Friday, January 23, 2009

இப்படியும் ஒரு பொங்கல்

கல்லூரியில் சேரும் போது என் எடை வெறும் 45 கிலோ தான். வயதிற்குக் குறைவான எடை என்று அம்மா எப்போதும் புலம்பியதால், கொஞ்சம் அதிகம் சாப்பிட ஆரம்பித்து இளங்கலைப் பட்டம் முடித்த போது என் எடை 47 கிலோவாக மாறியதில் அம்மாவிற்கு கொஞ்சம் சந்தோஷம். ஆனால் பணியில் அமர்ந்த இரண்டே ஆண்டில் எடை 50 கிலோவானது. சரி இருக்கட்டும் என்று கொஞ்சம் விட்டது தான் பிரச்சனை. நான்கே மாதத்தில் 2 கிலோ கூடி இப்போது என் எடை 52 கிலோவானது. ஏதாவது செய்து எடையைக் குறைத்தாக வேண்டும் என்ற முயற்சியில் தினமும் நடைப் பயிற்சி செய்யலாம் என்று முடிவு செய்தேன்.

போகி அன்று இரவு எப்படியும் வீட்டிற்கு நடந்தே செல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் பேருந்தை விட்டு இறங்கினேன். என் கைக் கடிகாரம் சரியாக இரவு 08.05 என்று காட்ட, எப்படியும் இரவு 09.00 மணிக்குள் வீட்டினை அடைந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் துவங்கியது எனது நடை பயணம். இவ்வளவு தூரம் நடந்து பழக்கம் இல்லாததால், களைப்புத் தெரியாமல் இருக்கட்டும் என்று என் கைப்பேசியின் வானொலியில் பாடல்களைக் கேட்டபடி நடந்தேன்.

பாதி தூரத்தைக் கடந்த பிறகும் கூட என் கடிகாரம் இரவு 08.25 என்று காட்ட, கொஞ்சம் கூடுதல் சந்தோஷம் மனதிற்குள். வானொலியில் வேறு எனக்கு பிடித்தமான பாடல்களாக ஒலிக்க, நடையில் வேகம் கூடியது, என்னையும் அறியாமல். இன்னும் இரண்டு தெருக்களைக் கடந்தால் வீட்டை அடைந்து விடலாம் என்ற நினைப்போடு நடந்து கொண்டிருந்த போது, வண்டியை நிறுத்திவிட்டு இரண்டு ஆண்கள் நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். ஆனால் யார் என்று சரியாகப் பார்க்கவில்லை. அட, அத்தனை நல்லப் பெண் ஒன்றும் இல்லை நான். எங்கள் ஊரில், "நின்று பார்க்கும்" அளவுக்கு யாரும் இல்லை, அவ்வளவு தான்.

அந்த ஆண்களைக் கடந்து சென்ற பிறகு தெரு விளக்கு ஏதும் கிடையாது. அங்கிருந்து குறைந்தது 7 நிமிடத்தில் வீடு சேர்ந்து விடலாம் என்ற நினைப்போடு வானொலி அலைவரிசையை மாற்ற நான் முயன்று கொண்டிருந்த போது தான் நடந்தது அந்தச் சம்பவம். கழுத்தின் மீது ஏதோ வருடியது போல் இருக்க, கழுத்தின் மீது நான் கை வைத்துப் பார்க்கும் முன், நான் கூறிய அந்த இரண்டு பேரில் ஒருவன் வண்டியை ஓட்டிக் கொண்டுவர, பின்னே அமர்ந்திருந்தவன் என் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பற்றி இழுத்தான். இழுத்த வேகத்தில் சங்கிலியும் அவன் கையேடு போக, செய்வதறியாது நின்றேன்.

முதலில் எனக்குத் தோன்றிய விஷயம் அந்த வண்டியின் எண்ணைக் குறித்துக் கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால் அங்கு தெரு விளக்கு ஏதும் இல்லாமல் போனதால், என்னால் அந்த வண்டியின் எண்ணைக் காண முடியவில்லை. மட்டும் அல்லாமல், வண்டியும் வேகமாகச் சென்றதால், அந்த இருவரின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் போனது. அங்கேயே நின்று கொண்டிருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று வீட்டை அடைந்தேன்.

வீட்டிற்கு வந்ததும் விஷயத்தைச் சொன்னால் எல்லோரும் பயந்து போவார்கள் என்று, ஒரு 10 நிமிடம் ஏதும் சொல்லாமல் வெகு இயல்பாக இருந்தேன். பிறகு எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நேரம், "அம்மா செயின் snatch பண்ணிட்டாங்க மா" என்றேன். அம்மா பதறிப் போய் என்னையே பார்த்துக் கொண்டிருக்க, "வாண்டு சும்மா விளையாடுது" என்றார் அக்காவின் கணவர். (நான் கொஞ்சம் "சமீரா ரெட்டி" உயரம், அதனால் தான் "வாண்டு"). அக்கா என் அருகில் வந்து என் கழுத்தைப் பார்த்து "நெஜம்மா தான் சொல்றா" என்றாள்.

அம்மா சொன்ன வார்த்தைகள் இன்னமும் ஒலிக்கின்றது என் காதுகளில். "செயின் போனா போது, என் குழந்தைக்கு ஒன்னும் ஆகலியே அது போதும்" என்றாள் அம்மா கண்கள் கலங்கி. அப்பா மட்டும் ஏதும் சொல்லாமல் இருந்தார். 2 சவரன் தங்கச் சங்கிலி தொலைந்து போன வருத்தம் அவருக்காவது இருக்கட்டும் என்று ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை அப்பாவிடம்.

அன்றிரவு முழுதும் தொண்டையில் பயங்கர வலி. பின் புறமிருந்து அவன் இழுத்ததில் தொண்டை அதிகமாகவே அழுந்தியது. என் கவலை எல்லாம் எங்கே பேச முடியாமல் போய் விடுமோ என்று தான். நம்மால பேசாம எல்லாம் உயிர் வாழ முடியாதே! அதான் என் கவலை. கொஞ்ச நேரம் எனக்கு நானே பேசிப் பார்த்துக் கொண்டேன். பேச முடிந்தது. சரி என்று, நெருங்கிய தோழியைக் கைப்பேசியில் அழைத்து அவளிடம் பாதிக் கதையைச் சொல்லும் போதே கண்ணீர் வழியத் தான் செய்தது. எனக்கும் அந்த தங்கச் சங்கிலிக்கும் ஒரு 8 வருட பந்தம்!

மறு நாள் காலை பொங்கலன்று உறங்கிக் கொண்டிருக்கும் போது, கழுத்தில் மீண்டும் ஏதோ வருட, திடுக்கென்று விழித்துக் கொண்டேன். என் அருகே அப்பா நின்று கொண்டு என் கழுத்தைத் தடவிக் கொடுத்தார். "வலி எல்லாம் ஒன்னும் இல்லல மா" என்றார் என் தொண்டையை வருடிக் கொடுத்தபடி. "இல்லப் பா" என்று புன்னகைத்தேன். முன் தினம் இருந்த வலி காணாமல் தான் போனது என் அப்பா தடவிக் கொடுத்ததில் :)

Thursday, January 1, 2009

2008 -இல் என் உலகம்

31 ஆம் டிசம்பர் 2007 அன்று இரவு வழக்கம் போல், ஒவ்வொருவரும் புது வருடத்தை வரவேற்க பரபரப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர் என் வீட்டில். எல்லாரும் வேலையில் மூழ்கிவிட்டால், தொலைக்காட்சியில் வரும் விளம்பரதாரர் வழங்கும் நிகழ்ச்சிகளை யார் பார்ப்பது? சரியாச் சொன்னீங்க! தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது தான் என்னோட வேலை! :) நள்ளிரவு 12 மணிக்கு விளக்கேற்றி, கடவுளை வணங்கிவிட்டு, கடந்த ஆண்டிற்கு ஒரு நன்றியும், பிறந்த புது ஆண்டிற்கான பிரார்த்தனைகளையும் செய்த பிறகே உறங்கப் போவது எங்கள் வீட்டில் ஒரு வழக்கம்.

முதல் வாழ்த்து யாருக்கு என்பதில் ஒரு சுவாரசியம் உள்ளது. என் அக்காவிற்கு அப்பா மீது கொஞ்சம் அதிகப் பாசம் என்றால், எனக்கு அம்மா தான் உயிர்! ஆக, என் முதல் வாழ்த்து எப்போதும் அம்மாவிற்கு தான். ஆனால் இயல்புக்கு மாறாக, 2008 -இல் என் முதல் வாழ்த்து அக்காவிற்கு சொன்னதில் ஒரு அடிப்படை உண்மை இருக்கத் தான் செய்தது, எப்படியும் அவள் அடுத்த புத்தாண்டில் அவளது மாமியார் வீட்டில் இருப்பாள் என்பதால். அவளை இறுக அணைத்து முத்தம் வைத்து, "ஹாப்பி நியூ இயர் டி" என்று சொன்ன போது இருவருமே கண் கலங்கி விட்டோம்.

பெப்ரவரி-இல் அக்காவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண நாள் 27 ஆகஸ்ட் என்று முடிவு செய்யப்பட்டது இந்த 2008 -இல் தான். நீண்ட நாட்களாக, ஒரு முறையாவது நேரில் சந்தித்தே தீர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த என் நட்பைச் சந்தித்ததும் 2008 -இல் தான். என் வாழ்வின் முதல் பட்டுப் புடவை வாங்கியதும் கூட 2008 -இல் தான், அக்காவின் திருமணத்திற்காக! வெறும் காகிதத்தில் மட்டுமே கிறுக்கிக் கொண்டிருந்தவள், இப்போது இப்படிப் பதிவுகள் போட்டு கிறுக்கத் தொடங்க, பதிவுலகில் காலடி எடுத்து வைத்தும் இந்த 2008 -இல் தான் (என்னை எழுதத் தூண்டிய என் நட்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள்!). இவ்வளவு ஏன், நகம் கூட வளர்க்கத் தொடங்கி விட்டேன் 2008 -இல் (என் நெருங்கிய நட்பு வட்டாரத்துக்கு மட்டுமே புரியும், இது எனக்கு ஓர் "இமாலய சாதனை" என்று!)

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு அக்கா செல்லும் போது யாரும் அழக் கூடாதென்று வீட்டில் இருப்பவர்களை எல்லாம் கண்டித்து வைத்திருந்தேன். அவளை அனுப்பி விட்டு, யாருக்கும் தெரியாமல், மாடியில் வந்து, தொலைப்பேசியில் என் நண்பனை அழைத்து அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது. 22 வருடங்களாக உடன் இருந்தவள், திடீர் என்று வேறு வீடு சென்று விட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ளவே கொஞ்சம் காலம் எடுத்தது எனக்கு. சின்னக் குழந்தை போல் எப்போதும் சுற்றித்திரிந்த எனக்கும் பொறுப்புகளை ஏற்கும் நேரம் வந்ததை உணர்ந்தேன்.

எப்பொழுதும் செல்பேசியைக் கட்டிக்கொண்டு வாழ்வதை வெகுவாகக் குறைத்துக் கொண்டேன். முடிந்த அளவிற்கு வீட்டில் இருக்கவும், அம்மாவுடன் அதிக நேரம் செலவிடவும் பழகிக் கொண்டுள்ளேன். "அட, நான் கூட கொஞ்சம் நல்ல பொண்ணு தானோ" என்று எனக்கு நானே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றங்கள் என்னுள் என்பது மறுக்க முடியாத உண்மை!

இப்படி 2008 -இன் நிகழ்வுகளை அசைபோட்டபடி, எங்கள் வீட்டு வாசலில் அக்கா போட்ட கோலத்தை ரசித்துக் கொண்டிருந்த போது, வீட்டினுள் இருந்து அம்மாவின் குரல், "அம்மு, சாமி கும்பிட வா" என்று. என் நன்றிகளை இறைவனுக்கு வழங்கிவிட்டு, 2009 எல்லாருக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு, உறங்கச் சென்றேன்.

ஆண்டின் முதல் நாள் காலையிலேயே, "சின்ன பொண்ணுக்கு எப்போ கல்யாணம்" என்று ஆரம்பித்துவிட்டனர் உறவினர்கள். இப்பொழுது தான் பொறுப்புகளை ஏற்கத் துவங்கியுள்ள நிலையில், திருமணத்தைப் பற்றி சிந்திக்கவும் கூட எனக்கு இன்னும் ஓராண்டு காலம் வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டதால், மாப்பிள்ளை தேடும் படலத்தில் யாரும் ஈடுபடப் போவதில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம் இந்த புத்தாண்டில் எனக்கு. "அப்போ எப்போ தான் கல்யாணம்?" என்ற அனைவரின் கேள்விகளுக்கும் 2009 பதில் அளிக்கட்டும்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!