Monday, February 23, 2009

என்ன தவம் செய்தனை!

21 பிப்ரவரி 1986

கணவனை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு, வெள்ளிக்கிழமை பூஜை வேலைகளை விறுவிறுப்பாக செய்து கொண்டிருந்தாள் மலர், அன்று எப்படியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேத் தீரவேண்டும் என்ற நினைப்போடு. அவளுக்கு இது இரண்டாவது பிரசவம். திருமணம் முடிந்த அடுத்த வருடம் ஒரு பெண் குழந்தையை அவள் ஈன்றெடுத்ததால், இப்பொழுது மொத்த குடும்பமும், முத்து-மலர் தம்பதியினர்க்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில். இவளது ஐந்து வயது மகள் லாவண்யாவும் கூட "எங்க தம்பி பாப்பா இன்னும் கொஞ்ச நாள்ல வருவானே" அன்று பார்ப்பவரிடமெல்லாம் பெருமை பொங்க சொல்லத் தொடங்கிவிட்டாள்.

வீட்டிலிருந்த பெரியவர்களெல்லாம், நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட, துணைக்கு இருக்கட்டும் என்று பக்கத்து வீட்டுப் பெண்மணியை அழைத்துக்கொண்டு போய் அன்று மாலையே அரசு மருத்துவமனையில் சேர்ந்தாள் மலர். "எல்லாரும் வரதுக்குள்ள உனக்கென்ன மா அவசரம்?" என்று மெய்யான கோபத்தோடு அவளைக் கடிந்து கொண்டார் அவளது தந்தை. "நாங்க வந்த பிறகு நாங்களே உன்ன கூட்டிட்டு வந்திருக்க மாட்டோமா?" என்றார் அவளது தாய். "குழந்தை பிறக்க வேண்டிய தேதி முடிஞ்சு ஏற்கனவே 11 நாள் ஆகுது. என்ன அவசரம்னு ரொம்ப சாதாரணமா கேக்றீங்க?" என்றாள் கொஞ்சம் கவலையோடு. முதல் குழந்தையைப் போல் இந்தக் குழந்தையும் சுகப்பிரசவத்தில் பிறக்க வேண்டுமே என்ற கவலை அவளுக்குள்.

மருத்துவர் அவளின் உடல்நிலையைப் பரிசோதித்துவிட்டு, "இன்னைக்கு நைட் வரைக்கும் வெயிட் பண்ணுவோம், அப்படி இல்லனா நாளைக்குக் காலைல 8 மணிக்கு ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்கணும்" என்று சொல்லிவிட்டார். இருக்கின்ற செலவுகள் போதாதென்று இப்பொழுது ஆபரேஷன் செலவு வேறா என்று மனதிற்குள் இன்னொரு கவலையும் புகுந்து கொண்டது மலருக்கு. "ஹீரோயின் இன்ட்ரோ ஷாட் இப்படி தான் கொஞ்சம் விறுவிறுப்பா இருக்கும், நீங்க கொஞ்சம் அமைதியா இருங்கமா" என்று குழந்தை சொன்னது அவளுக்குக் கேட்காமலே போனது.

22 பிப்ரவரி 1986

விடியற்காலை 4.15 மணிக்கெல்லாம் பிரசவ வலி எடுக்க, பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அப்பொழுதும் கூட பெரியவர்கள் யாரும் இல்லாத நிலையிலும், மிகவும் தைரியத்துடன் தான் இருந்தாள். வயிற்றினுள் இருந்து "நான் இருக்கேன் அம்மா உன் கூட" என்று குழந்தை கூறியது அவளுக்குக் கேட்டது போலும். விடியற்காலை 4.40 மணிக்கு 3.2 கிலோ எடையில் ஒரு "குட்டி தேவதையைப்" பெற்றெடுத்தாள். அவளுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் அவளைப் பார்த்து "உன் பொண்ணு record break செய்திருக்காமா" என்றார். மயக்கத்தில் ஒன்றும் புரியாது விழித்தவளைப் பார்த்து, "நான் பார்த்த பிரச்சவத்திலேயே பிறந்த முதல் பெண் குழந்தை இவ தான்" என்றார்.

"இது தான் முதல் குழந்தையா?" என்று வினவிய மருத்துவரிடம் "இல்ல ரெண்டாவது குழந்தை" என்றதும், "முதல் குழந்தை என்ன?" என்று மருத்துவர் மற்றொரு கேள்வியைத் தொடுக்க, "பெண் குழந்தை" என்று மெல்லிய குரலில் சொன்னாள் மலர். "அச்சிச்சோ, ரெண்டாவதும் பொண்ணா? அப்போ இந்த பாப்பாவை எனக்கு தரியா?" என்று மருத்துவர் கேட்க, ஒரு பூச்செண்டு போன்றிருந்த குழந்தையைப் பார்த்தவாறே, "மாட்டேன்" என்று தலை ஆட்டிவிட்டு மயங்கினாள்.

22 பிப்ரவரி 2009

நள்ளிரவில் என் அறைக்கதவு தட்டப்படும் காரணமறிந்து கதவைத் திறந்தேன். "ஹாப்பி பர்த்டே அம்மு" என்று சொல்லி, அம்மா என் நெற்றியில் அழுந்த ஒரு முத்தம் வைத்தாள். புன்னகையுடன் சோம்பல் முறித்த என் கையைப்பற்றி அப்பா பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். அதற்குள் அக்கா வந்து, என்னை அணைத்து கன்னத்தில் முத்தமொன்றை வைத்து, "ஹாப்பி பர்த்டே டி பாப்பு" என்றாள். "நானும் பா, ப்ளீஸ் ப்ளீஸ்" என்று என்னைக் கிண்டலடித்தபடி மாமா வர, நான் குடுத்த ஒரு "டெரர் லுக்"-இல் அவர் அமைதியாக, சிரிப்பலைகள் எதிரொலித்தது என் வீட்டில்.

நான் பிறந்து, இதோ இருபத்திமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட "இரண்டும் பெண் குழந்தையாப் போச்சே" என்று என் பெற்றோர் வருத்தப்பட்டு நான் கண்டதில்லை. உங்களுக்கு "ரெண்டும் பொண்ணு தானா? ஒரு பையன் கூட இல்லையா?" என்று மிகுந்த அக்கறையுடன்(?) விசாரிப்பவர்களிடம், "எங்களுக்கு ரெண்டு பொண்ணு!" என்று பூரிப்புடன் அவர்கள் சொல்வதைத் தான் இன்னமும் பார்க்கிறேன்.

அம்மா பல தருணங்களில் "ஈன்ற பொழுதின் பெரிது உவந்திருக்கிறாள்". "இவள் தந்தை என் நோற்றான்" என்று இப்பொழுதும் கூட அப்பாவைப் பார்த்து பொறாமைப்படுபவர்களும் உண்டு. "தங்கச்சி பாப்பா வேண்டாம், தம்பி பாப்பா தான் வேணும்" என்று அன்று மொட்டை மாடியில் அலறி அழுதவள், இப்பொழுதெல்லாம் ஒரு நிமிடம் என் முகம் வாடினாலும், உள்ளம் நொந்து போகிறாள். அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகமாகி அதனால் சோர்ந்து போனாலும், வீட்டிற்குள் நுழையும் போது முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக்கொண்டு தான் செல்வேன். இல்லையெனில், அக்காவின் "அன்புத் தொல்லை" சொல்லி முடியாது :-)

"என் வீட்டைப் பார், என்னைப் பிடிக்கும்" என்று பெருமையோடு சொல்லும் அளவிற்கு, இப்படியொரு அன்பான குடும்பத்தில் பிறந்த என்னைப் பார்த்து அடிக்கடி நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி ஒன்று மட்டும் தான். என்ன கேள்வியா? தலைப்பைப் பாருங்க, உங்களுக்கே புரியும் :-)

Friday, February 6, 2009

இந்தக் காதல் படும் பாடு

பிப்ரவரி மாதம் வந்தாலே ஏதோ விழாக்கோலம் பூண்டது போல் மாறிவிடுகிறது நம் சென்னை. எந்த திசையில் திரும்பினாலும், பரிசுப் பொருட்கள் விற்கப்படும் கடைகள், வாழ்த்து அட்டைக் கடைகள் எல்லாம் நிரம்பி வழியத் தொடங்கிவிடும். உலகமே காதலர் தினத்தைக் கொண்டாட ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க, நாம் மட்டும் எதற்கு விதிவிலக்கு என்று எல்லோரும் மிகவும் விறுவிறுப்புடன் இயங்குவது மிகவும் இயல்பான ஒன்றாகிவிட்டது இப்போதெல்லாம். யார் கண்டது? காலப் போக்கில் காதலர் தினத்தை "அரசு விடுமுறை நாட்கள்" பட்டியலில் சேர்க்கச் சொல்லி ஒரு போராட்டம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.

பள்ளியில் பயின்ற காலத்தில் "இந்தக் காதலர் தினத்திற்கு எதற்கு இத்தனை ஆரவாரம்" என்று பலமுறை மனதிற்குள் முனங்கியதும் உண்டு. "பொறாமையில் பொங்குகிறாள்" என்று ஒரு முறை யாரோ சொல்ல, "நான் ஏன் பொறாமைப்படணும்" என்ற கேள்விக்கு இன்னமும் கூட விடை கிடைக்காமல் தான் இருக்கிறேன். வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் அன்பை வெளிப்படுதினால் போதுமா என்று பிள்ளைப்பருவம் முதல் இன்றுவரை எனக்குள் இன்னமும் ஒரு சந்தேகம்.

கல்லூரியில் சேர்ந்த பிறகு, "proud to be single" என்று சொல்லிக் கொள்வதில் உண்மையாகவே பெருமையாகத் தான் இருந்தது. "அங்க போகாத", "வெளியில தேவை இல்லாம சுத்தாத", "என் கூடவே இரு" என்று தேவையற்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல், கல்லூரி வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாகவே அனுபவித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் காதலர் தினத்தன்று கொண்டாட்டம் கலை கட்டும் எங்கள் நட்பு வட்டாரத்தில். எங்கள் தோழி ஒருத்தியின் பிறந்த நாள் அன்று தான் என்பதால், நாங்களும் கூட "celebration mood"-இல் தான் இருப்போம்.

இப்படி எல்லாம் பேசுவதால் நான் காதலுக்கு எதிரியோ, அல்லது காதல் மீது எனக்கு வெறுப்போ எல்லாம் இல்லை. வாழ்வில் ஒரு முறையாகிலும் தாஜ் மகாலைக் கண்டே தீர வேண்டும் என்று ஏங்கிக் கிடந்தவள் நான். கல்லூரி இறுதி ஆண்டில் அந்தக் காதல் சின்னத்தை நேரில் பார்த்த போது நான் வடித்த ஆனந்தக் கண்ணீரை இன்னமும் கூட நினைவில் வைத்துள்ளனர் என்னுடன் படித்தவர்களில் பெரும்பாலானோர். பிறகு ஏன் இத்தனை வெறுப்பு காதலர் தினக் கொண்டாட்டங்களின் மீது என்பதற்கு என்னுடைய பதில் மிகவும் எளிமையான ஒன்று தான்.

முதலில் கூறியதைப் போல், வாழ்வின் மொத்த காதலையும் ஒரே நாளில் வெளிப்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒரு விஷயம். என்னைப் பொறுத்த வரையில் காதல் என்பது நம் வாழ்வோடு இரண்டறக் கலந்த ஒன்றாய் இருக்க வேண்டும். வருடத்திற்கு ஒரே ஒருமுறை தான் நாங்கள் பரஸ்பரம் காதலிக்கிறோம் என்று வாழ்பவர்களுக்கு வேண்டுமானால் இந்த ஒரு நாள் ஆரவாரம் சரிவரும். விடலைப் பருவத்தில் ஏற்படுகின்ற ஹார்மோன் கோளாறுகளைக் காதல் என்று சொல்லித்திரியும் பள்ளிச் சிறுவர்களைக் காணும் போது, தலையில் "நறுக்"கென்று ஒரு குட்டு வைத்து, "படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா?" என்று கேட்க வேண்டும் என்றிருக்கும் எனக்கு. எதிர் பாலினம் மீது ஏற்படுகின்ற ஒரு விதமான ஈர்ப்பினைக் "காதல்" என்று கொச்சைப்படுத்தி அலையும் இளைஞர் வட்டத்தைப் பார்க்கும் போதே அருவருப்பாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

காதலர் தினம் என்பது புதியதாய் காதலிப்பவர்களுக்கோ அல்லது "புரியாமல்" காதலிப்பவர்களுக்கோ ஒரு முக்கியமான தினமாக இருக்கட்டும். காதலை நேசிப்பவர்களுக்கும், காதலை, காதலாய்க் காதலித்து வாழ்பவர்களுக்கும் எல்லா தினமும் காதலர் தினம் தான். காதல் மிகவும் புனிதமான ஒன்று. அதன் புனிதத்தைப் போற்ற முடியாமல் போனாலும், அதை சிதைக்காமலாகிலும் பார்த்துக் கொள்வோம், காதலுக்கும் கூட கற்புண்டு என்பதால்.