Saturday, October 3, 2009

நான் வந்துட்டேன்!

எனக்குப் புகழ்ச்சி பிடிக்காதுன்னு சொன்னா, கேட்டா தானே? கடைசியா எழுதின பதிவப் படிச்சிட்டு இந்த கார்க்கி சும்மா போகாம, தேவையில்லாத விளம்பரம் பண்ண, ஊர்க் கண்ணு பட்டு பிள்ளைக்கு உடம்பு சரியில்லாமா போயிட்டு (யாரு அந்தப் புள்ளன்னு கேட்க்கக் கூடாது சொல்லிட்டேன்!). இதுக்கு மேல நான் பதிவே போடக் கூடாதென்று இப்படி ஒரு கொலை வெறியானு தெரியல! வெறும் காய்ச்சல் என்று விடுப்பு எடுத்து, எங்க பிரம்மாண்ட ஊரில் ஒரு மருத்துவமனையைத் தேடிப் பிடிச்சு போனா, அந்த டாக்டரைப் பார்த்ததும், எனக்கு நம்பிக்கையே போச்சு. ஏதோ நான் வந்து மருத்துவம் பாத்து அவங்கள சுகமாக்குவேன்னு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்த மாதிரி ஒரு முக பாவனை, உடல் வாகு சொல்லவே வேணாம்! தெர்மாமீட்டர் கூட உபயோகிக்காமல், வெறும் நாடி பிடிச்சு பாத்தாங்க. ஒரு நிமிஷம் பயந்தேப் போயிட்டேன், விபரீதமா ஏதும் சொல்லிடுவாங்களோன்னு தான்! தெய்வாதீனமாக ஏதும் சொல்லாமல், விறு விறுவென்று மருந்துகளின் பெயர்களை எழுதித் தந்தார். அவரின் பெயருக்குப் பின் நீண்டதொரு பட்டியல் இருந்தது. (அம்புட்டு படிசிருக்குங்கா போல!)

அடுத்த நாள் மாலை வரையிலும் காய்ச்சல் குறையாமல் போக, வேறு வழியின்றி அப்பாவை அழைத்துக் கொண்டு அயனாவரம் சென்றேன், வழக்கமாக பார்க்கும் மருத்துவரிடம் பரிசோதனைக்காக. என்னைப் பார்த்ததும், புருவங்களை உயர்த்தி, "என்னடீ இங்கயே திரும்ப வந்தாச்சா?" என்றார் சிரித்தபடியே. "இல்லைங்க ஆன்டி, காய்ச்சல்" என்றேன். அந்த மருத்துவர் எழுதித் தந்த மருந்துச்சீட்டை அவரிடம் காட்ட, "எதுக்கு பேரசிடமால் மாத்திரையே ரெண்டு? என்று புரியாமல் வினவினார். "உங்களுக்கேத் தெரியலனா, எனக்கு எப்படி ஆன்டி தெரியும்" என்று காய்ச்சலிலும் அவரை வம்பிழுக்காமல் இருக்க முடியவில்லை. மூன்று நாட்களுக்கு மருந்துகளை எழுதிக் கொடுத்து, "பன்றிக் காய்ச்சல் எல்லாம் இல்லடீ, பயப்படாத" என்றார் சிரித்துக் கொண்டே. நானும் பதிலுக்கு, "தெரியும் ஆன்டி, அது மனுஷங்களுக்கு தான் வரும்னு சொன்னாங்க, அதனால எனக்குக் கொஞ்சம் கூட பயமில்ல" என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

மூன்று நாட்கள் முடிந்தும் காய்ச்சல் குறையாமல் போக, இரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார்கள். அடுத்த கட்ட சோதனை. ஒரு பெரிய ஊசியில் ரத்தத்தை எடுத்து, நான்கு குழாய்களில் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தார் அந்தப் பரிசோதகர். வந்த கோபத்திற்கு அந்த மனுஷனைக் கொன்று போடத் தோன்றியது எனக்கு. அடுத்த நாள் முடிவுகள் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். மறுநாள் வந்ததெனக்கு அந்தக் கெட்ட செய்தி. டைபாய்டு காய்ச்சல் என்றும், உடலில் அதனளவு அதிகமாய் இருத்தினால் மூன்று நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது நல்லதென்றும் சொன்னார் மருத்துவர்! அன்று அமாவாசைக்கு முதல் நாள் என்பதால், அம்மா அமாவாசை அன்று மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தார். அந்த ஒரு நாள் முழுதும் எனக்கு தூக்கம் வரவேயில்லை. வீட்டிலேயே இருக்கிறேன் என்று எவ்வளவு போராடியும், யாரும் கேட்பதாய் இல்லை. என்னை முழு மூச்சாக ஒரு நோயாளி ஆக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தார்கள்.

மறுநாள் அண்ணா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னை அறைக்கு அழைத்துச் சென்ற செவிலியர், என்னுடன் வரும் போதே தேவையான ஊசிகளையும் மருந்துகளையும் எடுத்துக் கொண்டார். அது அனைத்தையும் விட என்னை அலறச் செய்தது Venflon தான்! கையில் ஏதோ ஒரு குழாயைப் போடுவதைப் போல் சர்வசாதாரணமாக அதில் ஒவ்வொரு மருந்தாகச் செலுத்தத் தொடங்கினார்கள். அப்பாவை வீட்டிற்குப் போகும்படி சொல்லிவிட்டு, மாலை வரைத் தனியாய் இருந்தேன். பிறகு மூன்று நாட்கள் கட்டாயம் இருந்தாக வேண்டும் என்று அங்கும் சொல்ல, வேறு வழியின்றி மூன்று நாட்கள் நானும் நோயாளியானேன்!!!



மூன்று நாட்களில், இரண்டு பாட்டில் ட்ரிப், இருபது ஊசிகள், நாற்பது மாத்திரைகள் என்று படாத பாடுபட்டுப் போனேன். போதாக் குறைக்கு, இடது கை வீக்கம் கொள்ள, அதிலிருந்த Venflon-ஐ எடுத்துவிட்டு, வலது கையில் வேறொரு புது Venflon போடப்பட்டது. குண்டூசி குத்தி ரத்தம் வந்தாலே ஒரு பெரிய ஒப்பாரி வைத்து, மூன்று நாட்களுக்கு மருந்து வைத்துக் கட்டும் தைரியசாலிப் பெண் நான். இந்த அழகில் இரண்டு கையும் Venflon-ஆல் பதம் பார்க்கப்பட்ட போதும் கொஞ்சம் கூட கண்ணீர் வரவில்லை. (ஒரு வேளை, அம்மா சொல்ற மாதிரி நான் வளந்துட்டேனோ???) இந்த இம்சைகளை எல்லாம் விட பெரிய கொடுமையொன்று எனக்காகக் காத்திருந்தது. மருத்துவமனையிலிருந்து செல்லும் முன், ஒரு பெரிய NO பட்டியலிட்டார் மருத்துவர். அதிலிருந்த அனைத்தும் நான் விரும்பி உண்ணும் விஷயங்கள் மட்டும். ஆகா, அஸ்திபாரம் ஆட்டம் கொண்டது! உடல் நலம் விசாரிக்கும் அனைவரிடமும் சொன்ன ஒரே விஷயம், "My life is not gonna be spicy for the next six months :-(" என்று.

காய்ச்சல் ஆரம்பித்த பதினைந்து நாட்கள் முடிந்ததுமே வேலையில் சேர்ந்து விட்டேன். உடலில் கொஞ்சம் கூட தெம்பிருக்கவில்லை. எங்கேனும் விழுந்து விடுவேன் போல் தோன்ற, வழி நெடுக பிரார்த்தனைகளோடு தொடர்ந்தேன் என் பயணத்தை. மனதில் மட்டும் தெம்பு குறையாமலிருக்க ஒரு வழியாக அலுவலகம் சேர்ந்தேன். என் உடல் நலன் மேல் அக்கறை கொண்டு, கிளை அலுவலகத்திற்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். இதோ, ஒரு மாத காலமாக, எங்களின் தலைமை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். உடல் நிலை கொஞ்சம் தேறினாலும், உணவுப் பழக்கங்களில் பெரிதாய் ஒரு மாற்றமும் இல்லை. இப்படிக் கடும் பத்தியம் இருந்தும் கூட ஒரு அங்குலம் கூட குறையவில்லை உடல் மட்டும். என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் கேட்கும் ஒரே கேள்வி, "டைபாய்டு வந்தா எல்லாரும் மெலிஞ்சுடுவாங்கனு சொல்வாங்க? உன்னப் பாத்தா அப்படி தெரியலியே?" என்று எல்லாரும் கேட்க, மிகுந்தக் கடுப்போடு இருக்கிறேன்.

இப்போதைக்கு எனக்கிருக்கும் ஒரே ஆறுதல், ரயில் பயணங்கள் மட்டும் தான். ஆமாம், இப்பொழுதெல்லாம் மூன்று பேருந்துகள் மாறி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. வீட்டின் அருகிலேயே ரயில் நிலையம் இருப்பதால், இப்பொழுது பயணங்களில் அயர்வு ஏற்படுவதில்லை. மட்டுமலாமல், உடன் பணிபுரிவோரில் இருவர் துணை வேறு! எங்கும் வாயோயாமல் பேசியபடியே செல்வதால், கொஞ்சம் தெம்பு கூடிவிட்டது உடலில். இருக்காத பின்ன, சாப்பாடு இல்லாமல் கூட உயிர் வாழ்ந்திடுவேன், பேசமாலிருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். நல்ல விஷயமாக பிற மொழிகள் பேசக் கற்றுக் கொள்ளத் துவங்கியுள்ளேன். தேசிய மொழி தான் முதல் பலியாடு! அதற்காகப் பதிவெழுதுவதை நிறுத்தி விட்டு, உங்களையெல்லாம் நிம்மதியாக வாழ விடுவேன் என்ற பேராசை வேண்டாம். ரயில் பயணங்களில் பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகிறேன்.

பி. கு: தமிழ் இனி மெல்லச் சாகும்! :-)

10 comments:

ஜானி வாக்கர் said...

நல்ல நகைச்சுவை உங்க எழுத்துல.

//இருக்காத பின்ன, சாப்பாடு இல்லாமல் கூட உயிர் வாழ்ந்திடுவேன், பேசமாலிருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.//

இது தான் ரெம்பொ டாப்.

Thamira said...

ஆங்காங்கே நகைச்சுவை வெடிகளுடன் சோக அனுபவத்தையும் சுவாரசியம் குன்றாமல் தந்திருக்கிறீர்கள். தொடர்க.

பிழையற்றது. சுவாரசியமானது. இந்த இரண்டு போதும் எழுத.. பி.கு வை எடுத்துவிடுங்கள், பொருத்தமற்றிருக்கிறது!

ஆயில்யன் said...

/இந்த அழகில் இரண்டு கையும் Venflon-ஆல் பதம் பார்க்கப்பட்ட போதும் கொஞ்சம் கூட கண்ணீர் வரவில்லை//

பார்த்தாலே அரண்டு விடுவேன் - படம் பார்த்ததுமே சற்று நடுங்கித்தான் போனேன் :(

மனதளவில் கூடியிருக்கும் தெம்போடு உடலளவில் சற்று தெம்பினை ஏற்றிக்கொள்ள ஓய்வும் அவசியம்!

வாழ்த்துக்களுடன்...!

ஆயில்யன் said...

ஆதி சொல்வது போல பின்குறிப்பு தேவையற்றது!

நீக்கிவிடுங்கள்! பதிவிலிருந்து மட்டுமல்ல, உங்கள் மனதின் எந்த ஓரத்தில் இருந்தாலும்....!

:))

R.Gopi said...

//"பன்றிக் காய்ச்சல் எல்லாம் இல்லடீ, பயப்படாத" என்றார் சிரித்துக் கொண்டே. நானும் பதிலுக்கு, "தெரியும் ஆன்டி, அது மனுஷங்களுக்கு தான் வரும்னு சொன்னாங்க, அதனால எனக்குக் கொஞ்சம் கூட பயமில்ல.//

ஆஹா... என்ன‌ வில்லித்த‌ன‌ம்.... உட‌ம்பு ச‌ரியில்லைன்னா கூட‌ இது குறைய‌வில்லை...

//வந்த கோபத்திற்கு அந்த மனுஷனைக் கொன்று போடத் தோன்றியது எனக்கு.//

ந‌ல்ல‌ வேளை ... அந்தாளு த‌ப்பிச்ச‌தே பெரிய‌ விஷ‌ய‌ம்...

//என்னை முழு மூச்சாக ஒரு நோயாளி ஆக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தார்கள்.//

உங்களையேவா....

//அனைத்தையும் விட என்னை அலறச் செய்தது Venflon தான்.//

சரிதான்... வென்ஃப்ளான் பாக்கறதுக்கே பயமா இருக்கு...

//மூன்று நாட்களில், இரண்டு பாட்டில் ட்ரிப், இருபது ஊசிகள், நாற்பது மாத்திரைகள் என்று படாத பாடுபட்டுப் போனேன்.//

ஓ..ஹோ...டூ மச்...டூ டூ மச்.. இப்போ எப்படி இருக்கீங்க...

//"டைபாய்டு வந்தா எல்லாரும் மெலிஞ்சுடுவாங்கனு சொல்வாங்க? உன்னப் பாத்தா அப்படி தெரியலியே?" //

ம்ம்... நம்ம கஷ்டம்.. அடுத்தவங்களுக்கு எங்க தெரியும்??

//எங்கும் வாயோயாமல் பேசியபடியே செல்வதால், கொஞ்சம் தெம்பு கூடிவிட்டது உடலில்.//

இந்த கலவரத்துலயும் ஒரு கிளுகிளுப்பு....

//சாப்பாடு இல்லாமல் கூட உயிர் வாழ்ந்திடுவேன், பேசமாலிருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.//

இந்தியனால பேசாம இருக்க முடியாதுன்னு பாலகுமாரன் "பாட்சா" படத்தில் வசனம் எழுதியது ஞாபகம் வந்தது... உண்மைதானோ??

//தேசிய மொழி தான் முதல் பலியாடு! அதற்காகப் பதிவெழுதுவதை நிறுத்தி விட்டு, உங்களையெல்லாம் நிம்மதியாக வாழ விடுவேன் என்ற பேராசை வேண்டாம். //

அதானே... ந‌ம‌க்கு அவ்ளோ எல்லாம் கொடுப்பினை இருக்கா என்ன‌...

//பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகிறேன்.//

ப‌திவிடுங்க‌ள்... ப‌டிக்க‌ காத்திருக்கிறோம்...

ISR Selvakumar said...

எனக்கு டைபாய்டு வந்தபோது நான் புது மாப்பிள்ளை.(ஒரு வேளை அதனாலதான் டைபாய்டு வந்துச்சா?) வீட்டிலேயே பொண்டாட்டியின் அபார கவனிப்பு. பத்தாத குறைக்கு பத்து வருஷமா தெரிஞ்ச டாக்டர், அப்பப்போ கொக்கோ கோலா குடிக்கச் சொன்னார். சாப்பிடுவதும், தூங்குவதுமாக அரை மயக்கத்திலேயே அரை மாதத்தை கழித்தேன். அதுக்கப்புறம் உங்களுக்கு தந்தது போலவே எனக்கும் பெரிய No list கொடுத்தார்கள். அதை follow பண்ணினேனா என்று தெரியவில்லை. ஆனால் மெலிந்து மெலிந்து குண்டானது மட்டும் ஞாபகமிருக்கிறது. ஏனென்றால் என் பொண்டாட்டியின் கூற்றுபடி நான் இப்போதும் குண்டுதான்.

ப்ரியா கதிரவன் said...

Take care of yourself.

கார்க்கிபவா said...

//பிழையற்றது. சுவாரசியமானது. இந்த இரண்டு போதும் எழுத..//

தலையே சொல்லிட்டாரு. அப்புறம் என்ன?

பி.கு தேவை இல்லைன்னு மக்கள் சொன்னது ஏன்னு புரியலையா? நீங்க பதிவு போட்டா தமிழ் எப்படி மெல்ல சாகும்? பொட்டுன்னு போயிடாதா என்று கேட்கிறார்கள். இது புரியாம..

// "டைபாய்டு வந்தா எல்லாரும் மெலிஞ்சுடுவாங்கனு சொல்வாங்க? உன்னப் பாத்தா அப்படி தெரியலியே?" என்று எல்லாரும் கேட்க, மிகுந்தக் கடுப்போடு இருக்கிறேன்//

அப்போ டைபாய்டுக்கு முன்பு எப்படி இருந்திருப்பிங்க? ஆவ்வ்வ்வ்

மருத்துவமனி சென்றாலும் மோதிரத்தை கழட்டவில்லையே!! திருமண மோதிரமா? :))

புன்னகை said...

@ஜானி வாக்கர்,
உண்மையச் சொன்னா, டாப்பா தாங்க இருக்கும்!

**********
@ஆதிமூலகிருஷ்ணன்,
//பி.கு வை எடுத்துவிடுங்கள், பொருத்தமற்றிருக்கிறது!//
இன்னுமா இந்த உலகம் நம்புது??? பின்குறிப்பை எடுத்து விட்டால், உங்களது பின்னூட்டம் பொருத்தமற்றிருக்கும் என்று அடித்து விட்டேன் :-)

**********
@ஆயில்யன்,
படம் பார்த்தே பயந்து போனீங்களா? அந்த புகைப்படம் எடுத்ததே நான் தாங்க! ;-) அலுவலகத்தில் அனைவரின் காதிலும் ரத்தம் வருவதைப் பார்த்தால் உடலிலும் தெம்பு கூடிவிட்டது என்று தான் நினைக்கிறேன். பின்குறிப்பை அடித்து விட்டேன்.

**********
@R.Gopi,
பதிவைப் பிரித்து போட்டு மேய்ந்ததற்கு ஒரு பெரிய நன்றி!!! :-)

**********
@r.selvakkumar,
உங்க மனைவி ரொம்ப நல்லவங்க போல, அதான் உங்களுடைய உணவுப் பழக்கங்கள் தப்பித்திருக்கிறது. எங்க அம்மா அப்படி இல்லைங்க. எனக்காக தனி சமையல் தான் வீட்டில். நல்ல வேலையாக இன்னும் திருமணம் ஆகவில்லை, இல்லைனா அவருக்கு தான் கஷ்டம்! ;-)

**********
@ப்ரியா,
உங்கள் அன்பிற்கு நன்றி அக்கா!

**********
@கார்க்கி,
//நீங்க பதிவு போட்டா தமிழ் எப்படி மெல்ல சாகும்? பொட்டுன்னு போயிடாதா என்று கேட்கிறார்கள்.//
உங்கள மாதிரி பெரியவங்க இருக்கும் போது, நானெல்லாம் வெறும் கத்துகுட்டி தானே! ;-)

//அப்போ டைபாய்டுக்கு முன்பு எப்படி இருந்திருப்பிங்க? ஆவ்வ்வ்வ்//
நான் கேட்டேனா???

//மருத்துவமனி சென்றாலும் மோதிரத்தை கழட்டவில்லையே!! திருமண மோதிரமா?//
இரண்டு மோதிரம் இருக்கே, இரண்டு கல்யாணமானு கேட்காம விட்டதற்கு ஒரு பெரிய நன்றி! மோதிர விரலில் அணிந்திருக்கும் மோதிரத்தில் எனது பெயர் தான் இருக்கும். கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே அணிந்திருக்கிறேன், "committed to myself" என்று சொல்வதற்காக.

விக்னேஷ்வரி said...

நல்ல சுவாரசியமான எழுத்து நடை உங்களுக்கு. நிறைய எழுதுங்க. ரொம்ப நல்லாருக்கு.
இப்போ உடம்பு சரியாகிடுச்சா...