அவள்
"நீரின்றி அமையாது உலகு" போல், "பேச்சின்றி அமையாது வாழ்வு" என்று வாயோயாமல் பேசுபவள் அவள். திங்கட்கிழமை காலையிலும் கூட உற்சாகத்தோடு இயங்கும் புத்துணர்ச்சிச் சிட்டெறும்பு அவள். 'நம் எண்ணங்களே நம் வாழ்விற்கு வழிவகுக்கும்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டவள். எத்தனைக் காதுகளில் இரத்தம் வழிந்தாலும், குளியலறையில் பாடுவதைத் தன் பிறப்புரிமையாகக் கொண்டவள். 'கட்டுப்பாடு' அவளுக்குப் பிரதான எதிரி! அடிமைக் கோலம் பிடிக்காத பட்டாம்பூச்சி. 'காதலாய்க் கசிந்துருகிட வேண்டும்' என்று தனக்கென்று ஒருவனைத் தேடும் வயது அவளுக்கு. சுருக்கமாக, அவள் "கனாக்களின் காதலி".
அவன்
தேவையற்ற செலவுகள் ஏதும் செய்யத் தெரியாதவன் அவன், வார்த்தைகள் உட்பட. மரத்தைச் சுற்றி வந்து, கவிதை வரிகள் பேசி, காதலிப்பதில் உடன்பாடில்லை அவனுக்கு. மணம் முடிக்கும் மங்கையைக் காலப்போக்கில் காதலிப்பதே சுவாரசியாமாகத் தோன்றியது அவனுக்கு. எதிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்பது அவனது எழுதாச் சட்டம். இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்வு, சலிப்பைத் தந்து விடும் என்பதை நன்குணர்ந்தவன். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் மிகுந்தவன். நாளைய பொழுது நன்றாய் விடிய வேண்டுமே என்று புலம்புவோர் மத்தியில், நாளையை பொழுது நன்றாய் விடிய வேண்டுவனவற்றை ஆராய்பவன். மொத்தத்தில், அவன் ஒரு "யதார்த்தவாதி".
அது
அவளுக்கும் அவனுக்கும் இடையே எதிர்பாராவிதமாய் அறிமுகம் ஏற்பட்டு, அந்த அறிமுகம் நட்பாக வளர்ந்தது. இருவருமே நினைத்தும் கூட பார்க்காத விதத்தில், குறுகிய காலகட்டத்திலேயே நட்பு வலுவடைந்து விருட்சமானது. அவளின் வருகையால் அவனது வாழ்வின் 'யதார்த்தம்' சற்று நிலை தடுமாறியது என்பது மறுக்க முடியாத உண்மை. அவனின் அறிமுகம் கிடைத்த நாள் முதல், அவள் கனவுலகிலிருந்து கொஞ்சம் விலகி, இயல்பு நிலையில் வாழத் துவங்கினாள் என்பது மற்றொரு உண்மை. இப்படி, காலப்போக்கில் ஒருவரது குணாதிசயங்கள் மற்றவரைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், ஆட்கொள்ளவும் செய்தது.
ஓர் ஆணும் பெண்ணும் வெறும் நட்பு ரீதியில் மட்டுமே நெருங்கிப் பழக முடியும் என்ற சாத்தியக்கூறு, நமது சமூகத்தில் நடைமுறை வாழ்விற்கு ஒவ்வாத ஒன்றாக இருந்து வருகின்றது. பரஸ்பரம் நட்பு மட்டுமே கொண்டு காலத்திற்கும் ஆண் - பெண் உறவு தொடரலாம் என்பதை ஏற்றுக் கொள்ள சமுதாயமும் சரி, தனி மனித மனமும் சரி, இன்னும் அத்தனை பக்குவம் அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இத்தகைய 'சமூகக் கோட்பாடுகளில்' வேரூன்றி வளர்க்கப்பட்டவள் அவள் என்பதால், அவர்களுக்கிடையே மலர்ந்த நட்பினை வெறும் நட்பாக மட்டும் கருத முடியவில்லை அவளால்.
மனிதனின் பரிணாம வளர்ச்சியின் முக்கியக் கட்டமாக, காதல் மலர்வதைக் கண்டவள் அவளென்பதால், காதல் தவறென்று ஒதுக்க முடியவில்லை அவளால். நட்பிற்கும் காதலுக்கும் இடையே இருக்கும் மெல்லிய வித்தியாசத்தைக் கருத்தில் கொண்டு, பூதக்கண்ணாடி வைத்துத் தேடியும் அவர்கள் உறவில் அந்த மயிரிழை வித்தியாசம் அகப்படாமல் போக, காதல் மலர்ந்ததை உறுதி செய்து கொண்டாள். பூனைக்கு மணி கட்ட யாரும் தேவை என்று தயக்கம் கொள்ளாமல், தனது கைபேசியில் அவனது எண்ணைச் சுழற்றி, தன் மனதில் நீங்காது சுழன்று கொண்டிருந்த அவனது நினைவுகளைச் சொன்னாள்.
தன்னை மட்டுமே குறிவைத்துப் படையெடுப்பு நடத்திய பட்டாம்பூச்சிக் கூட்டம், அவனையும் போர் முனையில் நிறுத்தியதா என்ற கேள்வியும், நிறுத்தியிருக்க வேண்டுமே என்ற ஏக்கமும் அவளுள் படபடப்பை ஏற்படுத்தினாலும், அவளது வார்த்தைகள் மட்டும் பல்லாயிரம் மைல்களைக் கடந்தும் அவனைச் சரிவரச் சென்றடைந்தன. அவன் இயற்பியல் படித்தவன் என்பதால் தெய்வாதீனமாக அங்கு 'நியூட்டனின் மூன்றாம் விதி" வெளிப்பட்டது. மனதின் பெரும்பாரம் இறக்கி வைக்கப்பட்ட நிலையில், நிம்மதிப் பெருமூச்சு அவனிடம். காதலுக்காக நட்பையிழக்க விழையாதிருந்தவனுக்கு, அந்த நட்பே உவந்தளித்த பரிசாய், அங்கு காதல் கனிந்தது. முன்னுக்குப் பின் முரணான குணாதிசயங்கள் கொண்டவர்களாய் அவ்விருவரும் இருந்த போதும், அது அவர்களை இணைத்தது.
Monday, April 6, 2009
Subscribe to:
Posts (Atom)