Friday, January 1, 2010

2010 - ஆசீர்வாதங்களை எதிர்நோக்கி!

அதிகாலை 6.30 மணி! விருப்பமின்றி துயில் முறித்து மீண்டும் தூங்கினேன்! எனது அலைபேசி இனிதாய்ப் பாடியது "மலரே மௌனமா" என்று! அம்மா அழைக்கும் போது ஒலிக்கும் பாடல் இது தான். மாடியில் தூங்குவதால் அம்மா அலைபேசியில் அழைத்து எழுப்புவது தான் வழக்கம், மாடி ஏறி வந்தால் கால் வலி அதிகரிக்கும் என்பதால் மட்டுமல்ல, எனது தூக்கத்தை உடனடியாக கலைக்கும் வழி அதுதான் என்பதாலும். அதற்குள் மணி ஏழாகி விட்டதா என்ற கடுப்புடன் எழுந்த பொழுது தான் உணர்ந்தேன், இந்த புத்தாண்டு எனது வாழ்வில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றென்று! நள்ளிரவு வரை விழித்திருந்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களை சொல்லி முடிப்பதற்குள் எப்படியும் இரண்டு மணி ஆகிவிடும். இப்பொழுது பட்டியலில் புதியதாய்ச் சிலர் வேறு, அக்கா உட்பட! ஆனாலும், இம்முறை மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைத்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது! காலையில் பணிக்குச் செல்ல வேண்டும் என்பதால் தான் இந்த அவலம்!

விடுமுறை நாட்களிலும், ஞாயிறுகளிலும் skeletal staff இருந்தாக வேண்டும் எங்கள் அலுவலகத்தில். இரண்டரை ஆண்டு காலமாக இங்கு பணிபுரிந்தாலும் ஒரு முறை கூட நான் இதில் மாட்டிக் கொண்டதில்லை. இம்முறை ஆண்டின் துவக்கமே என் தலையில் தான் என்ற கசப்பான உண்மை எனக்குத் தெரிந்ததே நேற்று மாலை தான். இரண்டு சனிக்கிழமைகள் comp off கிடைக்கும் என்பதால் நானும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டுவிட்டேன்! ஆண்டின் முதல் நாளே அலுவலகத்தில் வந்து அமர்வது வரமா சாபமா என்று புரியும் முன்னமே அலுவலகத்தை வந்தடைந்தேன்!

அவ்வளவாக வேலைச் சுமை இல்லாமல் போனாலும், தனியே பணி புரிவது, அதுவும் பேசாமல் பணி புரிவது பகீரதத் தவம் போல் உள்ளது. நான் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை, நான் இருந்தும் அலுவலகம் அமைதியாக இருப்பது இன்று தான் முதல் முறை! இது கூட வரமா இல்லை சாபமா என்று புரியவில்லை.

மேலாளர் அலைபேசியில் அழைத்து, "Are you feeling bad for working on new year?" என்று வினவினார். "Definitely not sir" என்று பதிலளித்துவிட்டு அவர் கொடுத்த வேலையை முடிக்க முற்பட்ட போது, கணினி கோபித்துக் கொண்டு வேலை செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்தது. அதை ஒரு வழியாக சமாதானம் செய்து, வேலையைச் செய்து முடித்தேன். அப்பொழுதும் கூட புரியவில்லை இது வரமா இல்லை சாபமா என்று.

எனது நெருங்கிய தோழி அவளது திருச்சபையில் ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டுக்கான வேதாகம வசனத்தை எனக்காக எடுப்பது வழக்கம். காலையில் சாட்டில் வந்த போது எனக்கான வசனத்தை அனுப்பினாள். 2010 வரமா இல்லை சாபமா என்று அப்பொழுது தான் புரிந்தது!

இந்த ஆண்டு எனக்காக கொடுக்கப்பட வேதாகம வசனம்:
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகப் பண்ணுவேன்! ஆதியாகமம் 22:17

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

7 comments:

கார்க்கிபவா said...

கடைசி பாரா படித்துவிட்டேன்...

அதுசரி அப்பா அழைக்கும் போது என்ன ரிங்க்டோன்? பக்கத்து அறையில் இருக்கும்போதும் அலைபேசியல்தான் அழைப்பார்களா?

மற்ற சந்தேகங்கள் விரைவில்

அண்ணாமலையான் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

R.Gopi said...

Fantastic.........

Wish you and your family members a VERY HAPPY NEW YEAR 2010.

Feel free to visit here and read my New Year special postings...

சந்திரமுகி (ரீவைண்ட் 2005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம் http://jokkiri.blogspot.com/2009/12/2005.html 2009 – 2010 சிறப்புப் பார்வை – (பகுதி – 2) http://edakumadaku.blogspot.com/2009/12/2009-2010-2.html

அண்ணாமலையான் said...

rompa nandri....

பித்தனின் வாக்கு said...

நல்ல துவக்கம், நிறைய எழுதுங்கள். நன்றி.

அன்புடன் அருணா said...

belated wishes!

Thamira said...

ரொம்ப நாளு எழுதாம இருந்தா 'விரலி' வந்து விரலை உடைச்சுடுவா. தொடர்பதிவுக்கு அழைப்பு இருக்கிறது. அழைப்பை ஏற்கவும்.

http://www.aathi-thamira.com/2010/05/blog-post_12.html