Thursday, June 25, 2009

லேடிஸ் சீட்

'மேலை நாடுகளில் பேருந்துகளில் ஆண் பெண் என்று தனியே இருக்கைகள் ஏதும் கிடையாது. ஆயினும் அங்கே பெண்களுக்கு இருக்கை இல்லாமல் போகும் பட்சத்தில் ஆண்கள் தங்களது இருக்கையைத் தாமாகவே முன்வந்து பெண்களுக்கு அளிப்பர்' என்று யாரோ என் பிஞ்சு மனசுல நஞ்சக் கலந்து விட்டுட்டாங்க குழந்தைப் பருவத்துல. அந்த விஷயம் உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது, ஆனால் அப்படியிருத்தல் நலம் என்பது மனதின் எண்ணம்.

நம்ம சிங்காரச் சென்னையில் கூட, பேருந்து இருக்கைகளுக்கு மேல் 'பெண்கள்' என்று எழுதப்படிருக்குமே தவிர, 'ஆண்கள்' என்று எங்கும் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. பெண்களுக்கும், ஊனமுற்றோர் முதியோர் ஆகியோருக்கு மட்டும் தான் தனித்து எழுதப்பட்டிருக்கும். ஆக, இவ்வாறு குறிக்கப்பட்டுள்ள இருக்கைகள் தவிர மற்றவை எல்லாம் பொதுவானவை என்று தானே பொருள் கொள்ள வேண்டும்? ஆனால், பொதுவான இருக்கைகள் யாவும் ஆண்கள் இருக்கைகள் என்று எழுதாச் சட்டமாகவே இருந்து வருகின்றது நம் ஊரில்.

குறைந்தது ஏழு பேர் அமரக் கூடிய கடைசி இருக்கையின் மேலே 'பெண்கள்' என்று எழுதப்பட்டிருந்தாலும் கூட, அங்கே அமரும் ஆண்களுக்கு அதைப் படித்தறியும் அளவுக்கு எழுத்தறிவில்லை போலும் என்று தோன்றும் பல நேரங்களில் எனக்கு. அவர்களுக்கு எழுத்தறிவித்து இறைவன் ஆவோம் என்று பல நேரங்களில் முயன்று, வெற்றியும் பெற்றுள்ளேன் என்பது தனிக்கதை. அதை இங்கு அலசப் போவதில்லை.கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கும் ஆண்களில் பலர் பெண்கள் பேருந்தினுள் ஏறுவதைக் கண்டவுடனே எழுந்து அவர்களுக்கு இடமளிப்பதைக் கண்டிருக்கிறேன். இன்னமும் மனிதம் செத்துப் போகவில்லை என்று மனதினுள்ளே மக்திழ்ந்தும் உள்ளேன்.

சிலர் மட்டும் ஏனோ மக்களின் மத்தியில் மாக்களாகவே வாழ விழைகின்றனர். பெண்களைக் கண்டதும் அத்தனை நேரம் விழிதிருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்குப் போவதும், திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போவதும் தினம் காண்கின்ற அற்பக் காட்சிகள்! "காசு குடுத்து டிக்கட் வாங்கியிருக்கேன், என்னால எழுந்துக்க முடியாது" என்றெல்லாம் வீர வசனம் பேசும் 'கெட்ட' பொம்மர்கள் பலர் உண்டு. ஆண்களை மட்டும் குறை கூறிப் பயனில்லை. நம் பெண்களும் கூட கொஞ்சம் கூட யோசிக்காமல், "அவருக்கு உடம்பு சரியில்லைம்மா" எனும் போது, உதடுகள் துடிக்கும் "அப்போ நீங்க உங்க இடத்தை அவருக்குக் குடுக்க வேண்டியது தானே" என்று கேட்க. "ஆம்புளைங்க சீட்ல நீங்க மட்டும் உக்காருறீங்க? அப்போ நாங்க என்ன உங்கள எழுந்திருக்கவா சொல்றோம்?" என்று ஒரு அறிவுப்பூர்வமான(?) கேள்வி வேறு வரும் பல தருணங்களில்.

இத்தனைக் குமுறல் எதற்கு என்று நீங்கள் முகம் சுளிப்பது புரிகின்றது! எல்லாம் சோக ராகம் தான். தினமும் காலையில் மூன்று அல்லது நான்கு பேருந்துகள் மாறி தான் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் நான். இன்று காலை ஏறிய முதல் பேருந்தில் கூட்ட நெரிசல் அவ்வளவாக இல்லை என்ற போதும் இருக்கைகள் ஏதும் இல்லை. என்னருகே ஒரு வயதான பெண்மணியும் ஏற, பெண்கள் இருக்கையில் அமர்ந்திருந்த இரு ஆண்களைப் பார்த்து "ladies seat" என்று சொன்னதற்கு, நான் ஏதோ புரியாத பாஷையில் பேசியது போல் முகத்தை வைத்தனர் இருவரும். "இது லேடிஸ் சீட், கொஞ்சம் எழுந்துக்குறீங்களா?" என்று கேட்ட பிறகும் அதே குழப்பப் பார்வை.

இவர்களிடம் பேசி அர்த்தமில்லை என்றுணர்ந்து, சற்று தள்ளி நின்று கொண்டேன். அந்த வயதான பெண்மணி, "கொஞ்சம் எழுந்துக்கோயேன்பா, வயசானவங்க நிக்குறோம்ல?அந்தப் பொண்ணு கூட சொல்லுச்சுலப்பா?" என்றதும், "இப்படிப் பணிவாச் சொன்னா எழுந்துக்கப் போறோம், அத விட்டுட்டு?" என்றதும் எனக்கு வந்தது கோபம்! எனது உரிமையை நான் பெற இவர்களிடம் நான் எதற்குப் பணிந்து போக வேண்டும்? வந்த கோபத்தையெல்லாம் எனக்குள்ளயே மறைத்து விட்டு, பேருந்தின் முதல் இருக்கையை நோக்கி நகர்ந்து விட்டேன். என்ன செய்றது, "துஷ்டனைக் கண்டால் தூர விலகு" அப்படினும் சொல்லிக் குடுத்து வெச்சிருக்காங்களே!

பி. கு: திரைப்படம் ஒன்றில் வரும் வசனம் தான், இருப்பினும் என்னை மிகவும் ஈர்த்த வசனங்களில் ஒன்றிது: "Just because you are strong, you cant use force!"

Wednesday, June 17, 2009

எங்கிருந்து வந்தாயடா?ஏதும் உறவில்லை என்ற போதும்
ஏதோ உவகை என்னுள் உன்னால்
உந்தன் பாதங்கள் மண்ணை முத்தமிட்டது
என்றறிந்ததும் என் மனதில்
மகிழ்ச்சி வெள்ளக் காடு!
மண்ணை முத்தமிட்ட உன் மலர்ப் பாதங்கள்
இன்று நிமிர்ந்து நிற்கவும்,
தத்தை நடை பயிலவும்
இதோ ஓராண்டு இன்றோடு இனிதே நிறைவுறுகிறது!
வாழ்வில் இது போல்
இன்னும் பல ஆண்டுகள் நீ
வளம் பல பெற்று வாழ்ந்திட
இறையருள் வேண்டுகிறேன்!

ஏதும் உறவில்லை என்ற போதும்
ஏதோ உவகை என்னுள் உன்னால்!
எங்கிருந்து வந்தாயடா?


பி. கு 1: எனது "குட்டி நண்பன்" அனீஷ் - இன் பிறந்த நாள் இன்று. அவருக்காக தான் இந்த குட்டிக் கவிதை.


பி. கு 2: நம்ம கண்ட நாள் முதலாய் Truth அவர்களுக்கும் கூட இன்னைக்கு தான் பிறந்தநாள்.. அவரையும் வாழ்த்தலாம் வாங்க...

Thursday, June 4, 2009

இப்படிக்கு நான்

உன் கருவறையில் சற்று கடுந்தவம் புரிந்ததாலோ என்னவோ, உன்னோடான எனதிணைப்பு இன்னமும் கூட குறையவில்லை எனக்கு. "அம்மா" என்றுன்னை கடைசியாக அழைத்தது எப்போதென்று நினைவில் இல்லை, உன்னை உரிமையோடு "மலர்" என்று உன் பெயரிட்டே அழைக்கும் பழக்கம் பல வருடங்களாக இருப்பதால். "நீ, வா, போ" என்று உன்னோடு பேசும் போது நான் உன்னிடம் உணரும் நெருக்கத்தை "நீங்க வாங்க" என்று அக்கா அழைக்கும் போது உணருகின்றாளா என்ற கேள்வி இப்போதும் என்னுள் விடையில்லாமலே முடங்கிக் கொண்டிருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை மீதே அதிகப்பாசம் என்ற எழுதா நியதி என்னிடம் மட்டும் வேறுபட்டது ஏன் என்று விளங்காமலே வளர்ந்து விட்டேன் நான். அதற்காக வருத்தம் இருந்தாலும், பெரிதாக இல்லை. நான் "அம்மா பொண்ணு" என்று சொல்வதில் கொஞ்சம் பெருமை கூட உண்டெனக்கு.

சென்ற மாதம் உலகிலுள்ள அனைவரும் தத்தம் அன்னையருக்குப் பரிசுகளையும் வாழ்த்துகளையும் வழங்கிக் கொண்டிருந்த நாளில், நீ என்னிடமிருந்து பெற்றது வெறும் வசைகளை மட்டும் தான். தண்ணீர் அருந்த மட்டுமே சமையலறைப் பக்கம் எட்டிப்பார்ப்பவளை, வீட்டின் முழுநேரப் பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ளும்படியும், இலவச இணைப்பாக அப்பாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பையும் பனம்பழமாய் இந்தக் குட்டிக் குருவியின் தலையில் நீ வைத்துச் சென்றதில் தான் அவ்வளவு கோபமும் என்று நீ நினைத்திருக்க மாட்டாய் என்பது தெரியும் எனக்கு. அர்த்தமற்ற கோபத்திற்கு உன் மீது வைத்த அளவு கடந்த பிரியம் மட்டுமே காரணம் என்பதை உனக்குச் சொல்லி விளங்க வைக்கத் தேவையில்லை என்பதையும் நன்கறிவேன்.

நீ ஊருக்கு சென்ற மறுநாள், பொழுது விடிந்தும், தினமும் கண் விழிப்பது உன் முகத்தில் தான் என்பதால், எனக்கு மட்டும் விடியவில்லை. கண்களின் பனித் துளிகளோடு விடிந்தது எனது பொழுது. நம் வீட்டு வாசலில் நான் முதன் முறையாக போட்ட கோலத்தின் கோலத்தை ரசிக்க நீயில்லை வீட்டில். அப்பா வாசலுக்கு வந்தும், எனது கோலம் அவரது கவனத்தை ஈர்க்கவில்லை! அவரைச் சொல்லியும் குற்றமில்லை, வாசலில் நான் கோலம் போட்டேன் என்பதை அவர் அறிந்ததே மறுநாள் காலையில் தான். இட்லியும் கோழிக் குழம்பும் மணந்தால் மட்டுமே நம் வீட்டில் ஞாயிறு அன்று ஞாயிறு புலரும் என்பதால், அப்பாவை இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு இட்லி சாப்பிட வரும்படி அழைத்தேன். வெறும் தண்ணீரைக் கூட ரசித்துக் குடிக்கும் அப்பா, குழம்பின் ருசி 'அருமை' என்று சான்றிதழ் அளிக்கவும் செய்தார். ஆனாலும் அந்தக் குழம்பை ரசிக்க நீயில்லை வீட்டில். இன்னும் பல அரிய செயல்களை நான் செய்திட்ட போதிலும், அதனழகை ரசிக்க நீயில்லை வீட்டில்.

இதோ இப்பொழுது, எனது முறை. உன்னைத் தனியே விட்டு, வெளியூர் செல்லப் போகிறேன். நீ எனக்கு விதித்த அதே மூன்று நாள் 'தண்டனை'. தண்டனை ஏனோ உன்னை விட என்னையே அதிகமாய் பாதிப்பதாய் என்னுள் ஒரு உணர்வு. ஊரிலிருந்து நீ திரும்பி வந்த அன்று, தூங்கிக் கொண்டிருந்த எனது தலை முடியை வருடிய சுகம் போதும். அந்த சுகம் நிதம் கிடைக்க, நீ வாரம் ஒரு முறை எங்கேனும் உறவினர் வீட்டிற்குப் போய் வர எனது மனப்பூர்வமான சம்மதங்கள்! நான் திரும்பி வந்ததும் அந்தப் பாசம் கலந்த கேசம் கோதுதல் கிடைக்கப் போகும் சந்தோஷத்தில் எனது பயணத்தைத் துவங்குகிறேன்.