Thursday, June 4, 2009

இப்படிக்கு நான்

உன் கருவறையில் சற்று கடுந்தவம் புரிந்ததாலோ என்னவோ, உன்னோடான எனதிணைப்பு இன்னமும் கூட குறையவில்லை எனக்கு. "அம்மா" என்றுன்னை கடைசியாக அழைத்தது எப்போதென்று நினைவில் இல்லை, உன்னை உரிமையோடு "மலர்" என்று உன் பெயரிட்டே அழைக்கும் பழக்கம் பல வருடங்களாக இருப்பதால். "நீ, வா, போ" என்று உன்னோடு பேசும் போது நான் உன்னிடம் உணரும் நெருக்கத்தை "நீங்க வாங்க" என்று அக்கா அழைக்கும் போது உணருகின்றாளா என்ற கேள்வி இப்போதும் என்னுள் விடையில்லாமலே முடங்கிக் கொண்டிருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை மீதே அதிகப்பாசம் என்ற எழுதா நியதி என்னிடம் மட்டும் வேறுபட்டது ஏன் என்று விளங்காமலே வளர்ந்து விட்டேன் நான். அதற்காக வருத்தம் இருந்தாலும், பெரிதாக இல்லை. நான் "அம்மா பொண்ணு" என்று சொல்வதில் கொஞ்சம் பெருமை கூட உண்டெனக்கு.

சென்ற மாதம் உலகிலுள்ள அனைவரும் தத்தம் அன்னையருக்குப் பரிசுகளையும் வாழ்த்துகளையும் வழங்கிக் கொண்டிருந்த நாளில், நீ என்னிடமிருந்து பெற்றது வெறும் வசைகளை மட்டும் தான். தண்ணீர் அருந்த மட்டுமே சமையலறைப் பக்கம் எட்டிப்பார்ப்பவளை, வீட்டின் முழுநேரப் பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ளும்படியும், இலவச இணைப்பாக அப்பாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பையும் பனம்பழமாய் இந்தக் குட்டிக் குருவியின் தலையில் நீ வைத்துச் சென்றதில் தான் அவ்வளவு கோபமும் என்று நீ நினைத்திருக்க மாட்டாய் என்பது தெரியும் எனக்கு. அர்த்தமற்ற கோபத்திற்கு உன் மீது வைத்த அளவு கடந்த பிரியம் மட்டுமே காரணம் என்பதை உனக்குச் சொல்லி விளங்க வைக்கத் தேவையில்லை என்பதையும் நன்கறிவேன்.

நீ ஊருக்கு சென்ற மறுநாள், பொழுது விடிந்தும், தினமும் கண் விழிப்பது உன் முகத்தில் தான் என்பதால், எனக்கு மட்டும் விடியவில்லை. கண்களின் பனித் துளிகளோடு விடிந்தது எனது பொழுது. நம் வீட்டு வாசலில் நான் முதன் முறையாக போட்ட கோலத்தின் கோலத்தை ரசிக்க நீயில்லை வீட்டில். அப்பா வாசலுக்கு வந்தும், எனது கோலம் அவரது கவனத்தை ஈர்க்கவில்லை! அவரைச் சொல்லியும் குற்றமில்லை, வாசலில் நான் கோலம் போட்டேன் என்பதை அவர் அறிந்ததே மறுநாள் காலையில் தான். இட்லியும் கோழிக் குழம்பும் மணந்தால் மட்டுமே நம் வீட்டில் ஞாயிறு அன்று ஞாயிறு புலரும் என்பதால், அப்பாவை இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு இட்லி சாப்பிட வரும்படி அழைத்தேன். வெறும் தண்ணீரைக் கூட ரசித்துக் குடிக்கும் அப்பா, குழம்பின் ருசி 'அருமை' என்று சான்றிதழ் அளிக்கவும் செய்தார். ஆனாலும் அந்தக் குழம்பை ரசிக்க நீயில்லை வீட்டில். இன்னும் பல அரிய செயல்களை நான் செய்திட்ட போதிலும், அதனழகை ரசிக்க நீயில்லை வீட்டில்.

இதோ இப்பொழுது, எனது முறை. உன்னைத் தனியே விட்டு, வெளியூர் செல்லப் போகிறேன். நீ எனக்கு விதித்த அதே மூன்று நாள் 'தண்டனை'. தண்டனை ஏனோ உன்னை விட என்னையே அதிகமாய் பாதிப்பதாய் என்னுள் ஒரு உணர்வு. ஊரிலிருந்து நீ திரும்பி வந்த அன்று, தூங்கிக் கொண்டிருந்த எனது தலை முடியை வருடிய சுகம் போதும். அந்த சுகம் நிதம் கிடைக்க, நீ வாரம் ஒரு முறை எங்கேனும் உறவினர் வீட்டிற்குப் போய் வர எனது மனப்பூர்வமான சம்மதங்கள்! நான் திரும்பி வந்ததும் அந்தப் பாசம் கலந்த கேசம் கோதுதல் கிடைக்கப் போகும் சந்தோஷத்தில் எனது பயணத்தைத் துவங்குகிறேன்.

5 comments:

கலையரசன் said...

//நான் திரும்பி வந்ததும் அந்தப் பாசம் கலந்த கேசம் கோதுதல் கிடைக்கப் போகும் சந்தோஷத்தில் எனது பயணத்தைத் துவங்குகிறேன்//
கொப்புரான நல்லாருக்கு...!
ம்ம் நிறைய எழுதுங்க!

சந்தனமுல்லை said...

நல்லா இருக்குங்க எதைக் குறிப்பிட்டு சொல்றதுன்னு தெரியலை...அழகா எழுதியிருக்கீங்க! :-)

priya said...

suweeeeeeeeet.

$anjaiGandh! said...

ரொம்ப அருமையா கவிதை மாதிரி எழுதி இருக்கிங்க.. சூப்பர்.

புன்னகை said...

@கலையரசன்,
நிறைய எழுதணும்னு தான் ஆசை. ஆனா, சமீப காலமாக ஆணிகள் கொஞ்சம் அதிகம். வருகைக்கு நன்றி.


சந்தனமுல்லை, priya, $anjaiGandh! அனைவருக்கும் நன்றி!