Wednesday, December 17, 2008

அவன் பெயர் சந்தோஷ்

அலுவலகத்திற்கு வந்து ஒரு மணி நேரம் ஆன பிறகும் கூட வேலையில் மனம் ஈடுபடவில்லை எனக்கு. பேருந்தில் கண்ட அவனது புன்னகை மட்டுமே நிழலாய்த் தொடர்வதால், கண் முன்னே வேறேதும் தெரியவில்லை எனக்கு. அந்த பேருந்தில் எத்தனை பேர் அவனது புன்னகையைக் கண்டனர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவன் புன்னகையைத் தவிர வேறொன்றையும் என்னால் காண முடியவில்லை என்பதே உண்மை! பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த என் அருகே அமர்ந்த அவன் வீசிய மந்திரப் புன்னகையில் இருந்து இன்னமும் மீள முடியாமல் நான்!

புன்னகைப் பூத்தவன், அதோடு நில்லாமல் என் கரங்களைப் பற்றிக் கொண்டான். அவன் கையை எடுத்து விட மனமில்லாமல், அவன் கையை விலக்க வந்த அவன் தாயைத் தடுத்து விட்டேன். அந்த நான்கு வயது சிறுவனின் பிஞ்சு விரல்கள் ஒவ்வொன்றும் அத்தனை மென்மை! அவனது அழகும் நிறமும், சொல்லி முடியாது! எத்தனை இருந்தும் என்ன? அவனால் புன்னகைக்க மட்டுமே முடியுமே தவிர, மற்ற குழந்தைகளைப் போல் இயல்பாக இருக்க இயலாது. ஆம், அவன் ஒரு மன நலம் குன்றிய குழந்தை!

முதல் குழந்தையே ஆண் குழந்தையாய்ப் பிறந்த சந்தோஷத்தில் அவனுக்கு "சந்தோஷ்" என்று பெயரிட்டனர் போலும். ஆனால் இவன் பிறந்த மூன்றாம் மாதத்திலேயே குடும்பத்தின் தலையில் இடியாய் விழுந்தது இவனின் உடல் நிலை பாதிப்பு. "எத்தனையோ மருத்துவர்களை அணுகியும், சந்தோஷின் உடல் நிலையில் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை" என்று கண் கலங்கிக் கூறினார் அவன் தாய்.

இவனின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு, அவன் தாய் அளித்த பதிலை என்னால் இன்னமும் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நெருங்கிய உறவில் திருமணம் செய்ததே இவனின் நிலைக்குக் காரணம் என்று கருதுகின்றனர் இவன் குடும்பத்தார். மூன்று தலைமுறைகளாக நெருங்கிய உறவில் மட்டுமே திருமணம் செய்து கொண்ட குடும்பத்தில் பிறந்த நான், உடல் ஆரோக்கியத்துடன் நன்றாய்த் தானே இருக்கிறேன்? பிறகு இவனுக்கு மட்டும் ஏன் இப்படி ஓர் அவலம்? இறைவன் கூட பாரபட்சம் பார்ப்பவரா என்ன? நினைக்கும் போதே நெஞ்சு கனத்தது எனக்கு!

இவனைக் கருவில் சுமந்தவள் இன்னும் எத்தனைக் காலம் தான் இவனைக் கையில் சுமந்திட வேண்டும்? பெயரில் மட்டுமே சந்தோஷத்தைக் கொண்ட இச்சிறுவனும், இவன் குடும்பமும் உண்மையான சந்தோஷத்தை அனுபவிப்பது தான் எப்போது? தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிப்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் இன்னும் எத்தனைக் காலம் தான் இவன் இப்படி வெகுளியாய்ச் சிரித்துக் கொண்டிருப்பான்? இந்தக் கேள்விகளின் படையெடுப்பைச் சந்திக்க இயலாதவளாய்த் தோற்று தான் போனேன்!

வயதில் மட்டுமே முதிர்ந்த ஒரு பெண்மணி, இவனைக் கண்டு "யார் பண்ண பாவமோ, இந்த புள்ள இப்படி இருக்கு" என்று கூறியதில் என் கண்களில் நீர்க் குளம் உருவானது. எத்தனைக் கனவுகளோடும், கர்ப்பனைகளோடும் இந்த உயிரை அவன் தாய் சுமந்திருப்பாள்? மறுபிறவி எடுத்து, இவனை உலகிற்கு வழங்கிய போது என்னவெல்லாம் நினைத்திருப்பாள்? அத்தனைக் கனவுகளும் மண் கோட்டையாய்த் தகர்ந்து போன நிலையிலும், அவனிடம் அவள் பொழிந்த அன்பைக் கண்டு நான் பிரமித்துப் போனேன் என்பது மறுக்க முடியாத உண்மை! தன் மகனை எப்படியும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற வேட்கை அவளது கண்களில் மிகவும் வெளிப்படையாய்த் தெரிந்தது.

எண்ணங்களின் ஓட்டத்தோடு அன்று பேருந்தும் சற்று வேகமாய்த் தான் சென்றது. அவனை இடுப்பில் அமர வைத்துக் கொண்டு, பேருந்தை விட்டு இறங்கத் தயாரானாள் அவன் தாய். அப்பொழுதும் என் மீது புன்னகை வீசப் பட்டது. இந்த முறை, அவனுடன் சேர்ந்து அவன் தாயும் புன்னகைத்தாள். அவனது புன்னகையால் ஏற்படாத ஒரு புதிய உணர்வை, அவன் தாயின் புன்னகை என்னுள் ஏற்படுத்தியதால், மீண்டும் ஒரு நீர்க் குளம் என் கண்களில்!

பி. கு: இறைவனுக்கு ஒரு வேண்டுகோள் - அவரவர் பாவத்தை அவரவர் கணக்கிலேயே வைத்து விடவும்! "Carry forward" செய்வதாலும், "Transfer" செய்வதாலும் ஏற்படும் விளைவுகள், விபரீதமானவைகளாக இருப்பதால்!

Tuesday, December 2, 2008

சென்னை 600 077

இது ஏதோ புதியதாய் வெளிவரப்போகும் தமிழ்த் திரைப்படத்தின் விமர்சனம் இல்லை. அன்றாடம் விமர்சனத்திற்கு உள்ளாகும் எங்கள் ஊர்ச் சாலையின் அவல நிலைக்கு ஓர் அறிமுகம் மட்டுமே. பாரதிராஜாவின் "கருத்தம்மா" கிராமத்தைப் போன்றே எங்கள் ஊர் கூட ஒரு "பிரம்மாண்டமான" கிராமம் தான். "பின் கோடு" எழுதும் போது மட்டுமே நாங்களும் சென்னையின் அங்கத்தினர் என்று நினைவிற்கு வரும். எங்கள் ஊரின் தனிப் பெரும் சிறப்பு??????? சாலைகள் தான்! "சாலை" என்ற வார்த்தையை இங்கு உபயோகிப்பது சரியா என்று ஒரு தயக்கம் . அதனால் தான் அத்தனைக் கேள்விக்குறிகள். வழியெங்கும் பசுமையான மரங்கள் நாம் பயணிக்கும் போது நம்மை ஓர் அற்புத கிராமச் சூழலுக்குள் அழைத்துச் செல்கின்ற வேளையில், நகரின் மையப் பகுதிகளுக்குத் தான் ஒன்றும் சளைக்கவில்லை என்று எங்கள் ஊர் பெருமை கொள்ளும் அளவுக்கு மாசுக்குப் பஞ்சமற்ற ஊர்.

ரோலர் கோஸ்டர் பயணத்தை அனுபவிக்க, ரூ.500/- நுழைவுக் கட்டணம் செலுத்தி கிஷ்கிந்தா, வீஜீபி எல்லாம் செல்ல வேண்டாம். ரூ.4/- கட்டணத்திற்கு ஒரு பயணச் சீட்டு வாங்கினாலே போதும். பயணச் சீட்டு வாங்காமலும் கூட பயணிக்கலாம்; பெரும்பாலானோர் இப்படித் தான் பயணிக்கின்றனர் என்பது தனிக்கதை; அதை இங்கே அலசப் போவதில்லை.

கல்லூரியில் பயின்ற காலத்தில் அப்பா தான் என்னுடைய "பாய் பிரென்ட்". ஒரு பாய் பிரென்ட்-இன் பிரதான கடமை "ஓட்டுனர்" வேலை பார்ப்பது தான். அந்தப் பெருமையான வேலையை அப்பா மட்டுமே செய்து வந்தார் எனக்காக. வேலைக்குச் செல்லத் தொடங்கியப் பின்பு தான் இந்தப் பேருந்துப் போராட்டம்.

வருடத்தில் முழுதாக ஆறு மாதம் எங்கள் ஊருக்குள் பேருந்து வந்தாலே அது எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி! சாதாரணக் குடியிருப்பு வாசிகளாக இருந்த போது மக்களுக்குக் கொஞ்சம் நல்லது செய்தவர்களுக்கு வாக்களித்து தேர்தலில் வெற்றி பெறவும் செய்து விட்டோம். ஓட்டு வாங்கிய சாபத்திலோ என்னவோ அவர்களும் "அரசியல் வியாதிகளாய்" மாறிப் போய் விட்டனர். "நம்ம ஊருக்கு இப்போதைக்கு ரோடு போட மாட்டாங்கம்மா; பாவிப் பசங்க, எல்லாக் காசையும் வாங்கி ஏப்பம் விட்டுட்டானுங்க" என்று உண்மையான கவலையுடன் கூறினார் ஓர் ஆட்டோ ஓட்டுனர்.

அரசியல் வாதிகள் இப்படி ஒருபுறம் ஏப்பம் விட, எங்கள் ஊருக்குள் வரும் பேருந்துகள் இன்னும் சிறப்பானவை. மணப் பெண் தோழியர் போன்று ஒன்றாய்த் தான் வரும், ஒன்றாய்த் தான் போகும். சுதந்திர தினத்தன்று கூட நீங்கள் அப்படி ஓர் அணிவகுப்பைப் பார்க்க இயலாது. மழைக் காலங்களில் இந்தப் பேருந்தின் உள்ளேயே இன்னொரு "மழை" திரைப்படத்தை எடுத்து விடலாம். அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்ற பழமொழி போல எங்கள் ஊருக்குள் வந்தால், பேருந்தின் உள்ளேயும் குடை பிடித்தே ஆக வேண்டும்.

இந்த விஷயங்கள் எல்லாம் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் போதே அணிவகுப்பின் முதல் பேருந்து வந்தது. இறங்க வேண்டியவர்களுக்கு வழியை விட்டு, அவர்கள் இறங்கியதும், பின் கதவின் அருகிலுள்ள சீட்டின் அருகே நின்று கொண்டேன். முக்கால் படிக்கட்டுகளே இருந்த போதிலும், பேருந்தில் தொங்கிய படி பயணம் செய்வதையேக் கொள்கையாகக் கொண்ட "கொள்கை வீரர்கள்" பலருண்டு எங்கள் ஊரில். நடத்துனருக்கும் இந்தக் கொள்கை வீரர்களுக்கும் எப்பொழுதும், ஊடல் தான். குலுங்கியபடிச் சென்ற பேருந்து, பள்ளத்தில் இறங்கி ஏறியதில் உண்ட இரண்டு இட்லியும் செரித்து விட்டது எனக்கு.

கடைசி முக்கால் படியில் நின்றிருந்த வாலிபன் ஒருவன், நடத்துனரைச் சீண்டும் எண்ணத்தோடு, "அண்ணா டபுள் டெக்கெர் பஸ் விடச் சொல்லு" என்றான். சொன்னவன், அதோடு நில்லாமல், அவன் நண்பனைச் சீண்ட, அவன் "டபுள் டெக்கெர் வேணாம், பேசாம ட்ரைலர் பஸ் எடுத்து வா நாளைக்கு" என்றான். கடுப்பாகிப் போன நடத்துனர், "முதல்ல உங்க ஊர்ல ரோடு போட சொல்லுங்க டா, அப்புறம் அசோக் லேய்லாந்து-ல சொல்லி பஸ் ஆர்டர் பண்ணுங்க டா" என்றார்.

நடத்துனர் சொன்ன வார்த்தைகளில் தான் எத்தனை ஆழமான உண்மை! சாலையே இல்லாத ஊரில் எங்கு தான் பேருந்தை ஓட்டுவது? ஆனால் அதற்காக ஓட்டு போட்ட ஒரே பாவத்திற்காக ஊர் மக்களைப் பலியாக்குவது தான் எப்படி நியாயமாகும்? இதே ஊரில் வசித்து , இதே "சாலைகளில்" பயணிக்கும் அரசியல் வாதிகளுக்கு மட்டும் ஏன் இந்த பிரச்சனைப் புரியவில்லை? இப்படிப் பல கேள்விகள், என்னை நோக்கி நானேக் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், நான் இறங்க வேண்டிய இடமும் வந்தது.

நடத்துனரைச் சீண்டிய வாலிபன், பேருந்தை விட்டு இறங்கி விட்டு, "டபுள் டெக்கெர் பஸ் எல்லாம் வேணாம், இருக்கற பஸ்ஸ முழுசா கொண்டு வாங்க" என்று வேடிக்கையாய்ச் சொல்லிச் சென்றான். கொடுமை கண்டு பொங்க முடியாத என் நிலை கண்டு எரிச்சல் வந்த நிலையிலும், ஒன்றும் செய்ய இயலாதவளாய்ப் பேருந்தை விட்டு இறங்கி நடந்தேன், ஒரு சராசரி இந்தியக் குடிமகளாய்!