Tuesday, September 27, 2011

ஔவைக்கு நன்றி

சுமார் ஓராண்டு காலம் ஆகிவிட்டது பதிவுகள் எழுதி. பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தும், திருமணப்பணிகள் என்னை எழுதவிடாமல் மூழ்கடித்துவிட்டன. ஆம். தாய்வீட்டில் இருந்து வெளிவந்து ஐந்து மாதமும், தாய்நாட்டைப் பிரிந்து மூன்று மாதங்களும் உருண்டோடிவிட்டன. தினமும் காலையில் அலைபேசியில் அம்மா அப்பாவிடம் பத்து நிமிட நலம் விசாரித்தாலும், நாள் முழுக்க அவர்களின் நினைவுகளும் என்று நகர்ந்து கொண்டிருக்கிறது என் நிகழ்காலம். நம்மை ஆண்டவன் தேசத்தில் நான் இங்கு சுதந்திரமாய் திரிந்தாலும், நற்றமிழ் நாடி அலைகிறது மனது! தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வசிப்பதால், நான் கொஞ்சம் பிழைத்தேன்! தமிழுக்காக எழுதாவிடில், தமிழறிந்து பயன் இல்லை. அதான், இன்றைய நிகழ்வொன்றை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரைந்து எழுதுகிறேன்.

எனது மொழி ஆர்வத்திற்கும், மொழியுணர்வுக்கும் வித்திட்டவர் அப்பா தான். நான் தமிழில் சரளமாக எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டது அவரால் தான். தமிழெழுத்துக்களை யாரும் சரியாக உச்சரிக்காமல் போகும் போது, நெஞ்சில் ஏதோ பெருத்த வலி ஏற்படுவதும் அவரிடம் இருந்து தொற்றிக்கொண்டவைகளில் ஒன்று. பள்ளிப்பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டவர் அப்பா. தான் பள்ளியில் படித்த சங்க இலக்கிய பாடல்கள் பலவற்றையும் இன்னமும் ஒற்றை வார்த்தை மறவாமல் சொல்லும் அளவுக்கு தமிழ் நாட்டம் அவருக்கு. பணியிலிருந்து ஓய்வுபெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையிலும் அவருக்கு எந்த அலுப்புமின்றி பொழுது கழிவது திருவாசகத்துடனும் சித்தர்களின் பாடல்களுடனும் தான். நான் இங்கு கிளம்பி வந்த போதும், பாரதியையும் பாரதிதாசனையும் அவருக்குத் துணையாக இருக்கட்டும் என்று விட்டு வந்துவிட்டேன்.

காலையில் வழக்கம் போல், கணவர் அலுவலகத்திற்கு கிளம்பியதும், காலை உணவு முடிந்த பிறகு, அம்மாவுக்கு அலைபேசியில் அழைத்தேன். அப்பா இயல்பில் அதிகம் பேசாதவர். "எப்படி இருக்கீங்க, சாப்டீங்களா" போன்ற கேள்விகளும், அவைகளுக்கான ஒற்றை பதில்களுமாகவே முடிகிறது அப்பாவிடமான எல்லா உரையாடல்களும். இன்று ஏதோ அதிசயமாக, நேற்று இங்கு பெய்த மழை பற்றி அப்பாவிடம் பேசத் துவங்கினேன். "இங்க பேய் மழை நேத்து சாயந்திரம்" என்றதும், "நம்ம ஊரு மழையை விடவாம்மா?" என்றார். நம்மூரில் வரும் "தூறல்" தான் இங்கு "மழை" என்பதை விளக்கிவிட்டு,
கடந்த நான்காண்டு காலத்தில் இந்த அளவிற்கு மழை இருந்ததில்லை என்று கணவர் சொன்னதையும் சொல்லிவிட்டு, குறும்பாக சொன்னேன்,

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.


ஓரிரு நொடிகள் பதிலற்று, பிறகு தனது மௌனப்பொழுதுகளை நீக்கி அவர் சொன்னார் "தமிழ் நிக்குது!" என்று. இரு வார்த்தைகளில் எண்ணிலடங்கா உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்தது எனக்கு. "தமிழ் எப்பவும் நிக்கும் அப்பா" என்று சொல்லிவிட்டு இன்றைய
அழைப்பைத் துண்டித்தேன்.

எந்த நொடிப்பொழுதில் உதித்தது இந்த மொழிக்கான பிணைப்பு என்று புரியவில்லை, ஆராயவும் அவசியமில்லை. தாய்மொழி என்பது ஒருவரின் குருதியில் கலந்த ஒன்றென்பது எனது கருத்து. பாலூட்டி வளர்ததென்னவோ
தாயாக இருந்த போதிலும், தமிழ்ப் பாலூட்டி வளர்த்தது அப்பா எனக்குத் தந்துள்ள பெரும் செல்வம்! தமிழ் என்றும் நிலைத்து நிற்கும், மட்டுமின்றி நாம் நிலைத்திருப்பதும் தமிழால் தான்.

9 comments:

கார்க்கிபவா said...

Me the firsttttttttttt

Truth said...
This comment has been removed by the author.
ப்ரியா கதிரவன் said...

Husband Present; (Why deleted?)

Friend Present;

Akka? Naanum present :)

Keep writing Ramya.

Truth said...

welcome பேக்

Truth said...

ஒரு சீரியஸ் போஸ்டுக்கு மொக்கையா கமென்ட் வேணாம்னு தான் டிலிட்டினேன் :-)

SURYAJEEVA said...

ஆம்.... மீண்டும் வருக

கார்க்கிபவா said...

//ஒரு சீரியஸ் போஸ்டுக்கு மொக்கையா கமென்ட் வேணாம்னு தான் டிலிட்டினேன் :-)//

என்னை நேராவே திட்டலாம் கிரன் :)

raj said...

Hi Ramya,

How are you this is nice keep writing awaiting for more post's.
Am Rajesh From FCm

பொன்.பாரதிராஜா said...

அன்பு தங்கைக்கு!!!உங்கள் (தங்கை என்ற பிறகு) உன் தமிழ் பாசத்துக்கு உன் சகோதரனின் சந்தோசம்!!!ஆனால் வாழ்த்துக்கள் இல்லை!!!
சில விஷயங்கள்,
எனது மொழி ஆர்வத்திற்கும், மொழியுணர்வுக்கும் வித்திட்டவர் அப்பா தான். ++ பெருமை..

பள்ளிப்பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டவர் அப்பா.

-- நன்றாக யோசியுங்கள்...வெள்ளைக்காரனின் மொழியை இலக்கணப் பிழையின்றி பேசவும்,கற்றுத்தரவும் எந்த தயக்கமுமில்லை நமக்கு...
ஆனால் ஹிந்தியை எதிர்த்தோம் நாங்கள் என்பதில் வெற்றுப்பெருமை பேசுவதில் நிகரில்லை தமிழருக்கு..

ஹிந்தி தமிழை சாகடிக்கும் என்றால் ஆங்கிலம்?

கருணாநிதி தோண்டிய மிகப்பெரிய குழியில் சிக்கிய முட்டாள் தமிழர்கள் நாம்...

ஹிந்தியால் ஒரு போதும் தமிழை அழிக்க முடியாது...ஹிந்தியை எதிர்த்தவனெல்லாம் தமிழன் (கருணாநிதி) ஆகிவிட முடியாது...