்விற்கு ஒவ்வாத ஒன்றாக இருந்து வருகின்றது. பரஸ்பரம் நட்பு மட்டுமே கொண்டு காலத்திற்கும் ஆண் - பெண் உறவு தொடரலாம் என்பதை ஏற்றுக் கொள்ள சமுதாயமும் சரி, தனி மனித மனமும் சரி, இன்னும் அத்தனை பக்குவம் அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இத்தகைய 'சமூகக் கோட்பாடுகளில்' வேரூன்றி வளர்க்கப்பட்டவள் அவள் என்பதால், அவர்களுக்கிடையே மலர்ந்த நட்பினை வெறும் நட்பாக மட்டும் கருத முடியவில்லை அவளால்.

மனிதனின் பரிணாம வளர்ச்சியின் முக்கியக் கட்டமாக, காதல் மலர்வதைக் கண்டவள் அவளென்பதால், காதல் தவறென்று ஒதுக்க முடியவில்லை அவளால். நட்பிற்கும் காதலுக்கும் இடையே இருக்கும் மெல்லிய வித்தியாசத்தைக் கருத்தில் கொண்டு, பூதக்கண்ணாடி வைத்துத் தேடியும் அவர்கள் உறவில் அந்த மயிரிழை வித்தியாசம் அகப்படாமல் போக, காதல் மலர்ந்ததை உறுதி செய்து கொண்டாள். பூனைக்கு மணி கட்ட யாரும் தேவை என்று தயக்கம் கொள்ளாமல், தனது கைபேசியில் அவனது எண்ணைச் சுழற்றி, தன் மனதில் நீங்காது சுழன்று கொண்டிருந்த அவனது நினைவுகளைச் சொன்னாள்.

தன்னை மட்டுமே குறிவைத்துப் படையெடுப்பு நடத்திய பட்டாம்பூச்சிக் கூட்டம், அவனையும் போர் முனையில் நிறுத்தியதா என்ற கேள்வியும், நிறுத்தியிருக்க வேண்டுமே என்ற ஏக்கமும் அவளுள் படபடப்பை ஏற்படுத்தினாலும், அவளது வார்த்தைகள் மட்டும் பல்லாயிரம் மைல்களைக் கடந்தும் அவனைச் சரிவரச் சென்றடைந்தன. அவன் இயற்பியல் படித்தவன் என்பதால் தெய்வாதீனமாக அங்கு 'நியூட்டனின் மூன்றாம் விதி" வெளிப்பட்டது. மனதின் பெரும்பாரம் இறக்கி வைக்கப்பட்ட நிலையில், நிம்மதிப் பெருமூச்சு அவனிடம். காதலுக்காக நட்பையிழக்க விழையாதிருந்தவனுக்கு, அந்த நட்பே உவந்தளித்த பரிசாய், அங்கு காதல் கனிந்தது. முன்னுக்குப் பின் முரணான குணாதிசயங்கள் கொண்டவர்களாய் அவ்விருவரும் இருந்த போதும், அது அவர்களை இணைத்தது.

Thursday, March 19, 2009

ஒரு தாயின் கல்லூரிக் கனவு

"அம்மா, 5 மணிக்கு புரோகிராம் தொடங்கிடுவாங்க, சீக்கிரம் வந்துடுங்க, இல்லைனா பின்னாடி தான் உட்கார இடம் கிடைக்கும்" என்று சொல்லிக் கொண்டே, காலணியை மாட்டிக் கொண்டிருந்தாள் சௌமியா. "அக்கா எப்போ வருவா? அவளையும் கரெக்ட் டைம்க்கு வந்துட சொல்லுங்க, நான் கெளம்பறேன்" என்று காலில் சக்கரம் கட்டாத குறையாய் பறந்தாள். இன்று தான் அவளை எல்.கே.ஜி. சேர்க்க, பள்ளியில் சென்று விட்டு வந்தார் போல் தோன்றுகிறது, அதற்குள் கல்லூரி முடித்து, இதோ இன்று பட்டம் பெறுகிறாள்.


குடும்ப சூழ்நிலைகள் காரணமாக, படிக்கும் ஆர்வமிருந்தும் கல்வியைத் தொடர முடியாமல் போனதால், தன் குழந்தைகளையாகிலும் நன்கு படிக்கவைக்க வேண்டுமென்ற ஆர்வம் சௌமியாவின் பெற்றோர் இருவருக்குமே இருந்தது. மூத்த மகள் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், அவளைக் கல்லூரிக்கு அனுப்புவது அவர்களுக்கு பெரும்பாடாய்ப் போனது. கல்லூரியில் சென்று படித்தால் தான் கொஞ்சமாகிலும் அவளுக்கு உலக ஞானம் வரும் என்பதால், அவளை மிகவும் கட்டாயப்படுத்தி தான் கல்லூரியில் சேர்த்தனர். கல்லூரியில் சேர்ந்த பிறகு அவள் கொஞ்சம் பக்குவப்படத் தொடங்கினாள் என்பதும் அவர்கள் எதிர்பார்த்தபடியே நடந்தது.


தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கல்லூரி மாணவர்களுக்கான பாட்டுப் போட்டி நடந்து கொண்டிருக்க, மகள்களின் கல்லூரி மாணவிகள் பாடி முடித்ததும், "அருமையா பாடினாங்க இல்ல?" என்றால் சௌமியாவின் தாய். அவளை வம்பிற்க்கிழுப்பது என்ற முடிவிலிருந்த சௌமியா, "இல்லம்மா, எங்க காலேஜ் செம்ம சொதப்பல், நீ வேணும்னா பாரேன், கண்டிப்பா தோற்க போறாங்க" என்று சொல்ல, "இல்ல இல்ல, உங்க காலேஜ் தான் கண்டிப்பா ஜெயிக்கும் பாரு" என்றாள். "அந்தக் காலேஜ்ல படிச்ச எங்களைவிட உங்களுக்கென்ன அப்படி ஒரு மோகம் எங்க காலேஜ் மேல" என்றாள் சௌமியாவின் அக்கா. "அக்காவைப் பெண் பார்க்க வரவங்க, 'பொண்ணு என்ன படிச்சிருக்குனு?' கேட்டா, அம்மா ஸ்டெல்லா மாரிஸ் காலேஜ்ல பி. எஸ். சி படிச்சான்னு தான் சொல்லுவாங்க" என்று தாயைக் கேலி செய்தாள் சௌமியா. உடனே அவளின் சகோதரியும் அவளுடன் சேர்ந்து கொண்டு, "அது மட்டுமில்ல, சின்னவ கூட அதே காலேஜ் தான், இதையும் சேர்த்து தான் சொல்லுவாங்க" என்று அவள் பங்கிற்கு அவள் அம்மாவைக் கிண்டலடித்தாள்.


பள்ளி விடுமுறைகளில் குழந்தைகளை அழைத்துக் கொண்டுத் தாய் வீட்டிற்கு செல்வது வழக்கமாயிருந்தது சௌமியாவின் தாய்க்கு. இராயப்பேட்டையில் இருந்த அவளின் தாய் வீட்டிற்கு செல்லும் போது, இந்தக் கல்லூரியைக் கடக்கும் போதெல்லாம், 'இதெல்லாம் பணக்காரப் பிள்ளைங்க படிக்கிற காலேஜ். நம்ம குழந்தைங்கள எப்படி இங்கெல்லாம் படிக்க வைக்க முடியும்?' என்று பல முறை ஏங்கியிருக்கிறாள். இரண்டு மகள்களில் ஒருத்தியையாகிலும் இந்தக் கல்லூரியில் படிக்க வைத்தேத் தீர வேண்டும் என்ற கனவு அவளுக்குள்.


பெரியவள் கல்லூரி முடித்துப் பட்டம் வாங்கிய போது, பெரிதும் மகிழ்ந்தனர் குடும்பத்தார் அனைவரும். குடும்பத்திலேயே முதல் பட்டதாரி, அதுவும் பெண் பட்டதாரி என்பதாலும், அவள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள் என்பதாலும் அவர்களுக்கு எல்லாம் இரட்டிப்பு சந்தோஷம். அந்த மகிழ்ச்சி தந்த தைரியத்தில் சின்னவள் சௌம்யாவையும் அதேக் கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்று மனதினுள் கனவும் கண்டு கொண்டாள். அவளது கனவு மெயப்பட்டதோடு மட்டுமின்றி, சௌமியா, வகுப்பின் சிறந்த மாணவியாகவும், முதல் மாணவியாகவும் தேர்ச்சி பெற்று, இன்று நிகழ்ச்சியில் தங்கப் பதக்கமும் பெறப் போகிறாள் என்ற நினைப்பு, அவள் தாயின் கண்களை நிரப்பியது.


தங்கப் பதக்கத்தைச் சுமந்து கொண்டு நடந்து வந்த அவளை, கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் தாய். தன் குடும்பத்தார் அமர்ந்திருந்த இருக்கையை நெருங்கும் போது அத்தனை ஆனந்தம் அவளினுள். அவளின் சகோதரி, "கங்கிராட்ஸ்" என்று வாயசைக்க, அவளைப் பார்த்து வெறும் கண்களை மட்டும் சிமிட்டி விட்டு இருக்கைக்குச் சென்றாள். நிகழ்ச்சி முடிவுற்ற பிறகு, தன் அம்மாவை நோக்கி ஓடினாள் சௌமியா. கையிலிருந்த தங்கப் பதக்கத்தைத் தன் தாயின் கழுத்தில் அணிவித்து, "அம்மா இது உங்களுக்குத் தான்" என்று சொல்லி, ஒரு முத்தம் வைத்தாள். இந்தக் காட்சியை அவளின் சகோதரி அவளது கேமராவில் பதிவு செய்ய, அம்மாவும் மகளும் கலங்கிய கண்களோடு புன்னகைத்தனர். அங்கு "கண்ணீரும் தித்தித்தது!" :-)

Monday, March 2, 2009

தொடர் பதிவு - வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்

கண்ட நாள் முதலாய் ஒன்னும் பெருகலனு, சும்மா இருக்க முடியாம சின்னப் பொண்ணு, அதுவும் ஒரே ஊர்ர்க்காரப் பொண்ணுனு கூட பாக்காம, "எங்கயோ போற மாரியாத்தா, என் மேல வந்து ஏறாத்தா" கதையா, வம்புக்கு இழுதுட்டாரு நம்ம Truth! வீண் வம்புக்கு போகலனாலும், வந்த சண்டையைக் கூட சும்மா விடும் அளவுக்கு நான் ஒன்னும் "அவ்வளவு சமத்துப் புள்ள" இல்லைன்னு அவருக்கு நல்லாத் தெரியும். ஆக, "நானும் ரௌடி, நானும் ரௌடி"னு இதோ கிளம்பிட்டேன்!

என்னைப் போன்று சங்கமிலாமலே சென்னைத் தமிழ் வளர்ப்போரை "வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்" என்று யோசிக்க வைத்ததற்கு முதலில் ஒரு பெரிய நன்றி! வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களா என்று யோசிக்கும் போது உணர்ந்த ஒரு விஷயம், "வழக்கொழிந்த" என்ற வார்த்தையும் கூட இப்பொழுதெல்லாம் வழக்கில் இல்லை என்பது. தமிழே "டமில்" ஆன பிறகு, "அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்" என்று தான் தோன்றுகிறது. "தமிழ் இனி மெல்லச் சாகும்!" என்று என்றோ பாடிச் சென்றான் அந்த முண்டாசுக் கவிஞன்! எத்தனைப் பெரிய தீர்க்கதரிசி அவன் என்று வியந்து கொண்டேன்.

தமிழ் ஆர்வம் கொண்ட, உடன் பணிபுரியும் நண்பர் ஒருவரோடு இதைப்பற்றி பேசிக் கொண்டிருந்த போது, "என்ன எழுதப் போகிறீர்கள்?" என்று அவர் கேட்க, "ஒரு பெண்ணாக, என்னைப் பொறுத்தவரை, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை தான் வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்" என்று நான் யதார்த்தமாக பதிலளிக்க, "இதைத் தான் ஆங்கிலத்தில் irony என்று சொல்வார்கள்" என்றென்னை ஏளனம் செய்ய, அருகிலிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். பிறகவர், "வள்ளுவரைப் படிங்க, கண்டிப்பா உதவி பண்ணுவார்" என்று ஒரு யோசனை கொடுக்க, வள்ளுவர் பாவம், என்னிடம் படாத பாடுபட்டு தான் போனார் என்பது மறுக்கவியலாத உண்மை!

வள்ளுவத்தை முட்டி மோதியதில், சிதறிய சில பொக்கிஷங்கள், இதோ, இங்கே உங்களுக்காக; எனக்காகவும் தான்! :-)
  • அணங்கு - பெண்
  • அழல் - சூடு
  • உவகை - சந்தோஷம்
  • சாக்காடு - இறப்பு

அறிவுரை சொல்வதற்க்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும் என்பது என் கருத்து. ஆக, அறிவுரையெல்லாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை நான். இந்த யுகத்துப் பெண்களுக்கு ஒரு வேண்டுகோள் மட்டுமே உள்ளது என்னிடம். "ஈன்று புறந்தருதல்" மட்டுமே கடமை என்றிருந்து விடாமல், தாய்ப்பாலோடு சேர்த்து உங்கள் குழந்தைகளுக்கு, இயன்றவரை தமிழ்ப்பாலையும் ஊட்டப் பழகிடுங்கள். இது கூட மொழிக்காக நீங்கள் செய்யும் விஷயமில்லை; ஒரு மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த, அவனது தாய் மொழி போல் வேறெந்த மொழியும் பயன்படாது என்பதால், உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்வதாக எண்ணிச் செயல்படுங்கள். "Johnny Johnny"-யைக் காட்டிலும் சிறந்த ஆத்திச்சூடியைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம். மொழிப் பற்றென்பது, வெறும் பேச்சளவில் இல்லாமல், உயிரில், உணர்வில் கலந்த ஒன்றாய் இருந்தால், நம் மொழியுடன் சேர்ந்து நாமும் சிறப்படைவோம் என்பதில் எந்த ஐயப்பாடுமிலை. [ஒரு வழியா கருத்து சொல்லியாச்சு!] ;-)

அடுத்து யாரை அழைப்பது என்பதில் மட்டும், கொஞ்சம் கூட சிந்திக்கத் தேவையிருக்கவில்லை எனக்கு! Synapse ப்ரியா அக்கா மீது இருக்கும் அளவு கடந்த நம்பிக்கை தான்! ஆக, நான் இந்தத் தொடர் பதிவை எழுத அழைப்பது, Synapse ப்ரியா. [எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா?] :-)


Monday, February 23, 2009

என்ன தவம் செய்தனை!

21 பிப்ரவரி 1986

கணவனை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு, வெள்ளிக்கிழமை பூஜை வேலைகளை விறுவிறுப்பாக செய்து கொண்டிருந்தாள் மலர், அன்று எப்படியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேத் தீரவேண்டும் என்ற நினைப்போடு. அவளுக்கு இது இரண்டாவது பிரசவம். திருமணம் முடிந்த அடுத்த வருடம் ஒரு பெண் குழந்தையை அவள் ஈன்றெடுத்ததால், இப்பொழுது மொத்த குடும்பமும், முத்து-மலர் தம்பதியினர்க்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில். இவளது ஐந்து வயது மகள் லாவண்யாவும் கூட "எங்க தம்பி பாப்பா இன்னும் கொஞ்ச நாள்ல வருவானே" அன்று பார்ப்பவரிடமெல்லாம் பெருமை பொங்க சொல்லத் தொடங்கிவிட்டாள்.

வீட்டிலிருந்த பெரியவர்களெல்லாம், நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட, துணைக்கு இருக்கட்டும் என்று பக்கத்து வீட்டுப் பெண்மணியை அழைத்துக்கொண்டு போய் அன்று மாலையே அரசு மருத்துவமனையில் சேர்ந்தாள் மலர். "எல்லாரும் வரதுக்குள்ள உனக்கென்ன மா அவசரம்?" என்று மெய்யான கோபத்தோடு அவளைக் கடிந்து கொண்டார் அவளது தந்தை. "நாங்க வந்த பிறகு நாங்களே உன்ன கூட்டிட்டு வந்திருக்க மாட்டோமா?" என்றார் அவளது தாய். "குழந்தை பிறக்க வேண்டிய தேதி முடிஞ்சு ஏற்கனவே 11 நாள் ஆகுது. என்ன அவசரம்னு ரொம்ப சாதாரணமா கேக்றீங்க?" என்றாள் கொஞ்சம் கவலையோடு. முதல் குழந்தையைப் போல் இந்தக் குழந்தையும் சுகப்பிரசவத்தில் பிறக்க வேண்டுமே என்ற கவலை அவளுக்குள்.

மருத்துவர் அவளின் உடல்நிலையைப் பரிசோதித்துவிட்டு, "இன்னைக்கு நைட் வரைக்கும் வெயிட் பண்ணுவோம், அப்படி இல்லனா நாளைக்குக் காலைல 8 மணிக்கு ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்கணும்" என்று சொல்லிவிட்டார். இருக்கின்ற செலவுகள் போதாதென்று இப்பொழுது ஆபரேஷன் செலவு வேறா என்று மனதிற்குள் இன்னொரு கவலையும் புகுந்து கொண்டது மலருக்கு. "ஹீரோயின் இன்ட்ரோ ஷாட் இப்படி தான் கொஞ்சம் விறுவிறுப்பா இருக்கும், நீங்க கொஞ்சம் அமைதியா இருங்கமா" என்று குழந்தை சொன்னது அவளுக்குக் கேட்காமலே போனது.

22 பிப்ரவரி 1986

விடியற்காலை 4.15 மணிக்கெல்லாம் பிரசவ வலி எடுக்க, பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அப்பொழுதும் கூட பெரியவர்கள் யாரும் இல்லாத நிலையிலும், மிகவும் தைரியத்துடன் தான் இருந்தாள். வயிற்றினுள் இருந்து "நான் இருக்கேன் அம்மா உன் கூட" என்று குழந்தை கூறியது அவளுக்குக் கேட்டது போலும். விடியற்காலை 4.40 மணிக்கு 3.2 கிலோ எடையில் ஒரு "குட்டி தேவதையைப்" பெற்றெடுத்தாள். அவளுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் அவளைப் பார்த்து "உன் பொண்ணு record break செய்திருக்காமா" என்றார். மயக்கத்தில் ஒன்றும் புரியாது விழித்தவளைப் பார்த்து, "நான் பார்த்த பிரச்சவத்திலேயே பிறந்த முதல் பெண் குழந்தை இவ தான்" என்றார்.

"இது தான் முதல் குழந்தையா?" என்று வினவிய மருத்துவரிடம் "இல்ல ரெண்டாவது குழந்தை" என்றதும், "முதல் குழந்தை என்ன?" என்று மருத்துவர் மற்றொரு கேள்வியைத் தொடுக்க, "பெண் குழந்தை" என்று மெல்லிய குரலில் சொன்னாள் மலர். "அச்சிச்சோ, ரெண்டாவதும் பொண்ணா? அப்போ இந்த பாப்பாவை எனக்கு தரியா?" என்று மருத்துவர் கேட்க, ஒரு பூச்செண்டு போன்றிருந்த குழந்தையைப் பார்த்தவாறே, "மாட்டேன்" என்று தலை ஆட்டிவிட்டு மயங்கினாள்.

22 பிப்ரவரி 2009

நள்ளிரவில் என் அறைக்கதவு தட்டப்படும் காரணமறிந்து கதவைத் திறந்தேன். "ஹாப்பி பர்த்டே அம்மு" என்று சொல்லி, அம்மா என் நெற்றியில் அழுந்த ஒரு முத்தம் வைத்தாள். புன்னகையுடன் சோம்பல் முறித்த என் கையைப்பற்றி அப்பா பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். அதற்குள் அக்கா வந்து, என்னை அணைத்து கன்னத்தில் முத்தமொன்றை வைத்து, "ஹாப்பி பர்த்டே டி பாப்பு" என்றாள். "நானும் பா, ப்ளீஸ் ப்ளீஸ்" என்று என்னைக் கிண்டலடித்தபடி மாமா வர, நான் குடுத்த ஒரு "டெரர் லுக்"-இல் அவர் அமைதியாக, சிரிப்பலைகள் எதிரொலித்தது என் வீட்டில்.

நான் பிறந்து, இதோ இருபத்திமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட "இரண்டும் பெண் குழந்தையாப் போச்சே" என்று என் பெற்றோர் வருத்தப்பட்டு நான் கண்டதில்லை. உங்களுக்கு "ரெண்டும் பொண்ணு தானா? ஒரு பையன் கூட இல்லையா?" என்று மிகுந்த அக்கறையுடன்(?) விசாரிப்பவர்களிடம், "எங்களுக்கு ரெண்டு பொண்ணு!" என்று பூரிப்புடன் அவர்கள் சொல்வதைத் தான் இன்னமும் பார்க்கிறேன்.

அம்மா பல தருணங்களில் "ஈன்ற பொழுதின் பெரிது உவந்திருக்கிறாள்". "இவள் தந்தை என் நோற்றான்" என்று இப்பொழுதும் கூட அப்பாவைப் பார்த்து பொறாமைப்படுபவர்களும் உண்டு. "தங்கச்சி பாப்பா வேண்டாம், தம்பி பாப்பா தான் வேணும்" என்று அன்று மொட்டை மாடியில் அலறி அழுதவள், இப்பொழுதெல்லாம் ஒரு நிமிடம் என் முகம் வாடினாலும், உள்ளம் நொந்து போகிறாள். அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகமாகி அதனால் சோர்ந்து போனாலும், வீட்டிற்குள் நுழையும் போது முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக்கொண்டு தான் செல்வேன். இல்லையெனில், அக்காவின் "அன்புத் தொல்லை" சொல்லி முடியாது :-)

"என் வீட்டைப் பார், என்னைப் பிடிக்கும்" என்று பெருமையோடு சொல்லும் அளவிற்கு, இப்படியொரு அன்பான குடும்பத்தில் பிறந்த என்னைப் பார்த்து அடிக்கடி நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி ஒன்று மட்டும் தான். என்ன கேள்வியா? தலைப்பைப் பாருங்க, உங்களுக்கே புரியும் :-)

Friday, February 6, 2009

இந்தக் காதல் படும் பாடு

பிப்ரவரி மாதம் வந்தாலே ஏதோ விழாக்கோலம் பூண்டது போல் மாறிவிடுகிறது நம் சென்னை. எந்த திசையில் திரும்பினாலும், பரிசுப் பொருட்கள் விற்கப்படும் கடைகள், வாழ்த்து அட்டைக் கடைகள் எல்லாம் நிரம்பி வழியத் தொடங்கிவிடும். உலகமே காதலர் தினத்தைக் கொண்டாட ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க, நாம் மட்டும் எதற்கு விதிவிலக்கு என்று எல்லோரும் மிகவும் விறுவிறுப்புடன் இயங்குவது மிகவும் இயல்பான ஒன்றாகிவிட்டது இப்போதெல்லாம். யார் கண்டது? காலப் போக்கில் காதலர் தினத்தை "அரசு விடுமுறை நாட்கள்" பட்டியலில் சேர்க்கச் சொல்லி ஒரு போராட்டம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.

பள்ளியில் பயின்ற காலத்தில் "இந்தக் காதலர் தினத்திற்கு எதற்கு இத்தனை ஆரவாரம்" என்று பலமுறை மனதிற்குள் முனங்கியதும் உண்டு. "பொறாமையில் பொங்குகிறாள்" என்று ஒரு முறை யாரோ சொல்ல, "நான் ஏன் பொறாமைப்படணும்" என்ற கேள்விக்கு இன்னமும் கூட விடை கிடைக்காமல் தான் இருக்கிறேன். வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் அன்பை வெளிப்படுதினால் போதுமா என்று பிள்ளைப்பருவம் முதல் இன்றுவரை எனக்குள் இன்னமும் ஒரு சந்தேகம்.

கல்லூரியில் சேர்ந்த பிறகு, "proud to be single" என்று சொல்லிக் கொள்வதில் உண்மையாகவே பெருமையாகத் தான் இருந்தது. "அங்க போகாத", "வெளியில தேவை இல்லாம சுத்தாத", "என் கூடவே இரு" என்று தேவையற்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல், கல்லூரி வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாகவே அனுபவித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் காதலர் தினத்தன்று கொண்டாட்டம் கலை கட்டும் எங்கள் நட்பு வட்டாரத்தில். எங்கள் தோழி ஒருத்தியின் பிறந்த நாள் அன்று தான் என்பதால், நாங்களும் கூட "celebration mood"-இல் தான் இருப்போம்.

இப்படி எல்லாம் பேசுவதால் நான் காதலுக்கு எதிரியோ, அல்லது காதல் மீது எனக்கு வெறுப்போ எல்லாம் இல்லை. வாழ்வில் ஒரு முறையாகிலும் தாஜ் மகாலைக் கண்டே தீர வேண்டும் என்று ஏங்கிக் கிடந்தவள் நான். கல்லூரி இறுதி ஆண்டில் அந்தக் காதல் சின்னத்தை நேரில் பார்த்த போது நான் வடித்த ஆனந்தக் கண்ணீரை இன்னமும் கூட நினைவில் வைத்துள்ளனர் என்னுடன் படித்தவர்களில் பெரும்பாலானோர். பிறகு ஏன் இத்தனை வெறுப்பு காதலர் தினக் கொண்டாட்டங்களின் மீது என்பதற்கு என்னுடைய பதில் மிகவும் எளிமையான ஒன்று தான்.

முதலில் கூறியதைப் போல், வாழ்வின் மொத்த காதலையும் ஒரே நாளில் வெளிப்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒரு விஷயம். என்னைப் பொறுத்த வரையில் காதல் என்பது நம் வாழ்வோடு இரண்டறக் கலந்த ஒன்றாய் இருக்க வேண்டும். வருடத்திற்கு ஒரே ஒருமுறை தான் நாங்கள் பரஸ்பரம் காதலிக்கிறோம் என்று வாழ்பவர்களுக்கு வேண்டுமானால் இந்த ஒரு நாள் ஆரவாரம் சரிவரும். விடலைப் பருவத்தில் ஏற்படுகின்ற ஹார்மோன் கோளாறுகளைக் காதல் என்று சொல்லித்திரியும் பள்ளிச் சிறுவர்களைக் காணும் போது, தலையில் "நறுக்"கென்று ஒரு குட்டு வைத்து, "படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா?" என்று கேட்க வேண்டும் என்றிருக்கும் எனக்கு. எதிர் பாலினம் மீது ஏற்படுகின்ற ஒரு விதமான ஈர்ப்பினைக் "காதல்" என்று கொச்சைப்படுத்தி அலையும் இளைஞர் வட்டத்தைப் பார்க்கும் போதே அருவருப்பாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

காதலர் தினம் என்பது புதியதாய் காதலிப்பவர்களுக்கோ அல்லது "புரியாமல்" காதலிப்பவர்களுக்கோ ஒரு முக்கியமான தினமாக இருக்கட்டும். காதலை நேசிப்பவர்களுக்கும், காதலை, காதலாய்க் காதலித்து வாழ்பவர்களுக்கும் எல்லா தினமும் காதலர் தினம் தான். காதல் மிகவும் புனிதமான ஒன்று. அதன் புனிதத்தைப் போற்ற முடியாமல் போனாலும், அதை சிதைக்காமலாகிலும் பார்த்துக் கொள்வோம், காதலுக்கும் கூட கற்புண்டு என்பதால்.


Friday, January 23, 2009

இப்படியும் ஒரு பொங்கல்

கல்லூரியில் சேரும் போது என் எடை வெறும் 45 கிலோ தான். வயதிற்குக் குறைவான எடை என்று அம்மா எப்போதும் புலம்பியதால், கொஞ்சம் அதிகம் சாப்பிட ஆரம்பித்து இளங்கலைப் பட்டம் முடித்த போது என் எடை 47 கிலோவாக மாறியதில் அம்மாவிற்கு கொஞ்சம் சந்தோஷம். ஆனால் பணியில் அமர்ந்த இரண்டே ஆண்டில் எடை 50 கிலோவானது. சரி இருக்கட்டும் என்று கொஞ்சம் விட்டது தான் பிரச்சனை. நான்கே மாதத்தில் 2 கிலோ கூடி இப்போது என் எடை 52 கிலோவானது. ஏதாவது செய்து எடையைக் குறைத்தாக வேண்டும் என்ற முயற்சியில் தினமும் நடைப் பயிற்சி செய்யலாம் என்று முடிவு செய்தேன்.

போகி அன்று இரவு எப்படியும் வீட்டிற்கு நடந்தே செல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் பேருந்தை விட்டு இறங்கினேன். என் கைக் கடிகாரம் சரியாக இரவு 08.05 என்று காட்ட, எப்படியும் இரவு 09.00 மணிக்குள் வீட்டினை அடைந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் துவங்கியது எனது நடை பயணம். இவ்வளவு தூரம் நடந்து பழக்கம் இல்லாததால், களைப்புத் தெரியாமல் இருக்கட்டும் என்று என் கைப்பேசியின் வானொலியில் பாடல்களைக் கேட்டபடி நடந்தேன்.

பாதி தூரத்தைக் கடந்த பிறகும் கூட என் கடிகாரம் இரவு 08.25 என்று காட்ட, கொஞ்சம் கூடுதல் சந்தோஷம் மனதிற்குள். வானொலியில் வேறு எனக்கு பிடித்தமான பாடல்களாக ஒலிக்க, நடையில் வேகம் கூடியது, என்னையும் அறியாமல். இன்னும் இரண்டு தெருக்களைக் கடந்தால் வீட்டை அடைந்து விடலாம் என்ற நினைப்போடு நடந்து கொண்டிருந்த போது, வண்டியை நிறுத்திவிட்டு இரண்டு ஆண்கள் நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். ஆனால் யார் என்று சரியாகப் பார்க்கவில்லை. அட, அத்தனை நல்லப் பெண் ஒன்றும் இல்லை நான். எங்கள் ஊரில், "நின்று பார்க்கும்" அளவுக்கு யாரும் இல்லை, அவ்வளவு தான்.

அந்த ஆண்களைக் கடந்து சென்ற பிறகு தெரு விளக்கு ஏதும் கிடையாது. அங்கிருந்து குறைந்தது 7 நிமிடத்தில் வீடு சேர்ந்து விடலாம் என்ற நினைப்போடு வானொலி அலைவரிசையை மாற்ற நான் முயன்று கொண்டிருந்த போது தான் நடந்தது அந்தச் சம்பவம். கழுத்தின் மீது ஏதோ வருடியது போல் இருக்க, கழுத்தின் மீது நான் கை வைத்துப் பார்க்கும் முன், நான் கூறிய அந்த இரண்டு பேரில் ஒருவன் வண்டியை ஓட்டிக் கொண்டுவர, பின்னே அமர்ந்திருந்தவன் என் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பற்றி இழுத்தான். இழுத்த வேகத்தில் சங்கிலியும் அவன் கையேடு போக, செய்வதறியாது நின்றேன்.

முதலில் எனக்குத் தோன்றிய விஷயம் அந்த வண்டியின் எண்ணைக் குறித்துக் கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால் அங்கு தெரு விளக்கு ஏதும் இல்லாமல் போனதால், என்னால் அந்த வண்டியின் எண்ணைக் காண முடியவில்லை. மட்டும் அல்லாமல், வண்டியும் வேகமாகச் சென்றதால், அந்த இருவரின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் போனது. அங்கேயே நின்று கொண்டிருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று வீட்டை அடைந்தேன்.

வீட்டிற்கு வந்ததும் விஷயத்தைச் சொன்னால் எல்லோரும் பயந்து போவார்கள் என்று, ஒரு 10 நிமிடம் ஏதும் சொல்லாமல் வெகு இயல்பாக இருந்தேன். பிறகு எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நேரம், "அம்மா செயின் snatch பண்ணிட்டாங்க மா" என்றேன். அம்மா பதறிப் போய் என்னையே பார்த்துக் கொண்டிருக்க, "வாண்டு சும்மா விளையாடுது" என்றார் அக்காவின் கணவர். (நான் கொஞ்சம் "சமீரா ரெட்டி" உயரம், அதனால் தான் "வாண்டு"). அக்கா என் அருகில் வந்து என் கழுத்தைப் பார்த்து "நெஜம்மா தான் சொல்றா" என்றாள்.

அம்மா சொன்ன வார்த்தைகள் இன்னமும் ஒலிக்கின்றது என் காதுகளில். "செயின் போனா போது, என் குழந்தைக்கு ஒன்னும் ஆகலியே அது போதும்" என்றாள் அம்மா கண்கள் கலங்கி. அப்பா மட்டும் ஏதும் சொல்லாமல் இருந்தார். 2 சவரன் தங்கச் சங்கிலி தொலைந்து போன வருத்தம் அவருக்காவது இருக்கட்டும் என்று ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை அப்பாவிடம்.

அன்றிரவு முழுதும் தொண்டையில் பயங்கர வலி. பின் புறமிருந்து அவன் இழுத்ததில் தொண்டை அதிகமாகவே அழுந்தியது. என் கவலை எல்லாம் எங்கே பேச முடியாமல் போய் விடுமோ என்று தான். நம்மால பேசாம எல்லாம் உயிர் வாழ முடியாதே! அதான் என் கவலை. கொஞ்ச நேரம் எனக்கு நானே பேசிப் பார்த்துக் கொண்டேன். பேச முடிந்தது. சரி என்று, நெருங்கிய தோழியைக் கைப்பேசியில் அழைத்து அவளிடம் பாதிக் கதையைச் சொல்லும் போதே கண்ணீர் வழியத் தான் செய்தது. எனக்கும் அந்த தங்கச் சங்கிலிக்கும் ஒரு 8 வருட பந்தம்!

மறு நாள் காலை பொங்கலன்று உறங்கிக் கொண்டிருக்கும் போது, கழுத்தில் மீண்டும் ஏதோ வருட, திடுக்கென்று விழித்துக் கொண்டேன். என் அருகே அப்பா நின்று கொண்டு என் கழுத்தைத் தடவிக் கொடுத்தார். "வலி எல்லாம் ஒன்னும் இல்லல மா" என்றார் என் தொண்டையை வருடிக் கொடுத்தபடி. "இல்லப் பா" என்று புன்னகைத்தேன். முன் தினம் இருந்த வலி காணாமல் தான் போனது என் அப்பா தடவிக் கொடுத்ததில் :)

Thursday, January 1, 2009

2008 -இல் என் உலகம்

31 ஆம் டிசம்பர் 2007 அன்று இரவு வழக்கம் போல், ஒவ்வொருவரும் புது வருடத்தை வரவேற்க பரபரப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர் என் வீட்டில். எல்லாரும் வேலையில் மூழ்கிவிட்டால், தொலைக்காட்சியில் வரும் விளம்பரதாரர் வழங்கும் நிகழ்ச்சிகளை யார் பார்ப்பது? சரியாச் சொன்னீங்க! தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது தான் என்னோட வேலை! :) நள்ளிரவு 12 மணிக்கு விளக்கேற்றி, கடவுளை வணங்கிவிட்டு, கடந்த ஆண்டிற்கு ஒரு நன்றியும், பிறந்த புது ஆண்டிற்கான பிரார்த்தனைகளையும் செய்த பிறகே உறங்கப் போவது எங்கள் வீட்டில் ஒரு வழக்கம்.

முதல் வாழ்த்து யாருக்கு என்பதில் ஒரு சுவாரசியம் உள்ளது. என் அக்காவிற்கு அப்பா மீது கொஞ்சம் அதிகப் பாசம் என்றால், எனக்கு அம்மா தான் உயிர்! ஆக, என் முதல் வாழ்த்து எப்போதும் அம்மாவிற்கு தான். ஆனால் இயல்புக்கு மாறாக, 2008 -இல் என் முதல் வாழ்த்து அக்காவிற்கு சொன்னதில் ஒரு அடிப்படை உண்மை இருக்கத் தான் செய்தது, எப்படியும் அவள் அடுத்த புத்தாண்டில் அவளது மாமியார் வீட்டில் இருப்பாள் என்பதால். அவளை இறுக அணைத்து முத்தம் வைத்து, "ஹாப்பி நியூ இயர் டி" என்று சொன்ன போது இருவருமே கண் கலங்கி விட்டோம்.

பெப்ரவரி-இல் அக்காவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண நாள் 27 ஆகஸ்ட் என்று முடிவு செய்யப்பட்டது இந்த 2008 -இல் தான். நீண்ட நாட்களாக, ஒரு முறையாவது நேரில் சந்தித்தே தீர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த என் நட்பைச் சந்தித்ததும் 2008 -இல் தான். என் வாழ்வின் முதல் பட்டுப் புடவை வாங்கியதும் கூட 2008 -இல் தான், அக்காவின் திருமணத்திற்காக! வெறும் காகிதத்தில் மட்டுமே கிறுக்கிக் கொண்டிருந்தவள், இப்போது இப்படிப் பதிவுகள் போட்டு கிறுக்கத் தொடங்க, பதிவுலகில் காலடி எடுத்து வைத்தும் இந்த 2008 -இல் தான் (என்னை எழுதத் தூண்டிய என் நட்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள்!). இவ்வளவு ஏன், நகம் கூட வளர்க்கத் தொடங்கி விட்டேன் 2008 -இல் (என் நெருங்கிய நட்பு வட்டாரத்துக்கு மட்டுமே புரியும், இது எனக்கு ஓர் "இமாலய சாதனை" என்று!)

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு அக்கா செல்லும் போது யாரும் அழக் கூடாதென்று வீட்டில் இருப்பவர்களை எல்லாம் கண்டித்து வைத்திருந்தேன். அவளை அனுப்பி விட்டு, யாருக்கும் தெரியாமல், மாடியில் வந்து, தொலைப்பேசியில் என் நண்பனை அழைத்து அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது. 22 வருடங்களாக உடன் இருந்தவள், திடீர் என்று வேறு வீடு சென்று விட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ளவே கொஞ்சம் காலம் எடுத்தது எனக்கு. சின்னக் குழந்தை போல் எப்போதும் சுற்றித்திரிந்த எனக்கும் பொறுப்புகளை ஏற்கும் நேரம் வந்ததை உணர்ந்தேன்.

எப்பொழுதும் செல்பேசியைக் கட்டிக்கொண்டு வாழ்வதை வெகுவாகக் குறைத்துக் கொண்டேன். முடிந்த அளவிற்கு வீட்டில் இருக்கவும், அம்மாவுடன் அதிக நேரம் செலவிடவும் பழகிக் கொண்டுள்ளேன். "அட, நான் கூட கொஞ்சம் நல்ல பொண்ணு தானோ" என்று எனக்கு நானே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றங்கள் என்னுள் என்பது மறுக்க முடியாத உண்மை!

இப்படி 2008 -இன் நிகழ்வுகளை அசைபோட்டபடி, எங்கள் வீட்டு வாசலில் அக்கா போட்ட கோலத்தை ரசித்துக் கொண்டிருந்த போது, வீட்டினுள் இருந்து அம்மாவின் குரல், "அம்மு, சாமி கும்பிட வா" என்று. என் நன்றிகளை இறைவனுக்கு வழங்கிவிட்டு, 2009 எல்லாருக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு, உறங்கச் சென்றேன்.

ஆண்டின் முதல் நாள் காலையிலேயே, "சின்ன பொண்ணுக்கு எப்போ கல்யாணம்" என்று ஆரம்பித்துவிட்டனர் உறவினர்கள். இப்பொழுது தான் பொறுப்புகளை ஏற்கத் துவங்கியுள்ள நிலையில், திருமணத்தைப் பற்றி சிந்திக்கவும் கூட எனக்கு இன்னும் ஓராண்டு காலம் வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டதால், மாப்பிள்ளை தேடும் படலத்தில் யாரும் ஈடுபடப் போவதில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம் இந்த புத்தாண்டில் எனக்கு. "அப்போ எப்போ தான் கல்யாணம்?" என்ற அனைவரின் கேள்விகளுக்கும் 2009 பதில் அளிக்கட்டும்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!