Monday, March 2, 2009

தொடர் பதிவு - வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்

கண்ட நாள் முதலாய் ஒன்னும் பெருகலனு, சும்மா இருக்க முடியாம சின்னப் பொண்ணு, அதுவும் ஒரே ஊர்ர்க்காரப் பொண்ணுனு கூட பாக்காம, "எங்கயோ போற மாரியாத்தா, என் மேல வந்து ஏறாத்தா" கதையா, வம்புக்கு இழுதுட்டாரு நம்ம Truth! வீண் வம்புக்கு போகலனாலும், வந்த சண்டையைக் கூட சும்மா விடும் அளவுக்கு நான் ஒன்னும் "அவ்வளவு சமத்துப் புள்ள" இல்லைன்னு அவருக்கு நல்லாத் தெரியும். ஆக, "நானும் ரௌடி, நானும் ரௌடி"னு இதோ கிளம்பிட்டேன்!

என்னைப் போன்று சங்கமிலாமலே சென்னைத் தமிழ் வளர்ப்போரை "வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்" என்று யோசிக்க வைத்ததற்கு முதலில் ஒரு பெரிய நன்றி! வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களா என்று யோசிக்கும் போது உணர்ந்த ஒரு விஷயம், "வழக்கொழிந்த" என்ற வார்த்தையும் கூட இப்பொழுதெல்லாம் வழக்கில் இல்லை என்பது. தமிழே "டமில்" ஆன பிறகு, "அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்" என்று தான் தோன்றுகிறது. "தமிழ் இனி மெல்லச் சாகும்!" என்று என்றோ பாடிச் சென்றான் அந்த முண்டாசுக் கவிஞன்! எத்தனைப் பெரிய தீர்க்கதரிசி அவன் என்று வியந்து கொண்டேன்.

தமிழ் ஆர்வம் கொண்ட, உடன் பணிபுரியும் நண்பர் ஒருவரோடு இதைப்பற்றி பேசிக் கொண்டிருந்த போது, "என்ன எழுதப் போகிறீர்கள்?" என்று அவர் கேட்க, "ஒரு பெண்ணாக, என்னைப் பொறுத்தவரை, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை தான் வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்" என்று நான் யதார்த்தமாக பதிலளிக்க, "இதைத் தான் ஆங்கிலத்தில் irony என்று சொல்வார்கள்" என்றென்னை ஏளனம் செய்ய, அருகிலிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். பிறகவர், "வள்ளுவரைப் படிங்க, கண்டிப்பா உதவி பண்ணுவார்" என்று ஒரு யோசனை கொடுக்க, வள்ளுவர் பாவம், என்னிடம் படாத பாடுபட்டு தான் போனார் என்பது மறுக்கவியலாத உண்மை!

வள்ளுவத்தை முட்டி மோதியதில், சிதறிய சில பொக்கிஷங்கள், இதோ, இங்கே உங்களுக்காக; எனக்காகவும் தான்! :-)
  • அணங்கு - பெண்
  • அழல் - சூடு
  • உவகை - சந்தோஷம்
  • சாக்காடு - இறப்பு

அறிவுரை சொல்வதற்க்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும் என்பது என் கருத்து. ஆக, அறிவுரையெல்லாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை நான். இந்த யுகத்துப் பெண்களுக்கு ஒரு வேண்டுகோள் மட்டுமே உள்ளது என்னிடம். "ஈன்று புறந்தருதல்" மட்டுமே கடமை என்றிருந்து விடாமல், தாய்ப்பாலோடு சேர்த்து உங்கள் குழந்தைகளுக்கு, இயன்றவரை தமிழ்ப்பாலையும் ஊட்டப் பழகிடுங்கள். இது கூட மொழிக்காக நீங்கள் செய்யும் விஷயமில்லை; ஒரு மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த, அவனது தாய் மொழி போல் வேறெந்த மொழியும் பயன்படாது என்பதால், உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்வதாக எண்ணிச் செயல்படுங்கள். "Johnny Johnny"-யைக் காட்டிலும் சிறந்த ஆத்திச்சூடியைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம். மொழிப் பற்றென்பது, வெறும் பேச்சளவில் இல்லாமல், உயிரில், உணர்வில் கலந்த ஒன்றாய் இருந்தால், நம் மொழியுடன் சேர்ந்து நாமும் சிறப்படைவோம் என்பதில் எந்த ஐயப்பாடுமிலை. [ஒரு வழியா கருத்து சொல்லியாச்சு!] ;-)

அடுத்து யாரை அழைப்பது என்பதில் மட்டும், கொஞ்சம் கூட சிந்திக்கத் தேவையிருக்கவில்லை எனக்கு! Synapse ப்ரியா அக்கா மீது இருக்கும் அளவு கடந்த நம்பிக்கை தான்! ஆக, நான் இந்தத் தொடர் பதிவை எழுத அழைப்பது, Synapse ப்ரியா. [எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா?] :-)


10 comments:

நிலாவும் அம்மாவும் said...

me firsttttttttt.....
தப்பு தப்பு..தமிழ்ல தான் சொல்லோனும் ........நான் தேன் முத ஆளா...

ஆத்தாடி....எம்புட்டு சந்தோசமா இருக்கு...

நிலாவும் அம்மாவும் said...

/****நானும் ரௌடி, நானும் ரௌடி"னு இதோ கிளம்பிட்டேன்!///****

ஆத்தாடி ஊருக்குள்ள பொம்பள ரௌவ்டிங்க கிளம்பிட்டாங்கையா..

நிலாவும் அம்மாவும் said...

அச்சம், மடம், பயிர்ப்பு, நாணம், ........மறந்து தான் போச்சு...

இப்போவும் பேய் படம் பார்த்தா அச்சம் வருது தான்

நாணம்...சமையல்ல உப்பு கொஞ்சம் ஜாஸ்தியாகி போச்சுன்னா எங்க போயி மூஞ்சியை வச்சுக்குரதுன்னு தெரியாம நானமாத் தான் இருக்கு...


உங்க எழுத்து நடை நல்லா இருக்கு புன்னகை....வாழ்த்துக்கள்

Raich said...

புன்னகை,
உங்களுக்கு தமிழ்ல ஆர்வம் இருக்கற விஷயம் எனக்கு தெரியும்.
ஆனா உங்க ஆர்வம் எழுத்துல இவளவு அழகா வரும் என்கிறத இன்றைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன்
வாழ்த்துக்கள்..

புன்னகை said...

@Nilavum ammavum,
என்னோட பதிவுக்கெல்லாம் கூட இப்டி முந்தி அடிச்சிகிட்டு வந்து "me first" போடறத பாக்கும் போது, பெருமைல, தரைல கால் படாம தான் நடக்கிறேன்! :-)
எழுத்து நடை நல்லா இருக்குன்னு சொல்லியிருக்கீங்க, ரொம்ப நன்றி நிலாம்மா!

புன்னகை said...

@Raich,
நமக்கு ஒரு விஷயத்துல ஆர்வம் அதிகமாகும் போது, அது நமக்கே தெரியாமல் ஏதோ ஒரு விதத்தில் வெளி வந்தேத் தீரும். வைரமுத்து சொல்வார்ல, "காதலித்துப் பார், கையெழுத்து அழகாகும்"னு, அப்படி தான் இது கூட :-)

புன்னகை said...

@Manu,
//எப்படி இப்படி எல்லாம் உங்களால் எழுத முடிகிறது??//
Truth எழுதின பதிவப் படிச்ச பிறகும் நீங்க என்ன இப்படி கேட்பது ரொம்பத் தப்பு! வேற்று தாய்மொழி கொண்ட அவர், இவ்வளவு அருமையா தமிழ்ல எழுதின பிறகு, அதுல ஒரு கால் பங்கு கூட நான் எழுதலைனா, நான் தமிழச்சின்னு சொல்லிக்கிறதுல ஒரு பிரயோஜனமும் இல்லைல? அவர் அளவுக்கு இல்லைனாலும், ஏதோ எனக்குத் தெரிஞ்ச விதத்துல எழுதணும்னு தான் எழுதினேன் :-)

Maddy said...

என்னமா எழுதிட்டு ஒண்ணும் தெரியாதுண்னு சொன்ன எப்படி.
அறிவுரை சொல்ல வயசு இல்லேண்ணு சொல்லிட்டு அருமையான
யோசனை( அப்படியே வச்சுக்கலாம்) சொல்லி இருக்கீங்க!!!

நானும் அவங்களை மாட்டி விட்டு இருக்கேன்!!! நிச்சயம் வித்தியாசமா
வார்த்தைகள் வரும்

புன்னகை said...

@Maddy,
நன்றி! நீங்களும் ப்ரியா அக்காவைத் தான் தாக்கியிருக்கீங்களா? நல்ல விஷயம்! :-)

விந்தைமனிதன் said...

தமிழ் தெரிஞ்ச பொண்ணா? அதுவும் சென்னைல...!!! வாழ்த்துக்கள்