கல்லூரியில் சேரும் போது என் எடை வெறும் 45 கிலோ தான். வயதிற்குக் குறைவான எடை என்று அம்மா எப்போதும் புலம்பியதால், கொஞ்சம் அதிகம் சாப்பிட ஆரம்பித்து இளங்கலைப் பட்டம் முடித்த போது என் எடை 47 கிலோவாக மாறியதில் அம்மாவிற்கு கொஞ்சம் சந்தோஷம். ஆனால் பணியில் அமர்ந்த இரண்டே ஆண்டில் எடை 50 கிலோவானது. சரி இருக்கட்டும் என்று கொஞ்சம் விட்டது தான் பிரச்சனை. நான்கே மாதத்தில் 2 கிலோ கூடி இப்போது என் எடை 52 கிலோவானது. ஏதாவது செய்து எடையைக் குறைத்தாக வேண்டும் என்ற முயற்சியில் தினமும் நடைப் பயிற்சி செய்யலாம் என்று முடிவு செய்தேன்.
போகி அன்று இரவு எப்படியும் வீட்டிற்கு நடந்தே செல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் பேருந்தை விட்டு இறங்கினேன். என் கைக் கடிகாரம் சரியாக இரவு 08.05 என்று காட்ட, எப்படியும் இரவு 09.00 மணிக்குள் வீட்டினை அடைந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் துவங்கியது எனது நடை பயணம். இவ்வளவு தூரம் நடந்து பழக்கம் இல்லாததால், களைப்புத் தெரியாமல் இருக்கட்டும் என்று என் கைப்பேசியின் வானொலியில் பாடல்களைக் கேட்டபடி நடந்தேன்.
பாதி தூரத்தைக் கடந்த பிறகும் கூட என் கடிகாரம் இரவு 08.25 என்று காட்ட, கொஞ்சம் கூடுதல் சந்தோஷம் மனதிற்குள். வானொலியில் வேறு எனக்கு பிடித்தமான பாடல்களாக ஒலிக்க, நடையில் வேகம் கூடியது, என்னையும் அறியாமல். இன்னும் இரண்டு தெருக்களைக் கடந்தால் வீட்டை அடைந்து விடலாம் என்ற நினைப்போடு நடந்து கொண்டிருந்த போது, வண்டியை நிறுத்திவிட்டு இரண்டு ஆண்கள் நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். ஆனால் யார் என்று சரியாகப் பார்க்கவில்லை. அட, அத்தனை நல்லப் பெண் ஒன்றும் இல்லை நான். எங்கள் ஊரில், "நின்று பார்க்கும்" அளவுக்கு யாரும் இல்லை, அவ்வளவு தான்.
அந்த ஆண்களைக் கடந்து சென்ற பிறகு தெரு விளக்கு ஏதும் கிடையாது. அங்கிருந்து குறைந்தது 7 நிமிடத்தில் வீடு சேர்ந்து விடலாம் என்ற நினைப்போடு வானொலி அலைவரிசையை மாற்ற நான் முயன்று கொண்டிருந்த போது தான் நடந்தது அந்தச் சம்பவம். கழுத்தின் மீது ஏதோ வருடியது போல் இருக்க, கழுத்தின் மீது நான் கை வைத்துப் பார்க்கும் முன், நான் கூறிய அந்த இரண்டு பேரில் ஒருவன் வண்டியை ஓட்டிக் கொண்டுவர, பின்னே அமர்ந்திருந்தவன் என் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பற்றி இழுத்தான். இழுத்த வேகத்தில் சங்கிலியும் அவன் கையேடு போக, செய்வதறியாது நின்றேன்.
முதலில் எனக்குத் தோன்றிய விஷயம் அந்த வண்டியின் எண்ணைக் குறித்துக் கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால் அங்கு தெரு விளக்கு ஏதும் இல்லாமல் போனதால், என்னால் அந்த வண்டியின் எண்ணைக் காண முடியவில்லை. மட்டும் அல்லாமல், வண்டியும் வேகமாகச் சென்றதால், அந்த இருவரின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் போனது. அங்கேயே நின்று கொண்டிருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று வீட்டை அடைந்தேன்.
வீட்டிற்கு வந்ததும் விஷயத்தைச் சொன்னால் எல்லோரும் பயந்து போவார்கள் என்று, ஒரு 10 நிமிடம் ஏதும் சொல்லாமல் வெகு இயல்பாக இருந்தேன். பிறகு எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நேரம், "அம்மா செயின் snatch பண்ணிட்டாங்க மா" என்றேன். அம்மா பதறிப் போய் என்னையே பார்த்துக் கொண்டிருக்க, "வாண்டு சும்மா விளையாடுது" என்றார் அக்காவின் கணவர். (நான் கொஞ்சம் "சமீரா ரெட்டி" உயரம், அதனால் தான் "வாண்டு"). அக்கா என் அருகில் வந்து என் கழுத்தைப் பார்த்து "நெஜம்மா தான் சொல்றா" என்றாள்.
அம்மா சொன்ன வார்த்தைகள் இன்னமும் ஒலிக்கின்றது என் காதுகளில். "செயின் போனா போது, என் குழந்தைக்கு ஒன்னும் ஆகலியே அது போதும்" என்றாள் அம்மா கண்கள் கலங்கி. அப்பா மட்டும் ஏதும் சொல்லாமல் இருந்தார். 2 சவரன் தங்கச் சங்கிலி தொலைந்து போன வருத்தம் அவருக்காவது இருக்கட்டும் என்று ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை அப்பாவிடம்.
அன்றிரவு முழுதும் தொண்டையில் பயங்கர வலி. பின் புறமிருந்து அவன் இழுத்ததில் தொண்டை அதிகமாகவே அழுந்தியது. என் கவலை எல்லாம் எங்கே பேச முடியாமல் போய் விடுமோ என்று தான். நம்மால பேசாம எல்லாம் உயிர் வாழ முடியாதே! அதான் என் கவலை. கொஞ்ச நேரம் எனக்கு நானே பேசிப் பார்த்துக் கொண்டேன். பேச முடிந்தது. சரி என்று, நெருங்கிய தோழியைக் கைப்பேசியில் அழைத்து அவளிடம் பாதிக் கதையைச் சொல்லும் போதே கண்ணீர் வழியத் தான் செய்தது. எனக்கும் அந்த தங்கச் சங்கிலிக்கும் ஒரு 8 வருட பந்தம்!
மறு நாள் காலை பொங்கலன்று உறங்கிக் கொண்டிருக்கும் போது, கழுத்தில் மீண்டும் ஏதோ வருட, திடுக்கென்று விழித்துக் கொண்டேன். என் அருகே அப்பா நின்று கொண்டு என் கழுத்தைத் தடவிக் கொடுத்தார். "வலி எல்லாம் ஒன்னும் இல்லல மா" என்றார் என் தொண்டையை வருடிக் கொடுத்தபடி. "இல்லப் பா" என்று புன்னகைத்தேன். முன் தினம் இருந்த வலி காணாமல் தான் போனது என் அப்பா தடவிக் கொடுத்ததில் :)
Friday, January 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
@Manu,
தனியாப் போறதா? நீங்க வேற! இப்போ எல்லாம், பஸ் விட்டு இறங்கும் முன்னமே வீட்டுக்கு போன் செய்து, அப்பா வந்து தான் அழச்சிட்டு போறாங்க. சூடு பட்ட பூனை கதை ஆகிட்டு என்னோட கதை இப்போ :)
ம் பாத்து பொறுப்பா போக தெரியல, வாய் மட்டும் கேளுங்க, பிளாக் வரைக்கு வருது, வீட்ல திட்டறக்கு ஆள் இல்லைல அதன, திட்டி பாக்கலாம்னு.
@ரிதன்யா,
ரொம்ப சின்ன பொண்ணு நான். அதான் யாருக்கும் என்ன திட்ட மனசு வரல. முதல் திட்டு உங்ககிட்ட இருந்து தான். உங்கள் திட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! :-)
Post a Comment