Wednesday, December 17, 2008

அவன் பெயர் சந்தோஷ்

அலுவலகத்திற்கு வந்து ஒரு மணி நேரம் ஆன பிறகும் கூட வேலையில் மனம் ஈடுபடவில்லை எனக்கு. பேருந்தில் கண்ட அவனது புன்னகை மட்டுமே நிழலாய்த் தொடர்வதால், கண் முன்னே வேறேதும் தெரியவில்லை எனக்கு. அந்த பேருந்தில் எத்தனை பேர் அவனது புன்னகையைக் கண்டனர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவன் புன்னகையைத் தவிர வேறொன்றையும் என்னால் காண முடியவில்லை என்பதே உண்மை! பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த என் அருகே அமர்ந்த அவன் வீசிய மந்திரப் புன்னகையில் இருந்து இன்னமும் மீள முடியாமல் நான்!

புன்னகைப் பூத்தவன், அதோடு நில்லாமல் என் கரங்களைப் பற்றிக் கொண்டான். அவன் கையை எடுத்து விட மனமில்லாமல், அவன் கையை விலக்க வந்த அவன் தாயைத் தடுத்து விட்டேன். அந்த நான்கு வயது சிறுவனின் பிஞ்சு விரல்கள் ஒவ்வொன்றும் அத்தனை மென்மை! அவனது அழகும் நிறமும், சொல்லி முடியாது! எத்தனை இருந்தும் என்ன? அவனால் புன்னகைக்க மட்டுமே முடியுமே தவிர, மற்ற குழந்தைகளைப் போல் இயல்பாக இருக்க இயலாது. ஆம், அவன் ஒரு மன நலம் குன்றிய குழந்தை!

முதல் குழந்தையே ஆண் குழந்தையாய்ப் பிறந்த சந்தோஷத்தில் அவனுக்கு "சந்தோஷ்" என்று பெயரிட்டனர் போலும். ஆனால் இவன் பிறந்த மூன்றாம் மாதத்திலேயே குடும்பத்தின் தலையில் இடியாய் விழுந்தது இவனின் உடல் நிலை பாதிப்பு. "எத்தனையோ மருத்துவர்களை அணுகியும், சந்தோஷின் உடல் நிலையில் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை" என்று கண் கலங்கிக் கூறினார் அவன் தாய்.

இவனின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு, அவன் தாய் அளித்த பதிலை என்னால் இன்னமும் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நெருங்கிய உறவில் திருமணம் செய்ததே இவனின் நிலைக்குக் காரணம் என்று கருதுகின்றனர் இவன் குடும்பத்தார். மூன்று தலைமுறைகளாக நெருங்கிய உறவில் மட்டுமே திருமணம் செய்து கொண்ட குடும்பத்தில் பிறந்த நான், உடல் ஆரோக்கியத்துடன் நன்றாய்த் தானே இருக்கிறேன்? பிறகு இவனுக்கு மட்டும் ஏன் இப்படி ஓர் அவலம்? இறைவன் கூட பாரபட்சம் பார்ப்பவரா என்ன? நினைக்கும் போதே நெஞ்சு கனத்தது எனக்கு!

இவனைக் கருவில் சுமந்தவள் இன்னும் எத்தனைக் காலம் தான் இவனைக் கையில் சுமந்திட வேண்டும்? பெயரில் மட்டுமே சந்தோஷத்தைக் கொண்ட இச்சிறுவனும், இவன் குடும்பமும் உண்மையான சந்தோஷத்தை அனுபவிப்பது தான் எப்போது? தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிப்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் இன்னும் எத்தனைக் காலம் தான் இவன் இப்படி வெகுளியாய்ச் சிரித்துக் கொண்டிருப்பான்? இந்தக் கேள்விகளின் படையெடுப்பைச் சந்திக்க இயலாதவளாய்த் தோற்று தான் போனேன்!

வயதில் மட்டுமே முதிர்ந்த ஒரு பெண்மணி, இவனைக் கண்டு "யார் பண்ண பாவமோ, இந்த புள்ள இப்படி இருக்கு" என்று கூறியதில் என் கண்களில் நீர்க் குளம் உருவானது. எத்தனைக் கனவுகளோடும், கர்ப்பனைகளோடும் இந்த உயிரை அவன் தாய் சுமந்திருப்பாள்? மறுபிறவி எடுத்து, இவனை உலகிற்கு வழங்கிய போது என்னவெல்லாம் நினைத்திருப்பாள்? அத்தனைக் கனவுகளும் மண் கோட்டையாய்த் தகர்ந்து போன நிலையிலும், அவனிடம் அவள் பொழிந்த அன்பைக் கண்டு நான் பிரமித்துப் போனேன் என்பது மறுக்க முடியாத உண்மை! தன் மகனை எப்படியும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற வேட்கை அவளது கண்களில் மிகவும் வெளிப்படையாய்த் தெரிந்தது.

எண்ணங்களின் ஓட்டத்தோடு அன்று பேருந்தும் சற்று வேகமாய்த் தான் சென்றது. அவனை இடுப்பில் அமர வைத்துக் கொண்டு, பேருந்தை விட்டு இறங்கத் தயாரானாள் அவன் தாய். அப்பொழுதும் என் மீது புன்னகை வீசப் பட்டது. இந்த முறை, அவனுடன் சேர்ந்து அவன் தாயும் புன்னகைத்தாள். அவனது புன்னகையால் ஏற்படாத ஒரு புதிய உணர்வை, அவன் தாயின் புன்னகை என்னுள் ஏற்படுத்தியதால், மீண்டும் ஒரு நீர்க் குளம் என் கண்களில்!

பி. கு: இறைவனுக்கு ஒரு வேண்டுகோள் - அவரவர் பாவத்தை அவரவர் கணக்கிலேயே வைத்து விடவும்! "Carry forward" செய்வதாலும், "Transfer" செய்வதாலும் ஏற்படும் விளைவுகள், விபரீதமானவைகளாக இருப்பதால்!

6 comments:

புன்னகை said...

@Manu,
உங்கள் கண்ணீருக்கும், வேண்டுதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
நானும் காதல் வசப்பட்டவள் தான்! தமிழ் மீது கொண்ட காதலின் நிமித்தம் தான் எழுதவேத் தொடங்கியுள்ளேன் :)

Raich said...

Punnagai,
This blog really touches my heart.
Once I went to a orphanage where I could see many children like this.
They dont want anything from us except our Love.
I was touched by the innocence and the smile they have.
Hope the almighty bless them and let these children get cured soon.

புன்னகை said...

@Raich,
வருகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி! :)

ny said...

அழகிய நிகழ்வு!

என் வாதம்.. குறையொன்றும் இல்லையென்பது தான்..
இவனிடத்தும் இறைவனிடத்தும்!
கொஞ்சம் அழுது பின் விழுதாவோம்...

பெயரோடு அவனும் 'சந்தோஷ்' !!

புன்னகை said...

@Kartin,
வருகைக்கு நன்றி!
//கொஞ்சம் அழுது பின் விழுதாவோம்//
மெய்சிலிர்ந்தே போனேன் இந்த வார்த்தைகளில்!

Thamira said...

நல்லதொரு உணர்வுப்பூர்வமான பதிவு.!