Thursday, January 1, 2009

2008 -இல் என் உலகம்

31 ஆம் டிசம்பர் 2007 அன்று இரவு வழக்கம் போல், ஒவ்வொருவரும் புது வருடத்தை வரவேற்க பரபரப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர் என் வீட்டில். எல்லாரும் வேலையில் மூழ்கிவிட்டால், தொலைக்காட்சியில் வரும் விளம்பரதாரர் வழங்கும் நிகழ்ச்சிகளை யார் பார்ப்பது? சரியாச் சொன்னீங்க! தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது தான் என்னோட வேலை! :) நள்ளிரவு 12 மணிக்கு விளக்கேற்றி, கடவுளை வணங்கிவிட்டு, கடந்த ஆண்டிற்கு ஒரு நன்றியும், பிறந்த புது ஆண்டிற்கான பிரார்த்தனைகளையும் செய்த பிறகே உறங்கப் போவது எங்கள் வீட்டில் ஒரு வழக்கம்.

முதல் வாழ்த்து யாருக்கு என்பதில் ஒரு சுவாரசியம் உள்ளது. என் அக்காவிற்கு அப்பா மீது கொஞ்சம் அதிகப் பாசம் என்றால், எனக்கு அம்மா தான் உயிர்! ஆக, என் முதல் வாழ்த்து எப்போதும் அம்மாவிற்கு தான். ஆனால் இயல்புக்கு மாறாக, 2008 -இல் என் முதல் வாழ்த்து அக்காவிற்கு சொன்னதில் ஒரு அடிப்படை உண்மை இருக்கத் தான் செய்தது, எப்படியும் அவள் அடுத்த புத்தாண்டில் அவளது மாமியார் வீட்டில் இருப்பாள் என்பதால். அவளை இறுக அணைத்து முத்தம் வைத்து, "ஹாப்பி நியூ இயர் டி" என்று சொன்ன போது இருவருமே கண் கலங்கி விட்டோம்.

பெப்ரவரி-இல் அக்காவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண நாள் 27 ஆகஸ்ட் என்று முடிவு செய்யப்பட்டது இந்த 2008 -இல் தான். நீண்ட நாட்களாக, ஒரு முறையாவது நேரில் சந்தித்தே தீர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த என் நட்பைச் சந்தித்ததும் 2008 -இல் தான். என் வாழ்வின் முதல் பட்டுப் புடவை வாங்கியதும் கூட 2008 -இல் தான், அக்காவின் திருமணத்திற்காக! வெறும் காகிதத்தில் மட்டுமே கிறுக்கிக் கொண்டிருந்தவள், இப்போது இப்படிப் பதிவுகள் போட்டு கிறுக்கத் தொடங்க, பதிவுலகில் காலடி எடுத்து வைத்தும் இந்த 2008 -இல் தான் (என்னை எழுதத் தூண்டிய என் நட்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள்!). இவ்வளவு ஏன், நகம் கூட வளர்க்கத் தொடங்கி விட்டேன் 2008 -இல் (என் நெருங்கிய நட்பு வட்டாரத்துக்கு மட்டுமே புரியும், இது எனக்கு ஓர் "இமாலய சாதனை" என்று!)

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு அக்கா செல்லும் போது யாரும் அழக் கூடாதென்று வீட்டில் இருப்பவர்களை எல்லாம் கண்டித்து வைத்திருந்தேன். அவளை அனுப்பி விட்டு, யாருக்கும் தெரியாமல், மாடியில் வந்து, தொலைப்பேசியில் என் நண்பனை அழைத்து அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது. 22 வருடங்களாக உடன் இருந்தவள், திடீர் என்று வேறு வீடு சென்று விட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ளவே கொஞ்சம் காலம் எடுத்தது எனக்கு. சின்னக் குழந்தை போல் எப்போதும் சுற்றித்திரிந்த எனக்கும் பொறுப்புகளை ஏற்கும் நேரம் வந்ததை உணர்ந்தேன்.

எப்பொழுதும் செல்பேசியைக் கட்டிக்கொண்டு வாழ்வதை வெகுவாகக் குறைத்துக் கொண்டேன். முடிந்த அளவிற்கு வீட்டில் இருக்கவும், அம்மாவுடன் அதிக நேரம் செலவிடவும் பழகிக் கொண்டுள்ளேன். "அட, நான் கூட கொஞ்சம் நல்ல பொண்ணு தானோ" என்று எனக்கு நானே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றங்கள் என்னுள் என்பது மறுக்க முடியாத உண்மை!

இப்படி 2008 -இன் நிகழ்வுகளை அசைபோட்டபடி, எங்கள் வீட்டு வாசலில் அக்கா போட்ட கோலத்தை ரசித்துக் கொண்டிருந்த போது, வீட்டினுள் இருந்து அம்மாவின் குரல், "அம்மு, சாமி கும்பிட வா" என்று. என் நன்றிகளை இறைவனுக்கு வழங்கிவிட்டு, 2009 எல்லாருக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு, உறங்கச் சென்றேன்.

ஆண்டின் முதல் நாள் காலையிலேயே, "சின்ன பொண்ணுக்கு எப்போ கல்யாணம்" என்று ஆரம்பித்துவிட்டனர் உறவினர்கள். இப்பொழுது தான் பொறுப்புகளை ஏற்கத் துவங்கியுள்ள நிலையில், திருமணத்தைப் பற்றி சிந்திக்கவும் கூட எனக்கு இன்னும் ஓராண்டு காலம் வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டதால், மாப்பிள்ளை தேடும் படலத்தில் யாரும் ஈடுபடப் போவதில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம் இந்த புத்தாண்டில் எனக்கு. "அப்போ எப்போ தான் கல்யாணம்?" என்ற அனைவரின் கேள்விகளுக்கும் 2009 பதில் அளிக்கட்டும்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


No comments: