Friday, February 6, 2009

இந்தக் காதல் படும் பாடு

பிப்ரவரி மாதம் வந்தாலே ஏதோ விழாக்கோலம் பூண்டது போல் மாறிவிடுகிறது நம் சென்னை. எந்த திசையில் திரும்பினாலும், பரிசுப் பொருட்கள் விற்கப்படும் கடைகள், வாழ்த்து அட்டைக் கடைகள் எல்லாம் நிரம்பி வழியத் தொடங்கிவிடும். உலகமே காதலர் தினத்தைக் கொண்டாட ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க, நாம் மட்டும் எதற்கு விதிவிலக்கு என்று எல்லோரும் மிகவும் விறுவிறுப்புடன் இயங்குவது மிகவும் இயல்பான ஒன்றாகிவிட்டது இப்போதெல்லாம். யார் கண்டது? காலப் போக்கில் காதலர் தினத்தை "அரசு விடுமுறை நாட்கள்" பட்டியலில் சேர்க்கச் சொல்லி ஒரு போராட்டம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.

பள்ளியில் பயின்ற காலத்தில் "இந்தக் காதலர் தினத்திற்கு எதற்கு இத்தனை ஆரவாரம்" என்று பலமுறை மனதிற்குள் முனங்கியதும் உண்டு. "பொறாமையில் பொங்குகிறாள்" என்று ஒரு முறை யாரோ சொல்ல, "நான் ஏன் பொறாமைப்படணும்" என்ற கேள்விக்கு இன்னமும் கூட விடை கிடைக்காமல் தான் இருக்கிறேன். வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் அன்பை வெளிப்படுதினால் போதுமா என்று பிள்ளைப்பருவம் முதல் இன்றுவரை எனக்குள் இன்னமும் ஒரு சந்தேகம்.

கல்லூரியில் சேர்ந்த பிறகு, "proud to be single" என்று சொல்லிக் கொள்வதில் உண்மையாகவே பெருமையாகத் தான் இருந்தது. "அங்க போகாத", "வெளியில தேவை இல்லாம சுத்தாத", "என் கூடவே இரு" என்று தேவையற்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல், கல்லூரி வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாகவே அனுபவித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் காதலர் தினத்தன்று கொண்டாட்டம் கலை கட்டும் எங்கள் நட்பு வட்டாரத்தில். எங்கள் தோழி ஒருத்தியின் பிறந்த நாள் அன்று தான் என்பதால், நாங்களும் கூட "celebration mood"-இல் தான் இருப்போம்.

இப்படி எல்லாம் பேசுவதால் நான் காதலுக்கு எதிரியோ, அல்லது காதல் மீது எனக்கு வெறுப்போ எல்லாம் இல்லை. வாழ்வில் ஒரு முறையாகிலும் தாஜ் மகாலைக் கண்டே தீர வேண்டும் என்று ஏங்கிக் கிடந்தவள் நான். கல்லூரி இறுதி ஆண்டில் அந்தக் காதல் சின்னத்தை நேரில் பார்த்த போது நான் வடித்த ஆனந்தக் கண்ணீரை இன்னமும் கூட நினைவில் வைத்துள்ளனர் என்னுடன் படித்தவர்களில் பெரும்பாலானோர். பிறகு ஏன் இத்தனை வெறுப்பு காதலர் தினக் கொண்டாட்டங்களின் மீது என்பதற்கு என்னுடைய பதில் மிகவும் எளிமையான ஒன்று தான்.

முதலில் கூறியதைப் போல், வாழ்வின் மொத்த காதலையும் ஒரே நாளில் வெளிப்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒரு விஷயம். என்னைப் பொறுத்த வரையில் காதல் என்பது நம் வாழ்வோடு இரண்டறக் கலந்த ஒன்றாய் இருக்க வேண்டும். வருடத்திற்கு ஒரே ஒருமுறை தான் நாங்கள் பரஸ்பரம் காதலிக்கிறோம் என்று வாழ்பவர்களுக்கு வேண்டுமானால் இந்த ஒரு நாள் ஆரவாரம் சரிவரும். விடலைப் பருவத்தில் ஏற்படுகின்ற ஹார்மோன் கோளாறுகளைக் காதல் என்று சொல்லித்திரியும் பள்ளிச் சிறுவர்களைக் காணும் போது, தலையில் "நறுக்"கென்று ஒரு குட்டு வைத்து, "படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா?" என்று கேட்க வேண்டும் என்றிருக்கும் எனக்கு. எதிர் பாலினம் மீது ஏற்படுகின்ற ஒரு விதமான ஈர்ப்பினைக் "காதல்" என்று கொச்சைப்படுத்தி அலையும் இளைஞர் வட்டத்தைப் பார்க்கும் போதே அருவருப்பாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

காதலர் தினம் என்பது புதியதாய் காதலிப்பவர்களுக்கோ அல்லது "புரியாமல்" காதலிப்பவர்களுக்கோ ஒரு முக்கியமான தினமாக இருக்கட்டும். காதலை நேசிப்பவர்களுக்கும், காதலை, காதலாய்க் காதலித்து வாழ்பவர்களுக்கும் எல்லா தினமும் காதலர் தினம் தான். காதல் மிகவும் புனிதமான ஒன்று. அதன் புனிதத்தைப் போற்ற முடியாமல் போனாலும், அதை சிதைக்காமலாகிலும் பார்த்துக் கொள்வோம், காதலுக்கும் கூட கற்புண்டு என்பதால்.


8 comments:

katz said...

how a big flash, from tiny planet, i am so exited from your blog, i wish you a sucess love life

புன்னகை said...

@Manu,
நீங்கள் சொல்லும் அந்த "குறிப்பிட்ட மக்கள்" முதலில் காதலை ஒழுங்காகப் புரிந்து கொண்டாலே போதும், பிரச்சனை ஏதும் இருக்காது. நானும் காதல் வசப்பட்டுவிட்டேனா என்ற உங்களது கேள்விக்கு "புன்னகை" மட்டுமே என் பதில், காரணம் இதுவும் "ஒரு விடையில்லாக் கேள்வி" என்பதால். :-)

புன்னகை said...

@Katz,
//i wish you a sucess love life//
யாரும் ஏமாந்து போனவங்க இருந்தா பாக்காலாம் :-)

கார்க்கிபவா said...

/உங்களது கேள்விக்கு "புன்னகை" மட்டுமே என் பதில், காரணம் இதுவும் "ஒரு விடையில்லாக் கேள்வி" என்பதால்///

ரைட்.. ரைட்..

யாரந்த அதிர்ஷ்டசாலி?

புன்னகை said...

@கார்க்கி,
//யாரந்த அதிர்ஷ்டசாலி?//
உங்களுக்கும் கூட என்னுடைய பதில் ஒரு "புன்னகை" தான்! :-)

Rajalakshmi Pakkirisamy said...

:) :) nice )

புன்னகை said...

@இராஜலெட்சுமி பக்கிரிசாமி,
நன்றி :-)

vinthaimanithan said...

பெரியாரோட "பெண் ஏன் அடிமையானாள்?" படிங்க... அப்புறம் அவர் காதல் பத்திகூட எழுதியிருக்காரு... மறக்காம அதையும் படிங்க