Thursday, September 23, 2010

கார்க்கியின் பிறந்த நாள் கொண்டாட்டம்!

இன்று பிறந்த நாள் காணும் நமது பதிவுலக சூப்பர் ஹீரோ கார்க்கிக்கு உள்ளம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!

இணைய தளபதியின் பிறந்த நாள் நேற்று தானே என்று புருவம் உயர்த்தி யோசிப்பர்வகளுக்காக இந்த அறிவிப்பு. இத்தனை ஆண்டுகளாக, செப்டெம்பர் 23ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடி வந்த இவர், தற்பொழுது, வீட்டில் திருமணத்திற்காக ஜாதகத்தைப் புரட்டிய பொழுது தான் இவரின் உண்மையான பிறந்த தேதி செப்டெம்பர் 24 என்று தெரிய வந்துள்ளது. ஆக, இனி தனது பிறந்த நாளை செப்டெம்பர் 23ஆம் தேதியன்று அனைவருடனும் கொண்டாடிவிட்டு, உண்மையான பிறந்த நாளான செப்டெம்பர் 24ஆம் தேதியன்று தனது தோழியுடன் மட்டும் தனிமையில் கொண்டாட திட்டமிட்டுள்ளார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. எது எப்படியோ, நாம வாழ்த்திட்டு போய்டுவோம்.

இவ்வாண்டு இவரது "தோழி"யும் கூட பிறந்த தேதியில் ஏதோ குழப்பம் என்று, மறுநாள் தான் பிறந்த நாள் கொண்டாடினார் என்பது உங்கள் அனைவருக்கும் ஒரு extra scoope! :-)

Wednesday, August 4, 2010

புன்னகை பேசுகிறேன்...

நானே பாவமா என் பொழப்ப மட்டும் பார்த்துட்டு, உங்கள எல்லாம் தொல்லை பண்ணாம இருந்தேனா? இந்த சுசி அக்கா சும்மா இல்லாம, ஒரு தொடர் பதிவுக்கு இழுத்து விட்டுட்டாங்க! நாம எல்லாம் பெரியவங்கள மதிக்கத் தெரிந்தவங்க இல்லையா? வருவேன் வருவேன் கட்டாயம் வருவேன்னு அவங்களுக்கு வாக்கு வேறு குடுத்தாச்சு. அதான் பதிவெழுதலாம்னு திரும்ப வந்துட்டேன்! Start music!!! :-)

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
புன்னகை

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
"புன்னகை - விடை இல்லாக் கேள்விகளுக்கும் மௌனத்திலும் தரக் கூடிய ஆழமான பதில்!"
இது என்றோ ஒரு நாள் மனதில் தோன்றியது. எங்கும் உபயோகிக்க வாய்ப்பில்லாமல் போனதால், புன்னகை பதிவுலகில் எனது பெயரானது. (நாம எழுதுறது பாதிப் பேருக்குப் புரியாது, பாதி நமக்கே புரியாது. ஆக, புன்னகை, யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் மொழி என்று சொல்லி சமாளிக்க வசதியாக இருக்கும் என்பதாலும் இந்தப் பெயர்!) அப்பா, அம்மா வைத்த பெயர், அழகு என்று பொருள் கொண்ட, அழகான பெயர் - இரம்யா.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...
ஹி ஹி ஹி... பெரிய கதை, கொஞ்சம் குட்டியா சொல்லி முடிக்க முயற்சிக்கிறேன். எங்க ஊர் சாலைகள் மீது இருந்த கடுப்பில் ஏதோ ஒன்றை எழுதினேன். அதை நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொண்ட பொழுது, அவர் தான் பதிவு எழுதும்படி இப்படி தள்ளிவிட்டார்! (அப்போ ஆரம்பித்தது உங்க எல்லாருக்கும் ஏழரை!)

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ஒன்னுமே இல்லீங்க! (Basically, i dont like publicity!)

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
என்னுடைய அனைத்துப் பதிவுகளுமே, "சொந்தக் கதை சோகக் கதை" வகைகள் தான்! உண்மையச் சொல்லணும்னா, நான் ரொம்ப சுயநலவாதி. ஆக, என் உலகம் எப்பொழுதும் என்னையும் என்னைச் சார்ந்தவர்களைச் சுற்றி மட்டுமே சுழலும்! பின்விளைவுகள் ஏதும் பெரியதாக இருந்திருக்கவில்லை இதுவரை. (Touch wood!!!)

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பதிவுகளின் மூலம் சம்பாத்திக்க முடியும் என்பதே இந்தக் கேள்விக்குப் பின் தான் எனக்குத் தெரியும். (Green baby!) பொழுதுபோக்காக மட்டும் தான் இதுவரையிலும் எழுதி வந்துள்ளேன். பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வலையுலகம் பெரிதும் பயன்படுகின்றது.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்னே ஒன்னு தாங்க. (இதுக்கே கண்ண கட்டுதே!)

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
பதிவர்கள் மீது கோபம் எல்லாம் வந்ததில்ல... பொறாமை மட்டும் உண்டு. எந்த நேரமும் "புலம்பி"க் கொண்டே இருப்பவர் மீது தான் அத்தனை பொறாமையும்! இயல்பான எழுத்து நடை... படிக்கும் போது, ஏதோ நம்ம கண்ணு முன்னாடியே நடக்கிற மாதிரி ஒரு உணர்வு... அதெல்லாம் அவருடைய பதிவுகளில் நிறைய உண்டு என்பதால்!

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
பாராட்டு கிடைத்தது என்பதை விட, ஒரு நல்ல அண்ணன் கிடைத்தார் என்பதே உண்மை. என்னுடைய பதிவுகளில் பெரும்பாலும், முதல் பின்னூட்டம் இவருடையதாகத் தான் இருக்கும். ஏதோ, என்னைப் பாராட்டவே பிறவி எடுத்ததைப் போல் அவ்வளவு அன்பு! ஆனா, ஒருத்தர் மட்டும் தான், நல்லா இருந்தா நல்லா இருக்குன்னும், நல்லா இல்லைனா நல்ல இல்லைன்னும் உரிமையோடு சொல்லுவார். சில நேரங்களில் விமர்சனங்கள், விவாதங்களாகவும் மாறியதுண்டு தனி மடலிலும், தொலைபேசி அழைப்புகளிலும்.

10. கடைசியாக --- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
சொல்றதுக்கு பெருசா ஏதும் இப்போ இல்லை. திருமணம் பற்றிய செய்திகளை வரும் காலங்களில் பகிர்ந்து கொள்கிறேன். (பாவம் மனுஷன்!)

ஒரு வழியா முடிச்சாச்சு! இப்போ அடுத்தவங்களை வம்பில் இழுத்துவிடணும்ல? ஹி ஹி ஹி.... இதோ வந்துட்டேன், உங்க உயிரை எடுக்க...

ட்ரூத் (பழைய தொடர் பதிவே ஒன்னு இன்னும் தூங்கிட்டு இருக்கு)

ஆதி

கார்க்கி

ஒழுங்கா வந்து பதிவைத் தொடருங்க... இல்லைனா..... அவ்ளோ தான்...

Monday, May 24, 2010

எக்ஸாம் ஃபியர்? Not here!

ஒவ்வொரு கால கட்டத்திலும் தேர்வுகளை எப்படி எதிர்கொண்டோம் என்பதைப் பற்றி எழுத, இந்தத் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த ஆதி அவர்களுக்கு நன்றி! (இதுக்கு என்ன அர்த்தம்னா, எனக்கும் ஒரு காலம் வரும், அப்போ நான் உங்கள இப்படி பிரச்சனைல மாட்டிவிடுவேன்னு!). தேர்வுகள் குறித்த பயமோ, பதட்டமோ ஆரம்ப காலம் முதலே எனக்கிருந்ததில்லை. சிறுவயது முதலே படிப்பில் படுசுட்டி என்பதால் எல்லாரிடமும் நல்ல பெயர். Teachers' pet நான்! அப்பாவிற்கு கணிதமும், அம்மாவிற்கு ஆங்கிலமும் எட்டிக்காய். பாவம் அக்கா, இவை இரண்டுமே அவளுக்கும் தீராத சோகம் தரும் பாடங்கள். நானோ இரண்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவள். பள்ளிக்காலங்களில் அக்கா அப்பாவிடம் வாங்கும் திட்டுகளையும் அடிகளையும் பார்த்துப் பரிச்சயமானதால், எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க அம்மாவிடம் தான் தஞ்சமடைந்தேன்.

ஐந்தாம் வகுப்பு வரை அயன்புரத்தில் உள்ள ஒரு சிறிய பள்ளியில் தான் படித்தேன். அக்கா என்னை விட ஐந்து வயது மூத்தவள். நாங்கள் படித்த பள்ளி மேனிலைப் பள்ளியானதாலும், அக்கா +1 வேறு பள்ளியில் சேர வேண்டி இருந்ததாலும், என்னையும் வேறு பள்ளிக்கு மாற்றுவது என்று முடிவானது. அங்கு ஆரம்பித்தது பிரச்சனை. என்ன பிரச்சனையா? எனக்குப் பேருந்துப் பயணங்கள் என்றால் ஆகவே ஆகாது! புதுப் பள்ளியோ வேப்பேரியில். நாங்கள் வசித்ததோ அயன்புரத்தில். குறைந்தது 40 நிமிடப் பேருந்துப் பயணம்! என்னதான் school bus-இல் போகலாம் என்று அம்மா சமாதானம் செய்தாலும், "bus" என்ற வார்த்தையை நினைத்த பொழுதெல்லாம் எனக்கு வயிற்றைப் புரட்டியது! ஆக, பேருந்துப் பயணம் தான் நான் எதிர்கொண்ட மிகப் பெரிய பரீட்ச்சை!

முதல் நாள் புதுப்பள்ளிக்குப் போகும் போது எனது சாப்பாட்டுப் பையில் Poppins, ஒரு அம்ருதாஞ்சன் பாட்டில், பல வகையான புளிப்பு மிட்டாய்கள், எலுமிச்சை இன்னும் என்னவெல்லாம் வாந்தியைத் தவிர்க்கும் என்று அம்மா அறிந்திருந்தார்களோ அவை அனைத்தும்! எனக்கே என்னைப் பார்க்க பாவமாக இருக்கும். School bus-இல் வரும் ஒரு ஆசிரியையிடம் என் நிலை விளக்கப்பட்டு ஜன்னலருகே ஒரு இருக்கை எனக்கென ஒதுக்கப்பட்டது. "Rome was not built in a day" என்பதைப்போல், எனதிந்த அவல நிலை மாற குறைந்தது ஈராண்டுகள் எடுத்தது. எப்படி எப்பொழுது என்றெல்லாம் நினைவில்லை. ஆனால் அந்த மாற்றம் என்னுள் நிகழ்ந்தது மட்டும் உறுதி. அக்கா தனது பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்ந்தாள். அதுவரை அவளின் துணையை நம்பியே இருந்த நான் தனியே பயணிக்க வேண்டிய கட்டாயம். அந்த நிர்பந்தத்தில் ஏற்பட்ட மன உறுதி தான் இன்னமும் எனது பயணங்களுக்கு ஆதாரம்! என்னால் இப்பொழுதெல்லாம் மணிக்கணக்கில் பேருந்தில் பயணிக்க முடியும்.

பள்ளிக்குப் போகும் போதும் வரும் போதும் தூங்கிக் கொண்டே இருந்தாலும் இந்தப் பள்ளியிலும் படிப்பில் மட்டும் தூங்கவில்லை. வழக்கம் போல் எனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு எனது பேச்சுத் திறமையை வளர்த்துக் கொண்டேன். எட்டாம் வகுப்பு வரை வகுப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தேன். அதன் பிறகு நட்பு வட்டாரம் விரிய, படிப்பில் இருந்த கவனம் சரிந்தது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் நான் மாநில அளவில் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றெல்லாம் அம்மா கனவுகளில் மிதக்க, நானோ 465 மதிப்பெண்களுடன் (93 விழுக்காடு) பள்ளி அளவிலேயே இரண்டாம் மாணவியாகத் தான் வந்தேன். கணக்கில் மட்டும் 100 மதிப்பெண்கள் வாங்கியதில் அம்மா கொஞ்சம் ஆறுதல் அடைந்தார்கள்.

பனிரெண்டாம் வகுப்பில் Maths, Physics, Chemistry & Computer Science பிரிவினை தேர்வு செய்தேன். அந்த ஆண்டின் பள்ளியின் School Pupil Leader-ஆக நான் அறிவிக்கப்பட படிப்பில் இருந்த நாட்டம் சற்று குறைந்தது என்பதே உண்மை. என்னுடைய பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடந்த பொழுது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் வேறு! இந்தியா இறுதிப் போட்டியில் கோட்டைவிட, அன்றிரவு முழுதும் அழுது வடிந்ததில், அடுத்த நாள் கணிப்பொறித் தேர்வில் நான் சொதப்பியது இன்னமும் நினைவைவிட்டு நீங்கவில்லை. காரணம், கணிதத்திலும் வேதியலிலும் ஈடுபாடு இல்லாமல் போனாலும், கணிப்பொறி பாடத்தில் எப்பொழுதும் முதல் மூன்று இடங்களை விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால், பொதுத் தேர்வில் வெறும் 156 மட்டுமே கணிப்பொறி பாடத்தில் வாங்கினேன். மொத்தத்தில் 951 மதிப்பெண்களே பெற்றேன்.

வேறு வழியின்றி ஸ்டெல்லா மாரிஸில் B.A History-இல் சேர்ந்தேன். Vocational பாடமாக Tourism இருந்ததால் நல்ல scope உள்ளது என்று அனைவரும் சொல்ல, எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கையுடன் இருந்தேன். என்னைப் பொறுத்த வரை, வரலாற்றுப் பாடங்கள் மிகவும் சுவாரசியமானவை. கற்பிப்பவர் மட்டும் விஷயம் தெரிந்தவராக இருந்தால், உங்களை அந்த காலத்திற்கே அழைத்துச் சென்று விளக்குவது போல இருக்கும். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் எனக்குக் கிடைத்தனர் என்பது எனது பாக்கியம்! வழக்கம் போல் எனது படிப்பின் மீது எனது நாட்டம் பெருக, அந்த ஆண்டின் Proficiency prize எனக்குச் சொந்தமானது!

கல்லூரி நாட்களின் தேர்வுகளை நினைக்கும் போது, கிரண் தானாகவே என் நினைவுக்கு வருகிறாள். கிரண் - எனது NRI தோழி. "Work hard, party harder" அவளது தாரக மந்திரம். ஒவ்வொரு தேர்வின் பொழுதும் படிக்காமல் வர அவளுக்கென்று ஒரு காரணம் இருக்கும். "It was Nikhil's bday last nite & I had to go. I reached home late in the nite & I din read ANYTHIN" என்று அவள் கொஞ்சிப் பேசும் போது யாருக்கும் பாவமாகத் தான் இருக்கும். எக்ஸாம் ஹாலின் வெளியே என்னை இழுத்து நிறுத்தி வைத்து, "Tel me somethin, tel me somethin" என்று அவசரப்படுத்துவாள். நான் முந்தைய இரவு முழுக்க கண் விழித்து படித்த எல்லாவற்றையும் ஒரு கதை போல் சொல்ல, "Go ahead, go ahead" என்று தலையாட்டி கேட்டுக் கொண்டு விட்டு "All de best babes" என்று கண்ணடித்து விட்டுச் செல்வாள். ஆனால் மதிப்பெண்கள் வழங்கப்படும் போது கண்டிப்பாக முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று விடுவாள். காரணம், என்ன தான் அரட்டை ஆர்ப்பாட்டம் என்று நாங்கள் இருந்தாலும், வகுப்பில் கொஞ்சம் கூட கவனம் சிதறியதில்லை.

தேர்வுகள் என்னைப் பெரிதாக பாதிக்காமல் போனாலும், அதையொட்டி வருங்காலம் குறித்து நான் எடுக்க வேண்டிய முடிவுகளில் மூலம் என்னை ஓரளவுக்கு அவை நெறிப்படுத்தியுள்ளன என்பதே உண்மை. எல்லா காலங்களிலும் என்னை நெறிப்படுத்திய விஷயம், எனது பெற்றோர் எனக்களித்துள்ள சுதந்திரம்! நான் எடுக்கும் முடிவுகள் தெளிவானதாக இருக்கும் என்று அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான் இன்னமும் நான் ஒவ்வொரு முறை முடிவெடுக்கும் பொழுதும் என்னை இன்னமும் சிந்தித்து முடிவெடுக்க வைக்கின்றன. வாழ்க்கை குறித்த ஒரே விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால், எந்த விதமான தேர்வுகளையும், எளிதில் எதிர்கொள்ளலாம்! அது,

Whatever blunder u make, the sky would not fall on your head! :-)

அடுத்த படியாக தலைவர் ட்ரூத் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

Friday, January 1, 2010

2010 - ஆசீர்வாதங்களை எதிர்நோக்கி!

அதிகாலை 6.30 மணி! விருப்பமின்றி துயில் முறித்து மீண்டும் தூங்கினேன்! எனது அலைபேசி இனிதாய்ப் பாடியது "மலரே மௌனமா" என்று! அம்மா அழைக்கும் போது ஒலிக்கும் பாடல் இது தான். மாடியில் தூங்குவதால் அம்மா அலைபேசியில் அழைத்து எழுப்புவது தான் வழக்கம், மாடி ஏறி வந்தால் கால் வலி அதிகரிக்கும் என்பதால் மட்டுமல்ல, எனது தூக்கத்தை உடனடியாக கலைக்கும் வழி அதுதான் என்பதாலும். அதற்குள் மணி ஏழாகி விட்டதா என்ற கடுப்புடன் எழுந்த பொழுது தான் உணர்ந்தேன், இந்த புத்தாண்டு எனது வாழ்வில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றென்று! நள்ளிரவு வரை விழித்திருந்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களை சொல்லி முடிப்பதற்குள் எப்படியும் இரண்டு மணி ஆகிவிடும். இப்பொழுது பட்டியலில் புதியதாய்ச் சிலர் வேறு, அக்கா உட்பட! ஆனாலும், இம்முறை மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைத்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது! காலையில் பணிக்குச் செல்ல வேண்டும் என்பதால் தான் இந்த அவலம்!

விடுமுறை நாட்களிலும், ஞாயிறுகளிலும் skeletal staff இருந்தாக வேண்டும் எங்கள் அலுவலகத்தில். இரண்டரை ஆண்டு காலமாக இங்கு பணிபுரிந்தாலும் ஒரு முறை கூட நான் இதில் மாட்டிக் கொண்டதில்லை. இம்முறை ஆண்டின் துவக்கமே என் தலையில் தான் என்ற கசப்பான உண்மை எனக்குத் தெரிந்ததே நேற்று மாலை தான். இரண்டு சனிக்கிழமைகள் comp off கிடைக்கும் என்பதால் நானும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டுவிட்டேன்! ஆண்டின் முதல் நாளே அலுவலகத்தில் வந்து அமர்வது வரமா சாபமா என்று புரியும் முன்னமே அலுவலகத்தை வந்தடைந்தேன்!

அவ்வளவாக வேலைச் சுமை இல்லாமல் போனாலும், தனியே பணி புரிவது, அதுவும் பேசாமல் பணி புரிவது பகீரதத் தவம் போல் உள்ளது. நான் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை, நான் இருந்தும் அலுவலகம் அமைதியாக இருப்பது இன்று தான் முதல் முறை! இது கூட வரமா இல்லை சாபமா என்று புரியவில்லை.

மேலாளர் அலைபேசியில் அழைத்து, "Are you feeling bad for working on new year?" என்று வினவினார். "Definitely not sir" என்று பதிலளித்துவிட்டு அவர் கொடுத்த வேலையை முடிக்க முற்பட்ட போது, கணினி கோபித்துக் கொண்டு வேலை செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்தது. அதை ஒரு வழியாக சமாதானம் செய்து, வேலையைச் செய்து முடித்தேன். அப்பொழுதும் கூட புரியவில்லை இது வரமா இல்லை சாபமா என்று.

எனது நெருங்கிய தோழி அவளது திருச்சபையில் ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டுக்கான வேதாகம வசனத்தை எனக்காக எடுப்பது வழக்கம். காலையில் சாட்டில் வந்த போது எனக்கான வசனத்தை அனுப்பினாள். 2010 வரமா இல்லை சாபமா என்று அப்பொழுது தான் புரிந்தது!

இந்த ஆண்டு எனக்காக கொடுக்கப்பட வேதாகம வசனம்:
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகப் பண்ணுவேன்! ஆதியாகமம் 22:17

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!